HealthIndiaWorld

திப்பு சுல்தானுக்கும் டொனால்ட் ட்றம்புக்கும் என்ன சம்பந்தம்?

சிவதாசன்

இது ஒரு சுவாரசியமான கதை. அதுவும் கொறோனாவைரஸ் சம்பந்தப்பட்ட கதை. இன்றைய உலகின் பிரச்சினையைத் தீர்க்க ஜனாதிபதி டொனால்ட் ட்றம்பிற்கு திப்பு சுல்தான் உதவிய கதை.

ஹைட்றொக்சிகுளோறோகுயீன் (HCQ) கொறோனாவைரஸ் பிரச்சினைக்குச் சிறந்த மருந்தென ‘டாக்டர்’ டொனால்ட் ட்றம்ப் அறிவித்த பின்னர்தான், 200 வருடங்களுக்கு மேலாக அறியப்பட்ட ‘இந்திய மருந்து’ உலகத்துக்கே தெரிந்தது. அது மட்டுமல்லாமல், இம் மருந்துக்காக, உலக நாடுகள் இந்தியாவின் காலில் விழாத குறையாக நிலைமையை மாற்றியவர் ட்றம்ப் தான்.

உலகில் அதிக பணத்தை ஈட்டிக்கொடுக்கும் வியாபாரங்களில் ஒன்று மருந்து தயாரித்தல். அதனால் அநேகமான மருந்து நிறுவனங்கள் மேற்குநாடுகளில் தான் இருக்கின்றன. ஆனால் இந்த வெறும் மலேரியா மருந்தைத் தேடி உலகம் இந்தியாவுக்கு வருகிறது. இந்தியாவுக்கும் HCQ வுக்கும் என்ன சம்பந்தம்?

அதையறிய நாங்கள், 200 வருடங்கள் முந்தி, பிரிட்டிஷ் இந்தியாவுக்குப் போக வேண்டும்.

1799 இல் மைசூரில் இருந்து ஆண்டுகொண்டிருந்த திப்பு சுல்தானைத் தோற்கடித்த பிரித்தானியர் சிறீரங்கபட்டினத்தைத் தலைநகராகக் கொண்ட மைசூர் ராஜ்ஜியத்தைக் கைப்பற்றுகிறார்கள். வெற்றி கொண்டபின், அடுத்த சில நாட்களுக்கு பிரித்தானியப் படை வீரர்கள் தமது வெற்றியை அமோகமாகக் கொண்டாடுகிறார்கள்.

இக் களியாட்டம் முடிந்து சிலநாட்களுக்குள் பல போர்வீரர்கள் மலேரியா நோய்க்கு ஆளாகிவிடுகின்றனர். காரணம், சிறீரங்க பட்டினத்தில் சதுப்பு நிலங்கள் ஏராளம். நுளம்புகளும், தமக்குக் கிடைத்த புதிய வெளிநாட்டு இரத்தத்தைக் குடித்துக் களியாட்டம் போட்டிருக்க வேண்டும்.

உள்நாட்டு இந்தியக் குடிமக்களுக்கு இதுவெல்லாம் பிரச்சினையில்லை. காரணம் பலநூறு வருடங்களாக அவர்கள் மலேரியா வைரஸுக்கு இசைவாக்கம் அடைந்திருந்தார்கள். அவர்களைத் தொற்றுவதால் வைரஸ்களுக்குத் தான் ஆபத்து. அத்தோடு அவரகள் சாப்பிடும் உறைப்பான உணவும் கிருமிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்திருக்கலாம். அல்லாதுபோனால் இவ்வளவு கொடிய SARS-CoV-2 வைரஸினால் 1.3 பில்லியன் மக்களிடம் பெரிதாக வாலாட்ட முடியாமல் இருப்பதற்கு (நம்ம இலங்கையிலும் தான்) (உஷ்..ஷ்) வேறென்ன காரணமாக இருக்க முடியும்?

நுளம்புக் கடியினால் மலேரியா கடுமையாகப் பரவியதால் பல பிரித்தானிய போர்வீரர்களும், அதிகாரிகளும் நோய்வவாய்ப்பட்டனர். இனிமேலும் தாங்க முடியாது என்பதால் அவர்கள் சிறீரங்க பட்டினத்தை விட்டு பங்களூருக்குச் சென்று அதைத் தமது நிர்வாகத் தலைநகர் ஆக்கினர். பங்களூர், ஒப்பீட்டளவில் இங்கிலாந்தையொத்த பருவநிலையைக் (குளிர்) கொண்டிருந்தது அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. ஆனாலும் மலேரியா அவர்களைத் தொடர்ந்து அங்கும் சென்றுவிட்டது.அக் காலகட்டத்தில், ஐரோப்பிய விஞ்ஞானிகள் ‘குயினைன்'(Quinine) என்றொரு இரசாயனப் பதார்த்தத்தைக் கண்டுபிடித்திருந்தார்கள். அது மலேரியா நோயாளிகளுக்குச் சிகிச்சைக்காகப் பயன்படுத்தலாமெனினும் மனிதர்களில் அது பரீட்சிக்கப்பட்டிருக்கவில்லை. இந்தியாவில் இருந்த பெருந்தொகையான பிரித்தானிய வீரர்களில் அம் மருந்தைச் சோதிப்பதற்கு அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது.

சில நாட்களில், பெருந்தொகையான குயினைன் இந்தியாவைச் சென்றடைந்தது. மலேரியா தொற்றியவர்கள், தொற்றாதவர்கள் எல்லோருமே தினமும் இம் மருந்தை உட்கொள்ளப் பணிக்கப்பட்டனர். இந்தியாவிலிருந்த அத்தனை பிரித்தானிய முகாம்களிலிருந்த போர்வீரர்களும் குயினைன் அருந்தப் பணிக்கப்பட்டனர். இந்தியாவின் அனைத்துப் பிரதேசங்களிலும் நுளம்புகளும் அப்போது ஆட்சி செய்து வந்தன.

குயினைன் மருந்த உட்கொண்ட பல போர்வீரர்கள் விரைவில் குணமடைந்தனர். ஆனாலும் சிலர் தொடர்ந்தும் மலேரியா நோய்க்கு ஆட்பட்டு வந்தனர். அதிகாரிகளுக்கு இது மர்மமாக இருந்தது. விசாரித்தபோது தான் தெரியவந்தது, அவர்கள் குயினைன் மருந்தை உட்கொள்ளவில்லை. காரணம் அதன் கசப்புத் தன்மை. தமக்கு நோய்வந்தாலும் பரவாயில்லை குயினைனைக் குடிக்க மாட்டோமென அவர்கள் அடம் பிடித்தார்கள்.

இப் போர்வீரர்களைக் குயினைனைக் குடிக்க வைப்பதற்கு என்ன செய்யலாம் என அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் செய்த ஆராய்ச்சியின் பலனாக, ஜூனிப்பெர் செடி வகையிலிருந்து செய்யப்பட்ட ஒரு வகை இனிப்புச் சுவையுடன் கூடிய மது, கை கொடுத்தது. குயினைனுடன் கலந்து கொடுத்தபோது அது குயினைனின் கசப்புத் தன்மையை முற்றிலும் அகற்றியிருந்தது. அதுவே இப்போ உங்களில் சிலர் (?) அருந்தும் ‘ஜின்’. குயினைன் கலந்து குடிக்கும்போது அதை ‘ஜின் & ரோணிக்’ (Jin & Tonic) எஅன அழைக்கப்பட்டது. மருந்தை இப்பொழுதும் இந்தியாவில் ‘டானிக்’ என அழைப்பது வழக்கம். இப்படியான இரு சுவையுடன் கூடிய மது-மருந்து பின்னர் பிரித்தானிய வீரர்களிடம் பெருமதிப்புப் பெற்றுவிட்டது. குயினைனைக் குடிக்க மறுத்த வீரர்களுக்குப் பின்னர் ரேஷன் முறையில், மாதத்துக்கு ஒரு போத்தல் ஜின்னும் ஒரு ‘ரோனிக் வாட்டரும்’ (quinine) வழங்கவேண்டிய நிலைக்கு வந்துவிட்டது.

இப்படி இந்தியாவில் ஜின் & ரோணிக் கின் மவுசு அதிகரித்ததும், கிழக்கிந்தியக் கம்பனி, பங்களூரெங்கும் பல மதுபான வடிசாலைகளை நிறுவியது. இங்கிருந்துதான் இந்தியா முழுவதுக்கும் மது வழங்கப்பட்டது. இன்று பங்களூர் ‘இந்தியாவின் ‘பப் தலைநகராக’ (Pub Capital) இருப்பதற்கு இதுவே காரணம்.

இந்தியா சுதந்திரமடைந்த போது, பெரும்பாலான வடிசாலைகளை இந்தியர் ஒருவர் வாங்கினார். அவர் வேறு யாருமல்ல, ‘விஜே டி.வி’ நிறுவனரான விஜே மல்லையாவின் தந்தையார் விட்டல் மல்லையா. பின்னர் அவர் எல்லா வடிசாலைகளையும் இணைத்து, பங்களூரில் தலைமையலுவகத்தைக் கொண்ட யூனைரெட் புறூவரீஸ் என நிறுவனப்படுத்தியிருந்தார்.

அதே வேளை, ஜின் & ரோணிக் அப்போதிலிருந்து இப்போது வரை மிகவும் பிரபலமான மதுக் கலவையாக இருந்து வருகிறது. இன்று இந்தியாவில் எந்தவொரு தொற்று நோய்க்கும் குயினைன் (தனியாக) மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

தற்போது, குயினைன் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு இந்திய மருத்துவர்களால் தமது நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. அப்படியான ஒரு வடிவம் தான், அமெரிக்க ஜனாதிபதி ட்றம்பினால் பிரபலமாக்கப்பட்ட, ஹைட்றொக்சிகுளோறோகுயீன் (Hydroxychloroquine).

திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டமையால் தான் உலகத்துக்கு குயினைன் கிடைத்தது. குயினைனை வைத்து கொறோணாவைத் தோற்கடித்தால் அமெரிக்கர்களுக்கு (ஏன் உலகத்துக்கும் தான்) ட்றம்ப் (இன்னுமொருதடவை) கிடைப்பார்.