Art & LiteratureTamil History

“திருக்குறளை வேண்டுமென்றே சிதைத்தார் ஜி.யு.போப்” – ஆளுனர் ஆர்.என்.ரவி

விவாதங்களை எழுப்பும் விவாதம்

திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யு.போப். திருக்குறளின் பெருமையை உலகெங்கும் பறைசாற்ற உதவியவர்களில் ஒருவர் என்ற வகையில் உலகத் தமிழ் மக்களிடம் அவர் மீது நீங்காத பற்று உண்டு. கனடா வாழ் தமிழர்கள் அவரை நினைவுகூர்ந்து அவரது பிறந்த பூமியான பிறின்ஸ் எட்வேர்ட் தீவில் அவரது சிலையொன்றை நிறுவத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர் மீதான குற்றங்க் குறைகளும் ஆங்காங்கே வெளிவாராமல் இல்லை.

சமீபத்தில் புது டெல்லியில் டெல்லி தமிழ் கல்வி கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவொன்றில் பேசிய தமிழக ஆளுனர் கே.என்.ரவி திருக்குறளைப்பற்றிப் பேசியிருந்தது சற்றே ஆச்சரியமாகவிருந்தது. “திருக்குறளில் பக்தி என்ற ஆன்மாவை ஜி.யு.போப் வேண்டுமென்றே சிதைத்துவிட்டார்” என ரவி பேசியிருக்கிறார்.

ஜோர்ஜ் உக்லோ போப் ஒரு கனடியர். 1820 இல் கனடாவின் மாகாணங்களில் ஒன்றான பிறின்ஸ் எட்வேர்ட் தீவில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு வணிகர். இவர் குழந்தையாக இருந்தபோதே குடும்பம் இங்கிலாந்துக்குக் குடியேறிவிட்டது. பல்கலைக்கழகப் படிப்பைத் தொடர்ந்து சமயப்பணி செய்வதற்காக 1839 இல் தமிழகம் சென்றார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே அவர் தமிழை நந்கு கற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்தில் ஆரியங்காவுப் பிள்ளை ராமானுஜக் கவிராயரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். கூடவே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றார். தஞ்சை, உதகமண்டலம், பெங்களூருவில் சமயப்பணியோடு கல்விப்பணி மற்றும் தமிழ்ப்பணிகளிலும் ஈடுபட்டார். பின்னர் இங்கிலாந்தின் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ், தெலுங்குப் பேராசிரியராக 13 ஆண்டுகள் பணியாற்றினார். 1886 இல் தமிழில் முதுகலைப்பட்டம் பெற்று அதே ஆண்டில் ‘Sacred Kural’ எந்ற தலைப்புடன் திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டார்.

ஆளுனர் ஆர்.என்.ரவி

“திருக்குறளின் மொழிபெயர்ப்பு காலனி ஆதிக்க மனோபாவத்துடன் அதைச் சிறுமைப்படுத்தவேண்டுமென்ற நோக்கத்துடனேயே மேற்கொள்ளப்பட்டது. ஜி.யூ. போப்பும் அப்போது ஆதிக்கம் செலுத்திய கிழக்கிந்திய கம்பனியும் திருக்குறளின் பக்தி ஆன்மாவை வேண்டுமென்றே மறைத்துள்ளனர். பிரித்தானியர்கள் இந்தியாவின் சிறந்த ஆன்மிகத்தன்மையை சிதைக்க முயன்றனர். அவர்கள் இந்திய வரலாறு இந்திய கலாச்சாரத்தை சிதைத்து அதனை நிறைவேற்றினர். அதனால் இன்றைய சமூகம் காலனி ஆதிக்க மனோபாவத்துடன் மொழிபெயர்க்கப்பட்ட பழைய தமிழ் இலக்கியப் புத்தகங்களைப் புறக்கணிக்க வேண்டும். மாறாக அசல் புத்தகத்திந் சாராம்சத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

“திருக்குறளை இப்போது ஏதோ வாழ்வியல் நெறிகள் என்பது போல் மட்டும் குறைத்து மதிப்பிட்டு வைத்திருக்கின்றனர். ஆனால் அது ஒரு இதிகாசம். அதில் நித்திய ஆன்மிகத்தின் ஆன்மா இருக்கிறது. முதல் திருக்குறளில் உள்ள ஆதி பகவன் என்ற வார்த்தை ரிக் வேதத்தில் இருந்து பெறப்பட்டது. அது இந்திய ஆன்மிகத்தின் மையப்புள்ளி. ஆனால் அதன் ஆன்மாவை ஜி.யு போப் வேண்டுமென்றே தனது மொழிபெயர்ப்பில் சிதைத்துள்ளார். ஆதிபகவன் என்பதை அவர் வெறும் முதன்மைக் கடவுள் (Primal Deity) என்று மட்டும் குறிப்பிட்டிருக்கிறார்” என ஆளுனர் ரவி பேசியிருக்கிறார். இது தற்போது பல வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. (நன்றி: இந்து )