தாஜ் மஹால், குதுப் மினாரை இடித்தழிக்க அஸ்ஸாம் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை

நினைவுச் சின்னங்களை அழித்துவிட்டு அதில் இந்துக்கோவில்களைக் கட்டவேண்டுமாம்!

இந்தியாவில் முகலாயரின் வரலாற்றை மறைத்தழிக்க பா.ஜ.க. இந்துத்வவாதிகள் மேற்கொண்டுவரும் முயற்சிகளின் தொடர்ச்சியாக தாஜ் மஹால் மற்றும் குதுப் மினார் போன்ற முகலாய மன்னரின் நினைவுச் சின்னங்களை இடித்தழித்துவிட்டு அவ்விடங்களில் இந்து ஆலயங்களைக் கட்டும்படி அஸ்ஸாம் மாநில பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் றுப்ஜோதி குர்மி பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாது சக்கரவர்த்தி சா ஜஹான் உண்மையிலேயே அவரது மனைவி மும்தாஜைக் காதலித்தாரா என்பதை அறிய விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டுமெனவும் குர்மி கோரியுள்ளார். சமூக வலைத்தள்ம் மூலம் அவர் இக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்நினைவுச் சின்னங்கள் இருந்த இடத்தில் உலகின் மிக அழகான இந்துக் கோவில்களைக் கட்டவேண்டுமெனவும் அவற்றுக்கு நிகராக உலகில் எந்தவொரு கட்டிடங்களும் இருக்கமுடியாத அளவுக்கு அவை வடிவமைக்கப்படவேண்டுமெனவும் இதற்காகத் தான் தனது ஒரு வருட சம்பளத்தைத் தானமாகத் தர்விரும்புவதாகவும் குர்மி தெரிவித்துள்ளார்.

குதுப் மினார் என்பது முகலாயர்களின்னால் டெல்ஹியில் 13ம் நூற்றாண்டளவில் செங்கற்களினால் கட்டப்பட்ட 5 மாடிக் கோபுரம். ராஜபுத்தானத்து மன்னர்களை முஸ்லிம்கள் வெற்றிகொண்டதை நினைவுகூர்வதற்காக இக்கோபுரம் எழுப்பப்பட்டது.

பாடப்புத்தகங்களிலிருந்து முகலாய வரலாறு நீக்கம்

இதற்கு முன்னர், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய ஆணையம் (National Council of Educational Research and Training (NCERT)) 12ஆம் வகுப்புக்கான வரலாற்று பாடப் புத்தகங்களிலிருந்து முகலாய சாம்ராஜ்யம் பற்றி தகவல்களை நீக்க முடிவெடுத்திருந்தது. இம்முடிவை வரவேற்று இன்னுமொரு பா.ஜ.க. தலைவர் கபில் மிஷ்ரா என்பவர் வெளியிட்ட ருவிட்டர் செய்தியில் ” கள்வர், பணம் பறிப்பவர்கள், இரண்டு சத வழிப்பறிக்காரர் ஆகியவர்களை நாம் முகலாய சக்கரவர்த்தி என்றும், இந்தியாவின் சக்கரவர்த்தி என்றும் அழைத்து வந்திருக்கிறோம். அக்பர், சா ஜஹான், பாபர், ஒளரங்கஷீப் ஆகியோர் இனிமேல் வரலாற்றுப் புத்தகங்களில் இடம்பெறமாட்டார்கள். இனிமேல் அவர்கள் எல்லாம் குப்பைக் கூடைக்குள்” எனத் தெரிவித்துள்ளார்.