திசமஹரகமவில் சீன இராணுவச் சீருடைகளில் சீனப் பணியாளர்கள்
ஏரிகளையும் ஆறுகளையும் தூர்வாரி எடுக்கும் மண்ணைத் சீன நிறுவனம் தனது கட்டுமானங்களுக்குப் பாவிக்கிறது
திசமஹரகமவிலுள்ள, சீனர்களுக்குச் சொந்தமான நிறுவனமொன்றின் பணியாளர்கள் சீன இரானுவச் சீருடையை அணிந்திருந்தார்கள் என சமாகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் மனுஷா நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன சீனத் தூதரகத்துடன் தொடர்புகொண்டு விசாரித்தபோது அப் பணியாளர்கள் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், சீன அரசின் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் அல்லவெனவும் தூதரகம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதே வேளை, திசமஹரகமவிலுள்ள திச வேவா ஏரியைச் சீன நிறுவனமொன்று பாரிய இயந்திரங்களைக் கொண்டு தூர்வாரி ஆழமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது சூழல் செயற்பாட்டாளர்களின் தலையீட்டால் அம் முயற்சிகள் இப்போது கைவிடப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது.
தேவநம்பிய தீசனது மருமகனான யாத்தள திஸ அரசனால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் திசவேவா ஏரி, 1000 வருடங்களுக்கு மேல் பழைமையானது எனவும் இதன் படுகையை மாற்றுவதால் இதில் தங்கியிருக்கும் சூழற் சமநிலை பாதிப்படையுமெனவும் சூழலியலாளர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இவ்வேரியின் படுகை மண்ணைச் சீன நிறுவனம் சேகரித்து அம்பாந்தோட்டையில், சீனா நிர்மானித்துவரும் பாரிய தொழிற் பேட்டைக் கட்டுமானங்களுக்குப் பாவிக்கின்றது என நம்பப்படுகிறது. இதே வேளை, திஸவேவா ஏரி பழம் பெருமை வாய்ந்த தொல்லியல் தடயங்களைக் கொண்டது எனவும், உள்ளக சூழல் சமநிலை பேணுவதற்கு அவ்வேரியின் வளங்கள் பாதுகாக்கப்படவேண்டுமெனவும் இலங்கையின் ஏரிகள் உலகப் புகழ் பெற்றவை எனவும் சீனருக்கு இவற்றைப்பற்றி எந்தவித அக்கறையுமில்லை எனவும் சமூக விஞ்ஞானியும் சூழலியலாளருமான தொல்லியல் பணிப்பாளர் நாயகம் பேரா. அநுரா மனதுங்க சாடியுள்ளார்.
“சீனருக்கு சூழல் பற்றிய அக்கறை இருந்திருப்பின் அவர்கள் துறைமுக நகரத்தைக் கட்டியிருக்க மாட்டார்கள்” என, சூழலியலாளர் கலாநிதி ரவீந்திரா காரியவாசம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மிக வேகமாகக் காடழிக்கப்பட்டுவரும் நாடுகளில் இலங்கை உலகில் நான்காவது இடத்தில் இருப்பதாக 2010 இல் உலக உணவுத் திட்டம் மற்றும் உலக சுகாதார நிறுவநம் ஆகியனவற்றால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்று கூறுகின்றது.
மறைந்துபோனதாகக் கருதப்படும் மாகம என்னும் நகரின் இடிபாடுகள் இவ்வேரியில் அமிழ்ந்திருக்கலாமெனவும், முன்னர் ஒரு தடவை இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போது கஜலக்ஸ்மியின் உருவம் குறிக்கப்பட்ட நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டதெனவும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.
இக் குறிப்பிட்ட ஏரியில், அனுமதி பெறாமல் சீன நிறுவனம் பாரிய இயந்திரங்களைக் கொண்டு மண்ணகழ்வுகளைச் செய்து வருகிறது எனவும் இந்நடவடிக்கையின் பின்னால் ஒரு மூத்த அமைச்சர் இருக்கிறார் எனவும் இதுபற்றி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தொல்லியல் திணைக்கள நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியைப் பெறாமல் இம் மண்ணகழ்வு நடவடிக்கையைச் செய்யக்கூடாது என அம்பாந்தோட்டை தொல்லியல் திணைக்கள மாவட்ட உதவிப் பணிப்பாளர் கேட்டுக்கொண்டதற்கிணங்க வெள்லியன்று அது நிறுத்தப்பட்டுள்ளது என அறியப்படுகிறது.
அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அண்மையிலுள்ள பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் சீன கைத்தொழிற் பேட்டைக்கு நீர் மற்றும் மின்சாரம் வழங்குவதற்காக சிங்கராசா வனத்தை அழித்து இரண்டு பாரிய ஏரிகளை அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பின்னாலும் ஒரு மூத்த அமைச்சர் இருக்கிறார் பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன முன்னர் விசனம் தெரிவித்திருந்தார்.
இலங்கையிலுள்ள 103 ஆறுகளையும் குளங்களையும் சீர்ப்படுத்தும் திட்டமொன்றை கடந்த மார்ச் மாதம் அரசு அறிவித்திருந்தது. சீன அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இம் முயற்சி ஜூன் 21 இல் திசவேவாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கான அனுமதியை முதலில் தொல்லியல் திணைக்களத்திடம் நீர்ப்பாசன அமைச்சு பெற்றிருக்க வேண்டும். ஆனால் இதுவரை அப்படியான கோரிக்கை எதையும் நீர்ப்பாசன அமைச்சர் சாமல் ராஜபக்ச அனுப்பிவைத்திருக்கவில்லை.
“இக் குளங்களைத் தூர்வாருவதால் பெறப்படும் மண்ணை சீன நிறுவனங்கள் விற்றுச் சம்பாதிக்கும் பணத்தில் எமக்கும் ஒரு பங்கு கிடைக்கும். இதற்காக நிறுவப்படும் இயந்திரங்களுக்கான செலவையும் அவர்களே பொறுப்பேற்கிறார்கள்” என அமைச்சர் சாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Related posts:
- இந்த அரசாங்கத்தின் கீழ் சூழல் நாசமாக்கப்பட்டதுபோல் வேறெப்போதும் நாம் கண்டதில்லை – ஒமால்பே சோபித தேரர்
- வவுனியாவில் பெருமளவில் மண் கொள்ளை! – வெளிப்படுத்துகிறார் சாணக்கியன்
- அம்பாந்தோட்டை சீன தொழில்வலயத்துக்கு நீர் வழங்கவே சிங்கராஜா வனத்தில் குளம் – சஜீவ சமிக்கார
- இலங்கையில் பாம் எண்ணை தயாரிப்பும், இறக்குமதியும் இன்றுமுதல் தடைசெய்யப்படுகிறது