NewsSri Lanka

திருமலை சண்முகா இந்துமகளிர் கல்லூரி விவகாரம்: நடந்தது என்ன?

நேற்று, பெப்ரவரி 2, திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் பணியை மீளவும் ஆரபிக்கச் சென்ற ஒரு முஸ்லிம் ஆசிரியை அபாயா எனப்படும் முஸ்லிம் ஆடையுடன் சென்றதற்காய் தாக்கப்பட்டதாகவும் அதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது வாக்குமூலமடங்கிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பல்வேறு வகைகளிலும் இனங்களிடையே முரண்பாடுகளைத் தோறுவிக்கும் வகையில் இவ்விவகாரம் பேசுபொருளாக வந்துள்ள வேளையில், பல அரசியல்வாதிகளும் இவ்விடயத்தில் தத்தமது நிலைப்பாடுகளைத் தெரிவித்து வருகிறார்கள். எனவே இவ்விவகாரம் பற்றிய பின்னணி இங்கு தரப்படுகிறது.

இவ்விவகாரம் ஏப்ரல் 22, 2018 இல் ஆரம்பித்தது எனக் கூறப்படுகிறது. அப்போது இப் பாடசாலையில் ஏற்கெனவே கற்பித்து வந்த நான்கு ஆசிரியைகள் தாம் முஸ்லிம்கள் அணியும் அபாயா (முகம் / தலைக் கவசம்) அணிவதற்கு பாடசாலை நிர்வாகம் அனுமதிக்கவில்லை எனக்கூறி முறைப்பாடொன்றை மேற்கொண்டார்கள். திருமதி எஸ்.எம்.எஃப். ஃபாத்திமா ஃபஹ்மிதா, திருமதி சாஜனா பாபு மொஹமெட் ஃபைசால், திருமதி சைஃபீனா மொஹாமெட் சஃபீஸ், செல்வி ஆர்.ரோஷான் ஆகிய இந் நால்வரும் முறையே 2013, 2014, 2016, 2018 ஆண்டுகளிலிருந்து இக் கல்லூரியில் கற்பித்து வருகிறார்கள். இதுவரை காலமும் அவர்கள் அனைவரும் கல்லூரியின் பாரம்பரியப்படி சேலைகளை அணிந்தே தமது பணிகளை மேற்கொண்டு வந்தார்கள் என பாடசாலை நிர்வாகம் தனது வக்குமூலத்தில் தெரிவித்துள்ளது.

அபாயா, நிக்காப் ஆடைகள்

ஏப்ர 22, 2028 இல் இந் நால்வரும் தமது ஆடை விவகாரம் தொடர்பாக நிர்வாகத்துடன் முரண்பட்டதன் காரணமாக ஏப்ரல் 26, 2018 இல் திருமலை கல்வி வலய அலுவலகத்தில் மேலதிகக் கல்விப் பணிப்பாளர் முன்னிலையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதன் போது இவ்விடயம் முஸ்லிம், இஸ்லாமிய மக்களுக்கு எதிரான ஒரு விடயமல்ல எனவும் பாடசாலையின் பாரம்பரியத்தைக் காப்பாற்றுவதற்காகவே தாம் இந்த ஆடைக் கலாச்சாரத்தை நிர்ப்பந்திக்கின்றோம் என பாடசாலை நிர்வாகம் தெரிவித்தது. இக்கூட்டத்தின் முடிவில் ஏற்பட்ட சமரசத்தின் விளைவாக இந்த நான்கு ஆசிரியைகளையும் தற்காலிகமாக திருமலை சாஹிராக் கல்லூரிக்கு இடம் மாற்றுவதென இரு பககுதியினரும் ஏற்றுக்கொண்டனர்.

சென்ற மாதம் இவ்விவகாரம் தொடர்பாகத் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது தந்னை மீண்டும் சண்முகா இந்துமகளிர் கல்லூரியில் கற்பிக்க அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையின் பிரகாரம், பெப்ரவரி 2, 2022 அன்று ஆசிரியை பாத்திமா பஹ்மிதா திரும்பவும் சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்குக் கடமையேற்கச் சென்றிருக்கிறார். அங்கு அதிபரின் அலுவலகத்தில் குழுமியிருந்த சிலர் ஆசிரியையத் தடுத்து உள்ளே புக அனுமதிக்கவில்லை எனவும், அவ்வேளை அவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதே வேளை அதிபரை பாத்திமா தாக்கியதால் அவர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் பாத்திமா தனது வாக்குமூலத்தை காணொளி மூலம் பதிவுசெய்துள்ளார்.

பாடசாலையின் வரலாறு

இவ்விவகாரம் தொடர்பாக மே 21, 2018 அன்று பிரதேச மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தில் செய்யப்பட்ட முறைப்பாடும் அது தொடர்பாக பெறப்பட்ட கல்லூரி நிர்வாகத்திடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலமும் ஆணையத்தின் அறிக்கையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதன் படி, அதிபர் செல்வி சுலோசனா ஜெயபாலன் அவர்களது வாக்குமூலம் இப்படிக் கூறுகிறது:

இப் பாடசாலை புரவலர் திருமதி தங்கம்மா சண்முகப்பிள்ளை அவர்களால், பெண்களின் கல்வித் தேவைக்காக, 1923 இல் ஆரம்பிக்கப்பட்டது. 1961 இல் இப்பாடசாலயை அரசாங்கம் பொறுப்பேற்கும்வரை திருமதி தங்கம்மாவே இப்பாடசாலையை நிர்வகித்து வந்தார். இவரது நிர்வாக காலத்தில் இந்து பாரம்பரியமும், கலாச்சார அனுட்டானங்களும் நடைபெற்று வந்தன. அதன் பிரதிபலிப்பாக அங்கு பணியாற்றும் ஆசிரியைகள் அனைவரும் பணியாற்றும்போது சேலைகளை அணியவேண்டுமென்பது எழுதாத சட்டமாக இருந்துவந்தது.

பின்னர் 1996 இல் இப்பாடசாலை தி/சாண்முகா இந்து மகளிர் கல்லூரி என்ற பெயர் மாற்றத்துடன், தேசியப் பாடசாலைகளில் ஒன்றாகத் தரமுயர்த்தப்பட்டது.

கடந்த 95 வருடங்களாக இப் பாடசாலையில் ஆசிரியைகள் சேலைகளை அணிவதே வழக்கமெனவும், வேற்று மத ஆசிரியைகள் சேலைகளை அணிந்தாலும் அவர்களை நிர்வாகம் இந்துமத அனுட்டானங்களைப் பின்பற்றும்படியோ, அடையாளங்களை அணியும்படியோ வற்புறுத்துவதில்லை எனவும் அவரவர்கள் தமது மத அடையாளங்களை வெளிப்படுத்துவதைத் தாம் தடுக்கவில்லை எனவும், தற்போது முறப்பாடு சேயும் அனைவரும் இதற்கு இணக்கமாகவே இருந்து வந்துள்ளார்கள் எனவும் அதிபர் சுலோசனா தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.

அத்தோடு வரலாற்று ரீதியாக இலங்கையின் முஸ்லிம் பெண்கள் சேலைகளை அணிவதே வழக்கம் எனவும் பல பாடசாலைப் புத்தகங்களில் கூட இப்படித்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது எனவும் அபாயா என்னும் ஆடை முறை சமீபத்திலேயே இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார். (மூலம்: HRC/TCO/27/18)

உசாத்துணை:

அபாயா எனப்படும் உடை அரபு நாட்டவர்களால் உடல் முழுவதையும் மூடி அணியும் ஆடையாகும். இதன் அங்கமாகச் சிலர் முகத்தையும் மூடிக்கொள்ள நிக்காப் எனப்படும் சிற்றாடையையும் பொருத்திக் கொள்கிறார்கள்.

குரானில் இதுபற்றிக் குறிப்பிடும்போது, பொதுவிடங்களிலோ அல்லது ஆண்கள் சூழவுள்ள இடங்களிலோ நடமாடும்போது பெண்கள் தமது முழு உடலையும் மறைத்துக்கொள்ளவேண்டுமென முகம்மது நபி கூறுவதாகத் தெரிகிறது.