Spread the love
கனடா மூர்த்தி
திரைஅலசல் | 'சினம் கொள்' 1

சினம் கொள்’ திரைப்படம் ரொறன்ரோவில் யோர்க் சினிமாவில் வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்கள் திரையிடுகிறார்கள் என்று கேள்விப்பட்டு ஓடிப்போய் வெள்ளிக்கிழமையே பார்த்தாயிற்று. என்னோடு திரைப்படத்திற்கு வந்த மூன்று நண்பர்களுள் ஒருவர் விடுதலைப்புலிகளின் கடும் விமர்சகர், மற்றவர் விடுதலைப்புலிகள் குறித்து சமரசக் கருத்துக்களைக் கொண்டவர், மூன்றாமவர் விடுதலைப்புலிகளை ஆதரவு நெஞ்சினர். இந்த மூவருக்குமே படம் மிகவும் பிடித்திருந்தது என்பதுதான் இத்திரைப்படத்தின் பெரும் வெற்றி. (ஒருவர் கண் கலங்கினார்.) 

அதுசரி.. படம் எப்படி? 

ஈழப்போராட்டம் தரும் ஆதங்கத்தை முன்னிறுத்திய கதையும், தமிழகத்து சினிமாத் தொழில்நுட்பமும் இணைந்து காணப்பட்டமை ‘சினம் கொள்’ படத்தினை உண்மையாகவே ரசிக்க வைத்தது.

திரைஅலசல் | 'சினம் கொள்' 2

ஸ்ரீலங்கா சிறையிலிருந்து விடுதலையான போராளி ஒருவன் முள்ளிவாய்க்கால் அவலத்தில் தொலைந்துபோன தனது கர்ப்பிணி மனைவியைத் தேடுவதாக மெதுவாக ஆரம்பிக்கிறது படம். கடைசியில் சினம் கொள் எனச் சொல்லும் திருப்பம். ‘புதிய ஈழத்திரை’ என சொல்லத்தக்க விதமாக வித்தியாசமான கதைசொல்முறைமையோடு படத்தின் முதல்பாதியும், இரண்டாம் பாதி ஏனோ தமிழகத் திரைப்படம்போலவும் இருந்தது.

இலங்கையிலேயே முழுப் படப்பிடிப்பினையும் நடத்தியிருக்கிறார்கள். ஈழநிலத்தின் சில அழகிய காட்சிகள் கவனமாக எடுக்கப்பட்டிருந்தன. (தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவுடன் மைத்திரியின் நல்லாட்சி அரசாங்கம் இலங்கையில் வராமல் போயிருந்தால் இந்த திரைப்படத்தை இப்படி அங்கு எடுத்திருக்க முடியாது. அவர்களுக்கும் டைட்டிலில் நன்றி சொல்லியிருக்கலாமோ?)

திரைஅலசல் | 'சினம் கொள்' 3
‘சினம் கொள்’ இயக்குனர் ரஞித் ஜோசப்

பொறிக்குள் மாட்டாமலும், அதே சமயம் தமிழர்கள் எதிர்பார்க்கும் பொறிமுறைகளை வேண்டி நிற்பதாகவும் படத்தின் ஸ்க்ரிப்ட் கவனமாக உருவாக்கப்பட்டிருந்தது. புலம்பெயர்ந்த தமிழர்கள் தயாரித்தளித்த பல படங்கள்போல அலுப்பு, ஆயாசம் தராமல், உண்மையாகவே ரசித்துப் பார்க்கக்கூடிய விதமாக படம் ஒடியது. எந்தவித மசாலாக்களும் இல்லாத ஒரு நல்விருந்தாகவே அதை நாம் ரசித்தோம். ரஞ்சித் ஜோசப் பாராட்டப்பட வேண்டிய இயக்குனர்.

அதுமட்டுமல்ல படத்தில் நடித்த அனைவருமே மிகச் சிறப்பாக, இயல்பாக – ஈழத்தமிழர் சார்ந்ததொரு திரைப்படத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் – நடித்திருக்கிறார்கள். (குறிப்பாக யாழினி பாத்திரம்.) பல இடங்களில், ‘எத்தனை திறமையான நடிகரகள் நம்முள் மறைந்திருக்கிறார்கள்’ என்றுதான் என் கணகள் பனித்தன. இதையும் இயக்குனருக்கான பாராட்டாகவே கணிக்க வேண்டும்.

மொத்தத்தில், ‘விருதுகளைக் குறிவைத்த கலைப்படமாகவும் இல்லாமல், அதேசமயம் வியாபாரப்படமாகவும் இல்லாமல் இருப்பது இப்படத்தின் பலம் அல்ல. அதுதான் பலவீனம்’ என்றுதான் படுகிறது.

இத்திரைப்படத்தின் நிறைகளை மட்டும் சிறப்புறச் சொல்ல ஒரு தனிக் கட்டுரையும், படத்தில் ஏற்க முடியாதவற்றறை பிரித்துச் சொல்ல இன்னொரு தனிக்கட்டுரையும் எழுதலாம். இரண்டையும் ஒரே கட்டுரையில் செய்தல் நடுநிலை விமர்சனம் அல்ல. அஃது இப்பேர்ப்பட்ட படத்திற்கு செய்யும் துரோகம். அந்த அளவிற்கு சினம்கொள் இருக்கிறது. ஈழத்தமிழ் சினிமா ஆர்வலர்கள் தவிர்க்க முடியாத திரைப்படம் ‘சினம் கொள்’ .

சனம் கொள் என ஓட வேண்டிய திரைப்படம் இது. பார்க்காதவர்கள் தயவு செய்து பாருங்கள். முற்போக்கு, கலை, இலக்கியம், உலக சினிமா என நம்மிடையே உடான்ஸ் விட்டுக் கொண்டும், பைத்தியம் பிடித்ததுபோல தமிழக சினிமாவைத் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டிருக்கும் எங்கட சனங்கள் சில திரையரங்கிற்கு சென்று இத்திரைப்படத்ததை பார்க்க வேண்டும். தவறினால் அவர்கள் மீதும் சினம் கொள் தமிழா..

Print Friendly, PDF & Email