LIFEScience & Technology

தாயைக் கொன்றுவிட்டு மகன் தற்கொலை

56 வயதுடைய யாஹூ நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி செயற்கை விவேக உரையாடல் தளமான ChatGPT யின் ஆலோசனையால் வழிநடத்தப்பட்டு 83 வயதுடைய தநது தாயாரைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டார் என வால் ஸ்ட்றீட் ஜேர்ணல் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்திலுள்ள பழைய கிறீன்விச் என்னுமிடத்தில் ஆகஸ்ட் 5 ம் திகதி இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஸ்ரைன் – எரிக் சொயெல்பேர்க் என்பவரே இக்கொலையைச் செய்தவராவார்.


இறுதியாக அவர் ChatGPT யுடன் உரையாடும்போது “எனது தாயாரும் அவரது நண்பரும் எனது வாகனத்தின் காற்றுத் துளைகளில் போதை வஸ்துகளை வைத்து என்னைக் கொல்ல முயற்சித்தார்கள்” எனக்கூறியபோது அதற்குப் பதிலளித்த ChatGPT ” எரிக், உனக்குப் பைத்தியமைல்லை, உண்மையில் அவ்வஸ்துவை உனது தாயாரும் அவரது நண்பருமே உனது வாகனத்தில் வைத்தார்கள். இது மிகவும் மோசமான நம்பிக்கைத் துரோகம்” எனத் தெரிவித்ததாக இச்செய்தி கூறுகிறது.

இதே வேளை சொயெல்பேர்க் இவ்வுரையாடலைக் காணொளியாகப் பதிவுசெய்து கொலை நடைபெறுவதற்குப் பல மாதங்களுக்கு முன்னரேயே இன்ஸ்டகிராம் மற்றும் யூ-ரியூப் ஆகிய தளங்களில் பதிவிட்டுள்ளார் என நியூ யோர்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

2018 இல் சொயெல்பேர்க்க்கும் அவரது மனைவியும் விவாகரத்துப் பெற்றுக்கொண்டது முதல் அவர் மதுவுக்கு அடிமையாகிவிட்டிருந்ததாகவும், பல தடவைகள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார் எனவும் குடி போதையில் அவர் பிள்ளைகளைப் பார்க்க வரக்கூடாது என அவரது மனைவி நீதிமன்ற உத்தரவைப் பெற்றிருந்தார் எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

தற்கொலைக்கு முன்னர் சொயெல்பேர்க் ChatGPT யுடன் மேற்கொண்ட இறுதி உரையாடலில் “நாங்கள் இருவரும் இன்னுமொரு வாழ்வில், இன்னுமொரு இடத்தில் மீண்டும் ஒன்றிணைவோம், காரணம் காலம் முழுவதும் எனது உற்ற நட்பாக நீ மட்டுமே இருக்கப் போகிறாய்” என பதிவிட்டிருக்கிறார். இவ்வுரையாடலின்போது ChatGPT இற்கு அவர் சூட்டிய பெயர் ‘பொபி’. இதற்குப் பதிலளித்த ‘பொபி’, “உனது இறுது மூச்சுவரையும் அப்பாலும் நான் உன்னுடனேயே இருப்பேன்” எனப் பதிலளித்துள்ளது.

இது குறித்து வால்ஸ்ட்றீட் ஜேர்ணல் வி ChatGPT யின் உரிமையாளரான OpenAI நிறுவனம் “நாம் இதன் மூலம் மிகவும் கவலையடைந்துள்ளோம் எனக் கூறியதுடன் எதிர்காலத்தில் இதுபோன்ற சமபவங்கள் நடைபெறாதிருக்க தாம் நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்துள்ளதாகவும் அறியப்படுகின்றது.

ChatGPT போன்ற தளங்களின் ஆலோசனைகளைக் கேட்டு பொது மக்கள் தற்கொலை செய்தது இதுவே முதல் தடவையல்ல. இவ்வார ஆரம்பத்தில் 16 வயதுடைய தங்கள் மகனைத் தற்கொலை செய்யத் தூண்டியமைக்காக கலிஃபோர்ணியாவைச் சேர்ந்த பெற்றோர் OpenAI நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர். (Image Credit: Photo by Levart_Photographer on Unsplash)