தளபதி கரன்னகொட மீதான வழக்கை மீளப்பெறும்படி சட்டமா அதிபர் சஞ்சாய் ராஜரட்ணம் உத்தரவு
கொழும்பு புறநகர்ப்பகுதிகளிலிருந்து பல தமிழர்களுட்படப் 11 இளைஞர்களைக் கடத்திக் கொலை செய்தமை தொடர்பாக கடற்படைத் தளபதி வசந்தா கரன்னகொட மீது பதியப்பட்டிருந்த வழக்கை மீளப்பெறும்படி மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபர் சஞ்சாய் ராஜரட்ணம் உததரவிட்டுள்ளார்.

2008-2009 காலப்பகுதியில் கொழும்பிலும் புறநகர்ப்பகுதிகளிலுமிருந்து இளைஞர்கள் கடத்தப்பட்டு, அவர்களிடம் கப்பம் கேட்டுச் சித்திரவதை செய்யப்பட்டார்கள் எனவும் இதன்போது 11 பேர் கொல்லப்பட்டிருந்ததாகவும் குற்றவிசாரணைப் பிரிவின் விசாரணைகளின்போது தெரியவந்திருந்தது. கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவிடமிருந்தும் அப்போது வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது. இதன் விளைவாக முன்னாள் சட்டமா அதிபர் டப்புல டெலிவேரா கரன்னகொட உட்படப் 13 கடற்படையினர் மீது கடத்தல், சித்திரவதை, கப்பம் வாங்குதல், 11 பேரின் கொலைக்கான சூழ்ச்சி ஆகிய காரணங்களுக்காக வழக்குப் பதியத் திட்டமிட்டிருந்தார். ஆனாலும் ஜானாதிபதி விசாரணை ஆணையத்தின் அறிக்கையை வைத்துக்கொண்டு, இவர்களை விடுவிப்பதற்கான பின்னரங்க வேலைகளை அரசாங்கம் செய்து வந்தது. முன்னாள் சட்டமா அதிபருக்கும் இது தொடர்பாகப் பலவித அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்தன. அவரது பதவிக்காலம் முடிவுற்றதும், தற்போதைய சட்டமா அதிபர், இக் கடற்படையினர்மீது தான் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என நீதிமன்றத்துக்கு ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார்.
கடற்படையினரால் கடத்தப்பட்டுக் கொலைசெய்யப்பட்டவர்களின் பட்டியலில், ஏஸ்.ஏ.லியோன் ஸ்ரான்லி, றொஷான் லியோன் ஸ்ரான்லி, ஜோன் றீட், தியாகராஜா ஜெகன், ராஜிவ் நாகநாதன், ராமலிங்கம் திலகேஸ்வரன், பிரதீப் விஸ்வநாதன், மொஹாமெட் சாஜித், மொஹாமெட் டிலான், கஸ்தூரி ஆராய்ச்சிகே அந்தோனி, மொஹாமெட் அன்வார் முபாரக் ஆகியோர் அடங்குவார்கள்.
கரன்னகொடவின் விடுதலை தொடர்பாக ஐ.நா.மனித உரிமை சபை ஆணையாளரும், இதர மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்தும் கரிசனை தெரிவித்து வருகின்றன.