Sri Lanka

திருகோணமலை 11 காணாமற் போனவர்களும் கடற்படைத் தளபதிகளின் சித்திரவதை கூடமும் – ITJP

ஜஸ்மின் சூக்கா

2008 முதல் 2014 வரை, கடற்படைத் தளங்களினுள்ளே நடைபெற்ற துன்புறுத்தல், காணாமலாக்கப்படல், கொலை நடவடிக்கைகளில் பெருமளவு உயர்பதவி வகிக்கும் தளபதிகளுக்குத் தொடர்புண்டு எனக் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, சிறீலங்காவுடனான கடற்படை ஒத்துழைப்பை மறுபரிசீலிக்கவேண்டுமென சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்ட அமைப்பு (The International Truth and Justice Project – ITJP) கோரிக்கை விடுத்துள்ளது.

ITJP இனால் பிரசுரிக்கப்பட்ட “சிறீலங்கா கடற்படை:கூட்டாகக் கண்களை மூடிக்கொள்ளல்” (The Srilankan Navy: Turning a Collective Blind Eye) என்ற பிரசுரத்தில், திருகோணமலை கடற்படைத் தளத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 11 பேர் தொடர்பில் கடந்த 10 வருடங்களாக காவல்துறையினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது தப்பிப் பிழைத்தோரிடமிருந்தும், உட் பணியாளர்களிடமிருந்தும் பெறப்பட்ட நேரடி சாட்சியங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. அதில், விசாரணைகளை மேற்கொண்ட விதத்திலுள்ள போதாமை (serious investigative shortcomings), சுயநலன்களின் குறுக்கீடு (conflicts of interest), அரசியல் தலையீடு (political interference) ஆகிய விடயங்கள் அவதானத்துக்குள்ளாகியிருக்கின்றன. அத்தோடு, கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பல சட்ட மீறல்கள், 2009 இல் போர் முடிவுற்றதோடு நிறுத்தப்படவில்லை எனவும் துன்புறுத்தல் பல்வேறு கடற்படைத் தளங்களிலும் மேற்கொள்ளப்பட்டதெனவும் அவ்வறிக்கை கூறுகிறது.

திருகோணமலை 11

“‘திருகோணமலை 11’ கடத்தல் வழக்கு சிறீலங்காவின் நீதித் துறைக்கு பெருமையைத் தேடிக்கொடுக்க வேண்டிய ஒன்று. பதிலுக்கு அது ஒரு படு தோல்வியின் சின்னமாகவே வெளிவந்திருக்கிறது. கடற்படை உளவுப்பிரிவின் மூத்த அதிகாரிகள் மற்றும் திருகோணமலைத் தளத்தில் இருந்த அதிகாரிகள் விசாரிக்கப்படவேயில்லை. குற்றவாளிகள் எனக் கருதப்படுபவர்கள் பாதுகாக்கப்பட்டதோடு பதவி உயர்வுகளும் கொடுக்கப்பட்டனர். உயிர் வாழும் சாட்சியங்கள் விசாரிக்கப்படவேயில்லை” என ITJP யின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்தார்.

நன்றி:கொழும்பு ரெலிகிராப்

அப்போதய கடற்படைத் தளபதியால் உருவாக்கப்பட்ட ‘விசேட உளவுப் பிரிவின்’ நடவடிக்கைகள் மூத்த அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும் எனவும், குறிப்பாக விசாரணைக்கென அழைத்துச் செல்லப்படுபவர்களைச் சித்திரவதை செய்வதற்கென உருவாக்கப்பட்ட விசேட நிலக்கீழ் இருட்டறையில் கைதிகள் நீண்டகாலமாகச் சித்திரவதிக்குள்ளாக்கப்பட்டனர் என்ற விடயமும், அதிகாரிகளுக்குத் தெரியாமல் அத்தனை பேரை உள்ளேயும், வெளியேயும் கொண்டு போய் வருவதோ, சாப்பாடு கொடுத்துக் காப்பாற்றுவதோ, விசாரணைகளை மேற்கொள்வதோ மூத்த அதிகாரிகளுக்குத் தெரியாமல் செய்திருக்கக்கூடிய விடயமல்ல என்றும், எனவே கடற்படை அதிகாரிகளின் முழுக் கட்டமைப்பும் இக்குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களே என ITJP யின் அறிக்கை கூறுகிறது.

“அங்கு என்ன நடைபெறுகிறது என்பது பற்றி எதுவும் தெரியாதவாறு எல்லோருமே கண்களைப் பொத்திக்கொண்டிருங்கள் எனத் தமக்குக் கூறப்பட்டதாக அங்கு கடமை புரிந்த கடற்படை அதிகாரிகளோடு பேசும்போது தெரிய வந்தது. முழுக் கடற்படையின் கட்டளைக் கட்டமைப்புமே அங்கு நடைபெற்ற சட்ட மீறல்களில் பங்கு கொண்டவர்கள், அவர்களின் மீது அழிக்க முடியாத கறை படிந்துள்ளது. குறைந்தது, காவற்துறையினர் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதுடன், குற்றம் புரிந்தவர்களுக்குப் பதவியுயர்வுகள் கொடுப்பதை நிறுத்தினாலேயொளிய, சிறீலங்கா கடற்படை மீது தடைகள் விதிக்கப்பட வேண்டும். சர்வதேச பங்காளிகள் இதன் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளனர். இனியும் சிறீலங்கா கடற்படையின் குற்றச் செயல்களைக் கண்டும் காணாமல் போகமுடியாது” என யஸ்மின் சூக்கா தெரிவித்தார்.

“சிறீலங்கா கடற்படை: கூட்டாகக் கண்களை மூடிக்கொள்ளல்” என்னுமறிக்கை, நீதியை எதிர்பார்த்திருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் மிகவும் வலிதரும் விடயமென்பதைத் தவிர்த்துப் பார்க்கில், ஒரு பரபரப்பான திகில் தரும் நாவலுக்குரிய பண்பைக் கொண்டிருக்கிறது. ஓரிடத்தில், காவல்துறை ஒரு சந்தேக நபரைத் தேடி சர்வதேச காவல்துறை (Interpol) அறிக்கை விடும் போது அச் சந்தேக நபரைத் தனது தலைமையகத்தில் சிறீலங்காவின் அதியுயர் இராணுவ அதிகாரி ஒருவர் ஒளித்து வைத்திருந்தார். அதைத் தொடர்ந்து ஒரு முக்கிய சாட்சியை அவர் கடத்துவதற்கு முயற்சி செய்தார். விசாரணைகளை மேற்கொள்ளும் தலைமை அதிகாரியைச் சிறையிலிருந்த கடற்படை அதிகாரிகள் பயமுறுத்தினார்கள். ஒருவரைத் தவிர ஏனையவர்கள் சிறையிலிருந்து பிணையில் விடுதலைசெய்யப்பட்டதும், அவர்கள் மீது பல தீவிர குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தும், அவர்களில் பலர் பதவி உயர்வு கொடுக்கப்பட்டார்கள்.

திருகோணமலை நிலக்கீழ் சித்திரவதை கூடத்தின் இருப்பிடம் பற்றிய செயற்கைக்கோள் தடங்களை (GPS coordinates) 2015 இல், முதன் முதலில் ITJP தான் வெளியிட்டிருந்தது. பின்னர், அதே வருடம், ஐ.நா. அதிகாரிகள் அவ்விடங்களுக்குச் சென்று நிலக்கீழ் இருப்பிடங்களை உறுதி செய்தனர்.