திருக்குறள் - மொழி மாற்ற வரலாறு  -

திருக்குறள் – மொழி மாற்ற வரலாறு 

சமீபத்தில் முக நூலில் ஒரு பதிவு வந்தது. ‘ கட்டாயம் பார்க்கவும்’ குறிப்போடு வந்த இப் பதிவைத் தாண்டிப் போக முடியவில்லை.

அதில் ஒரு அறிவாளி பேசிக் கொண்டிருந்தார். நல்ல பேச்சு வன்மை மிக்கவர். விடயம் இதுவரை தமிழருக்குத் தெரியாத ஒன்று. பூடகமாக நகர்த்திச் சென்ற அவரது பேச்சு பிரசார வாடையுடன் இருந்தது.

சாரம் இதுதான்.

“ஆங்கிலேயர் இந்தியாவைக் கைப்பற்றியதும் இங்குள்ள பிராமணர்கள் ‘தேவ பாஷை’ என்ற காரணத்தைக் காட்டி சகலவிதமான சமஸ்கிருத சுவடிகளையும் ஆங்கிலத்திலும், அதன் வழியாகப் பிற மொழிகளிலும், மொழிபெயர்த்து விட்டார்கள். ஆனால் ‘நீஷ’ பாஷையான தமிழ் (திராவிட) சுவடிகளை மட்டும் தீயிட்டுக் கொழுத்தும்படி உத்தரவிட்டார்கள். அந்தக் காலத்தில் சென்னையில் பணி புரிந்த F.W.Ellis என்பவர்தான் திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்” என்று அவர் கூறுகிறார்.

இந்தப் பதிவுக்கு மறு பதிவிட்டிருந்த இன்னுமொரு முகநூல் நண்பர் “எனக்குத் தெரிந்த வரையில் திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது ஜி.யு. போப்  என்பவர் தான்” என்று குறிப்பிட்டிருந்தார்.

எனவே இது பற்றிய விசாரணையை மேற்கொண்டு தீர்ப்பு வழங்குமாறு நான் கூகிளாண்டவரிடம் இப் பெரும்பணியை ஒப்படைத்தேன்.

அவரது தீர்ப்பு இதுதான். வேறு ஆண்டவர்கள் வித்தியாசமான தீர்ப்புக்களையும் தரலாம். விரும்பினால் ‘notwithstanding clause’ ஐப் பாவித்து அப்பாலும் நகரலாம்.

 1. ஒரு சாமான்யவனின் ஒழுக்க, அற நெறிமுறைகள் பற்றி திருவள்ளுவர் எனப்படும் தத்துவ ஞானியால் கி.மு. 1-3ம் நூற்றாண்டில்  எழுதப்பட்டதாகக் கருதப்படுவது திருக்குறள்.
 2. எந்த மதங்களையும் முன்னிறுத்தாது எழுதப்பட்டது.
 3. உலகில் அதிக அளவு மொழி மாற்றம் செய்யப்பட்ட நூல்களில் , பைபிள், குரான் ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவது நிலையில் உள்ளது.
 4. 2014 ம் ஆண்டு வரையில் 82 உலக மொழிகளில் பதிக்கப்பட்ட திருக்குறள் ஆங்கில மொழியில் மட்டும் 57 விதமான பதிப்புக்களைப் பெற்றுள்ளது.
 5. முதன் முதலாக இந்த நூல் Constantius Joseph Beschi என்பவரால் 1730 இல் இலத்தின் மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டதன் மூலம் ஐரோப்பியர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அந்த மொழி மாற்றம் முழுமையானதாகவிருக்கவில்லை. ‘அறம்’ , ‘பொருள்’ என்ற இரு அதிகாரங்களை மட்டுமே பெஸ்கி மொழி மாற்றியிருந்தார். ‘இன்பம்’ கிறிஸ்தவ மதப்பிரசாரகர்களுக்கு ஒவ்வாது எனக் கருதப்பட்டு அது மொழி மாற்றப்படவில்லை.
 6. 1767 இல் பெயர் தெரியாத ஒருவரால் திருக்குறள் பிரஞ்சு மொழியில் மாற்றம் செய்யப்படடாலும் அது பதிப்பிக்கப்படவில்லை.
 7. 1800 இல் August Friedrich Caemmerer என்ற டேனிஷ் மத போதகர் ஜெர்மன் மொழியில் மாற்றம் செய்திருந்தார்.
 8. முதலாவது பிரஞ்சு மொழியிலான திருக்குறள் 1848 இல் Monsieur Ariel என்பவரால் செய்யப்பட்டது. அதுவும் மூன்று அதிகாரங்களையும் கொண்டதல்ல.
 9. 1865 இல் Karl Graul என்பவரால் ஜெர்மன் மொழியில் மாற்றம் செய்யப்பட்டாலும் அவரது திடீர் மரணம் பணியை இடை நிறுத்தி விட்டது.
 10. முதலாவது ஆங்கில மொழி மாற்றம் Francis Whyte Ellis என்பவரால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவரால் மொழி பெயர்க்கப்பட்டது 120 குறள்கள் மட்டுமே.
 11. 1840 – 1852 இடையில் W. H. Drew என்பவர் முதலிரண்டு அதிகாரங்களையும் ஆங்கில உரைநடையில் மொழிபெயர்த்தார். அத்தோடு பரிமேலழகரது தமிழ் உரையையும் ராமானுஜ கவிராயரது விரிவுரையையும் ட்ரு அத்தோடு இணைத்திருந்தார். இங்கும் 630 குறள்களை மட்டுமே ட்ருவினால் மொழிபெயர்க்க முடிந்தது. மீதி யாவற்றையும் John Lazarus எனப்படும் சுதேச மத போதகர் தான் மொழி மாற்றம் செய்தார்.
 12. திருக்குறளின் முதலாவது முழுமையான மொழி மாற்றத்தை 1886 இல் G. U. Pope என்பவரே செய்தார். இதன் பிறகு தான் திருக்குறள் உலகின் பிற மொழிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதில் தகவல்  பிழைகள் ஏதுமிருந்தால் சுட்டிக் காட்டவும். ஆண்டவரிடம் மீண்டும் சமர்ப்பிக்கிறேன். 😉

Please follow and like us:
error0