EntertainmentIndiaNews

‘தளபதி’ விஜய்யின் ‘பீஸ்ட்’ (Beast) – ஏப்ரல் 13 திரைக்கு வருகிறது

ரசிகர்களின் ஆவலைத் தணிக்கும் வகையில் ‘தளபதி; விஜேயின் அடுத்த படமான பீஸ்ட் (Beast) ஏப்ரல் 13 அன்று திரைகளுக்கு வரவிருக்கிறது என அதன் தயாரிப்பாளர்களான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. போர்க்களச் சீருடையுடன் ரைபிளைக் காவிக்கொண்டு வெறிகொண்ட முகத்துடன் காணப்படும் விஜேயின் படமொன்றைத் தாங்கிய போஸ்டர் ஒன்றுடன் கூடிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் தனது ருவிட்டர் மூலம் வெளியிட்டிருக்கிறது.

அனிருத் இசையில், விஜே தனது சொந்தக் குரலில் பாடியிருக்கும், இப் படத்தில் வரும் இரண்டாவது பாடலான ‘ஜொலி ஓ ஜிம்கானா’ என்ற பாடல் சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டபோது அதற்கு சமூகவலைத்தளத்தில் 1.7 மில்லியன் விருப்புகள் கிடைத்திருக்கின்றன எனக் கூறப்படுகிறது. இப் படத்தின் முதற் பாட்டான ‘அரபிக் குத்து’ பாடல் வெளிவந்தபோது அதற்கும் சமூக வலைத் தளங்களில் பரபரப்பான வரவேற்புக் கிடைத்திருந்தது. ‘அரபிக் குத்து’வை வைத்து பலவகையான நகைச்சுவை வீடியோக்களும், டான்ஸ் வீடியோக்களும் ரசிகர்களால் வெளியிடப்பட்டிருந்தன. இப் படத்தின் இயக்குனரும், கதை ஆசிரியர் சிவா கார்த்திகேயன் ஆகிஒர் இணைந்து ‘அரபிக் குத்து’ பாடலுக்கு தாமும் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தனர். பெப்ரவரி 14 அன்று இக் காணொளி யூ டியூப்பில் வெளியிடப்பட்டு 7 நிமிடங்களில் 451,000 பேர் அதைப் பார்த்தும், 176,000 பேர் ‘தம்ஸ் அப்’ மூலம் தமது விருப்புகளைத் தெரிவித்தும் சாதனையை நிலைநாட்டியுள்ளனர். மார்ச் 19 இல் வெளியிடப்பட்ட இரண்டாவது பாடலான ‘ஜொலி ஓ ஜிம்கானா’ 1.7 மில்லியன் விருப்புகளையும், வெளியிட்டு 24 மணித்தியாலங்களில் 15 மில்லியன் பார்வைகளையும் பெற்றிருக்கிறது என சன் பிகசர்ஸ் தெரிவித்துள்ளது.

ஒரு சிறு தீவில் வாழும் சமூகத்தைச் சேர்ந்த மனக்குழப்பத்துக்குள்ளான ஒரு இளம் பெண் ஒரு அந்நிய மனிதரின் ஆளுமைக்குள் அகப்ப்ட்டுவிடுகிறாள். மிகுந்த கட்டுப்பாடுகளைக் கொண்ட குடும்பத்திலிருந்து அவளை வெளிக்கொணரும் வகையில் அம் மர்ம மனிதன் அவளுக்கு பலமூட்டுகிறான். அம் மர்ம மனிதன் பலவிதமான கொலைகளுக்கும் காரணமானவன் என்று குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும்போது அவனுக்குச் சார்பாக முழுமூச்சுடன் அவள் போராடுகிறாள் என்பது தான் கதை. மிகுதி வெள்ளித் திரையில்.

நெல்சன் திலிப்குமாரின் கதை, இயக்கத்தில் தயாரான இப் படம் நடிகர் விஜேயின் 65 ஆவது படமாகும். மிஸ்கினின் முகமூடி (2012) மூலம் அறிமுகமான நடிகை பூஜா ஹெட்ஜ், 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இப் படத்தின் மூலம் தமிழ்த் திரைக்கு வருகிறார்.

இசையமைப்பாளர் அனிருத் விஜேயுடன் இணைந்து செயற்படும் மூன்றாவது படம் இது. கத்தி, மாஸ்டர் ஆகிய விஜேயின் படங்களிலும் அனிருத் பணியாற்றியிருந்தர். கோவிட் பெருந்தொற்றினால் தடைப்பட்டிருந்த ‘பீஸ்ட்’ விஜே ரசிகர்களினால் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் ஒரு ‘அக்ஷன் திரில்லெர்’ ரகமான ஒன்று எனக் கூறப்படுகிறது.