தளபதிகள் மட்டுமல்ல சில படைப் பிரிவுகள் முழுமையாகக் கறுப்புப் பட்டியலில் இடப்பட்டுள்ளன – அலி சப்றி
போர்க்குற்ற விசாரணைக்கான வெளிநாட்டுப் பொறிமுறைக்குத் திட்டவட்டமான மறுப்பு
நான்காம் ஈழப்போரின்போது (2006-2009) வன்னித்தளத்தில் பங்குபற்றிய சில படைப்பிரிவுகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன எனவும் இது இலங்கையின் ந்ற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி தெரிவித்துள்ளார். இம்மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 51 ஆவது அமர்வுக்குச் செல்வதற்கு தயாராகிவரும் அமைச்சர் சப்றியிடம் கொழும்பு பத்திரிகையான ‘ஐலண்ட்’ கேட்ட கேவிகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்.
சரத் ஃபொன்சேகா, ஷவேந்திர சில்வா, சகீ கலகே ஆகிய முன்னாள் தளபதிகள் மீது சுமத்தப்பட்டிருக்கும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விக்கிரமசிங்க அரசு என்ன செய்யவிருக்கிறது எனக் கேட்கப்பட்டபோதே அமைச்சர் சப்றி மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயத்தில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எடுத்த நிலைப்பாடே தன்னுடையதும் எனவும் எந்தவொரு நடவடிக்கையை எடுத்தாலும் அது இலங்கையின் அரசியலமைப்புக்குட்பட்டதாகவே இருக்குமெனவும் அவர் தெரிவித்தார்.
ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 51 ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்றியும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் அடுத்த வாரம் ஜெனிவா செல்லவுள்ளனர்.
இலங்கையின் படைத்தளபதிகள் மற்றும் படைப்பிரிவுகள் மீது விதிக்கப்பட்ட தடைகளால் அவர்கள் ஐ.நா.வின் அமைதிப்படைகளில் சேர்ந்து இயங்க முடியாது உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். இறுதிப் போரில் நடைபெற்ற விடயங்களை ஆராய ஒரு ‘உண்மை தேடும் ஆணையத்தை’ உருவாக்க இலங்கை அரசு தயார் எனவும் அப்போது தமது தரப்பு நியாயங்களைக் கூறுவதற்கு இராணுவத்தினருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்படுமெனவும் அமைச்சர் சப்றி தெரிவித்தார். அதே வேளை போர்க்குற்றங்கள் பற்றிய உணமிகளைக் கண்டறிய வெளிநாட்டுப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவது பற்றிய ஆலோசனை செயற்படுத்தப்பட முடையாத ஒன்று எனவும் அவர் தெரிவித்தார்.