தாய்லாந்து | துப்பாக்கிதாரியால் 26 அப்பாவிகள் படுகொலை

Spread the love

பெப்ரவரி 9, 2020

துப்பாக்கிதாரி ஜாக்கிரபாந்த் தொம்மா

காணிப் பிரச்சினை தொடர்பாகக் கோபம்கொண்ட தாய்லாந்து இராணுவத்தினர் ஒருவர் பல்பொருள் அங்காடியில் கண்டபடி துப்பாக்கிப்பிரயோகம் செய்ததில் 26அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாங்கொக்கிலிருந்து 250 கி.மீ. வடக்கேயுள்ள வட கிழக்குப் பிரதேசத்திலுள்ள நக்கோன் றட்சசீமா என்னுமிடத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

இத் துப்பாக்கிதாரி தாய்லாந்து இரணுவத்தைச் சேர்ந்த, 32 வயதுடைய ஜாக்கிரபாந்த் தொம்மா என அறியப்பட்டுள்ளார். அங்காடியிலுள்ள கடைகளில் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தைத் தொடர்ந்து தொம்மா, அவரது மேலதிகாரியையும் சுட்டுக்கொன்றுவிட்டு திருடப்பட்ட வாகனமொன்றில் தப்பியோடியுதாகவும் இறுதியில் தாய்லாந்தின் பாதுகாப்புப் படைகள் அவரைச் சுட்டுக்கொன்றுள்ளதாவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

துப்பாக்கிதாரி தனது ஆயுதங்களையும் அவற்றுக்கான ரவைகளையும் இராணுவத்தின் ஆயுதசாலையிலிருந்து திருடியிருந்தார் என அதிகாரி ஒருவர் தெரிவித்தாகவும் ராய்ட்டர்ஸ் தெரிவித்திருக்கிறது.


துப்பாக்கிதாரி மக்கள் மீதான தாக்குதல்களை முகநூலில் பதிவிட்டு வந்திருந்தாரெனவும் பின்னர் முகநூல் நிறுவனம் அவரது கணக்கை முடக்கிவிட்டதாகவும் தெரிகிறது.

கிட்டத்தட்ட 12 மணித்தியாலங்களாக ‘ரேர்மினல் 21’ என்ற பல்பொருள் அங்காடியைச் சுற்றிவளைத்திருந்த இராணுவம் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களையும், குழந்தைகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தியிருந்தும், இக் கொலைகளை முற்றாகத் தடுக்க முடியவில்லை. காவற்துறையினர் அங்காடிக்கு வருவதற்குப் பலமணிநேரங்கள் எடுத்தது என்றும் உடனே வந்திருந்தால் பல இழப்புக்களைத் தவிர்த்திருக்கலாமென்றும் அவ்வங்காடியில் நடைபெற்ற விடயங்களை அவதானித்த ஒருவர் கூறியிருந்ததாக அறியப்படுகிறது.

துப்பாக்கிதாரி ஒவ்வொருவரின் தலைகளைக் குறிவைத்துச் சுட்டதாகவும், அவரது ஒரு குறியும் பிசகவில்லை எனவும், அவரது அதிகாரி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுவிட்டதாகவும் இன்னுமொரு சாட்சி தெரிவித்திருக்கிறார்.

துப்பாக்கிதாரி, இரானுவத்தின் குறிதவறாச் சுடும் அணியில் பணிபுரிந்தவரெனவும், ஆயுதங்கள் மேல் மோகம் கொண்ட ஆயுதங்களுடன் தான் எடுக்கும் படங்களை அவர் சமூகவலைத் தளங்களில் பகிர்ந்துகொள்பவரென்றும் தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வீடு வாங்குவதில் எழுந்த முரண்பாடு காரணமாக இச் சூட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக, காயப்பட்டவர்களுக்கு ஆறுதல்கூறுவதற்காகச் சம்பவ இடத்துக்குச் சென்ற தாய்லாந்தின் பிரதமர் பிரயுத் சான்- ஒச்சா கூறியிருக்கிறார்.

சூட்டுச் சம்பவம் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஒரு வீட்டில் ஆரம்பமாகிப் பின்னர் இராணுவ முகாமுக்கு நகர்ந்து இறுதியில் அங்காடியில் வந்து முடிந்திருக்கிறது. துப்பாக்கிதாரியின் கட்டளை அதிகாரியின் உறவினர் ஒருவருக்கும் துப்பாக்கிதாரிக்கும் இடையில் நடைபெற்ற காணி விவகாரம் தொடர்பாகவே சூடு நடந்திருக்கிறதென பிரதமர் மேலும் தெரிவித்தார்.

முகநூல் அவரது கணக்கை முடக்குவதற்கு முதல் அவரது இறுதியான பதிவு- “எனது விரல்கள் சுழுக்கெடுக்கின்றன. நான் சுடுவதை நிற்பாட்டவா?”

அங்காடி துப்பாக்கிதாரியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுப் பல மணித்தியாலங்களின் பின்னரே முகநூல் கணக்கு முடக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email
Related:  கொறோனாவைரஸ் | கொண்டாடும் சீனர்கள்!

Leave a Reply

>/center>