திருவள்ளுவருக்குக் காவி உடுத்தும் பா.ஜ.க. - திராவிடக் கட்சிகள் போர்க்கொடி! -

திருவள்ளுவருக்குக் காவி உடுத்தும் பா.ஜ.க. – திராவிடக் கட்சிகள் போர்க்கொடி!

திருக்குறள் படித்து திருந்துங்கள்! திருவள்ளுவர் விவகாரத்தில் பா.ஜ.கவைக் கண்டிக்கும் மு.க.ஸ்டாலின்
திருவள்ளுவர் காவி உடையில் இருப்பதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்ட பா.ஜ.கவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் மாநிலங்களை மொழி வழி மாநிலங்களாகப் பிரித்த நவம்பர் 1ம் திகதியை நினைவுகொள்ளுமுகமாகவும், தாய்லாந்தில் பிரதமர் மோடி திருக்குறளை அந்நாட்டின் மொழியில் வெளியிட்டுவைத்ததைக் கொண்டாடுமுகமாகவும் தமிழ்நாட்டின் பா.ஜ.க. பிரிவு காவி உடுத்த, திருநீற்றுப் பூச்சுடனான திருவள்ளுவர் படமொன்றை ருவீட் செய்திருந்தனர். அத்தோடு “இறை நம்பிக்கை உள்ளவர்களைப் பழிப்பவர்களுக்கு அவர்கள் கற்ற கல்வியால் என்ன பயன்” என்ற கேள்வியையும் பா.ஜ.க. எழுப்பியுள்ளது. இது தமிழ்நாட்டின் திராவிடக் கட்சிகளைப் பெரும் கோபத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

திருவள்ளுவர் தொடர்பான தமிழக அரசின் அதிகாரபூர்வ படத்தில் மதரீதியான அடையாளம் எதுவும் இருப்பதில்லை.

“அந்த குறளைக் கற்று திராவிடர் கழகமும், தி.மு.கவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுகளும் தெளியவேண்டும்” என்றும் பா.ஜ.க. அதில் குறிப்பிட்டிருந்ததது. இதனிடையே காவி உடை அணிந்திருந்த திருவள்ளுவருக்கு வெள்ளை உடை அணிவித்தது தி.மு.க தான் எனவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இந்தநிலையில், திருவள்ளுவரை காவி உடையில் பதிவிட்ட பா.ஜ.கவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில், ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்! எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்!’ என்று குறிப்பிடுள்ளார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில், “திருக்குறளில் ஒரு குறளையாவது பிழையின்றி ஒப்புவிக்க வேண்டும் அல்லாது போனால் அரசியலிலிருந்து ஸ்டாலின் ஒதுங்கிக்கொள்ள வேண்டும்” என பா.ஜ.க. அணி கூறியிருக்கிறது.

“திருவள்ளுவரைத் தமது அரசியல் லாபங்களுக்காக முன்னெப்போதும் எவரும் கைவசப்படுத்தியதில்லை” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது.

பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா , “உண்மையான திருவள்ளுவர் வீபூதியையும் வேறு பல இந்து அடையாளங்களையும் அணிந்துவந்த ஒருவர் எனவும் திராவிடர்கள் தான் தமது அரசியல் லாபங்களுக்காக அவரது தோற்றத்தை மாற்றியமைத்துக் கொண்டார்கள். திருவள்ளுவரின் குறள் ஒன்றில் கூறும் ‘தொழில் என்பது ஒருவரின் பிறப்பால் வருவதில்லை’ என்பதை பகவத் கீதையில் கிருஷ்ணரும் கூறியிருக்கிறார். திருவள்ளுவரின் தத்துவங்கள் சனாதன தர்மத்துடன் உடன்படுகின்றன” எனக் கூறினார்.

திருவள்ளுவரது ஆடையைக் கழைந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று எவரும் இதுவரை சொல்லவில்லை என்பது ஆறுதல் தரும் செய்தி.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
error

Enjoy this blog? Please spread the word :)