திருகோணமலை எண்ணை வயலிலிருந்து இந்தியாவுக்கு விநியோகக் குழாய்கள் – இந்தியா திட்டம்
திருகோணமலை எண்ணை வயல்களுக்கும் இந்தியாவுக்குமிடையில் எண்ணைக் குழாய்களை நிர்மாணிக்க இந்தியா தயாராகிவருவதாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்நோக்கும் சமகால பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தர்க்கரீதியான பங்காளியாக இந்தியாவே இருக்கமுடியுமெனவும் இவ்விரு நாடுகளினதும் உறவை மேலும் வலுப்படுத்த நிதி, சுற்றுலா, முதலீடுகள் போன்ற பொருளாதார இணைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு இரு நாடுகளும் முன்னெடுத்துவரும் திட்டங்களை வரைவிட்டு ஒரு அறிக்கையொன்றையும் தூதுவர் வெளியிட்டுள்ளார்.
இத் திட்டத்தின் முதல் கட்டமாக இந்தியாவின் பாவனையிலுள்ள சுமார் 30 எண்ணைக் குதங்களை இந்தியாவுடன் இணைத்து எண்ணை வழங்குதலை மேற்கொள்வதற்காக கடலின் கீழ் குழாய்களை அமைக்க இந்தியா திட்டமிட்டு வருவதாக தூதுவர் அறிவித்துள்ளார்.
இதே வேளை இந்தியாவின் பெரு நகரங்களான கல்கத்தா, குஜராத், ஒடிஷா போன்ற இடங்களில் இலங்கையின் துணைத் தூதரகங்களை அமைப்பதன் மூலம் இந்தியாவில் இலங்கையின் ஈடுபாட்டை அதிகரிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இருக்கும் அனைத்து புத்த கோவில்கள் பற்றிய தகவல்களையும் சிங்களத்தில் ஒரு கைநூலாக வெளியிடுவதற்கும் தூதரகம் திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் பெருந்தொகையான இலங்கைச் சுற்றுலாவாசிகள் இந்தியாவுக்கு யாத்திரை செல்லமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த எட்டு ஒன்பது மாதங்களில் இலங்கை மிக மோசமான பொருளாதாரப் பிரச்சினையை எதிர்கொண்டபோது உடனடியாக உதவிக்கு வந்தது இந்தியா. உணவு, எரிபொருள் பணம் போன்ற அத்தியாவசிய பொருட்களை அது இந்த இக்கட்டான காலத்தில் தந்துதவியது. இதை நாம் மனதில் கொண்டு அதஹ்ற்காக நன்றியுடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்றார் அவர்.
இந்த வருட ஆரம்பத்திலிருந்து ஏறத்தாள $3.8 பில்லியன் பெறுமதியான உதவிகளை இந்தியா இலங்கைக்குச் செய்திருக்கிறது. தொடர்ந்தும் இந்திய முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையை ஒரு ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்ருவதற்கு ரணில் விக்கிரமசிங்க நிர்வாகம் செயற்பட்டு வருகிறது. இதன் மூலம் உலக பொருளாதாரத்தில் நாமும் ஒரு பணடம் வழங்கும் நாடாக மாற முடியும் எனத் தான் நம்புவதாக மொறகொட தெரிவித்திருக்கிறார்.
இதே வேளை இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்ரும் முதலீட்டாளருமாகிய அதானியின் நிறுவனம் மன்னார் வளைகுடாவில் காற்றாடி மின்னாலைகளை நிர்மாணிக்க ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. 500 மில்லியன் டாலர் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்படவிருக்கும் இத் திட்டத்துக்கான ஆரம்ப செயற்பாடுகளுக்கு இலங்கை அனுமதி வழங்கியிருக்கிறது.