தலை பதி! – விஜே என்றொரு Beast வருகிறது!
மாயமான்
விஜ்ய்யின் ரசிகர்களுக்கோர் நற்செய்தி – அதாவது அவரின் ‘பீஸ்ட்’ ட்றெய்லெர் என்று சொல்லி ஒரு முன்னோடியை அதன் தயாரிப்பாளர்கள் ஓட விட்டிருக்கிறார்கள். இதைக் கண்டதும் பானைக் கடைக் காரரும், பால் கடைக் காரரும் தங்களது விலைகளை உயர்த்திவிட்டார்கள் என்பது இதன் ரசிகர்களுக்கு துர்ச் செய்தி.
சும்மா சொல்லக் கூடாது பெடியன் விஜே, தலை நரைச்சும் சின்னப் பெடியனாகவே இருப்பதால் ‘leaner, meaner and stronger’ என்ற சுலோகத்துடன் விளம்பர ட்றெய்லர் ஓடுகிறது. கனடாவில் சின்னப் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்கும்போது அம்புலி மாமாவைக் காட்ட முடியாததால் விஜையின் படத்தைப் போட்டுவிட்டு சாப்பாடு தீத்துவது வழக்கம். இன்னும்மிரண்டு தலைமுறைத் தாய்மார்களுக்கு அந்த விடயத்தில் பிரச்சினை இல்லை.
ஏப்ரல் 2ம் திகதி வெளியாகியிருக்கிறது ‘பீஸ்ட்’ ட்றெய்லர். படம் ஏப்ரல் 13 சித்திரை புத்தாண்டு வெளியீடாக வருகிறது. படம் வேறொன்றுமில்லை ஒரு அக்ஷன் திரில்லர். பானையும் பழசு பாலும் பழசு ஆனால் அடுப்புத் தான் புதிசு. கிராபிக் நெருப்பில் பொங்கல் நன்றாக வெந்திருக்கிறது.
சென்னையிலுள்ள ஈஸ்ட் கோஸ்ட் மால் ஒன்று பயங்கரவாதிகளால் ஹைஜாக் பன்ணப்பட்டுவிட்டது என்ற ஒருவரது அறிவிப்புடன் தொடங்கும் ட்றெய்லெர் பரபரப்பான துப்பாக்கி வேட்டுகளுடன் தொடர்கிறது. நத்தார் சோடனைகளுடன் பூரித்துப் போயிருக்கும் மாலில் சான்ரா குளோஸ் வேடங்களைப் போட்டுக்கொண்டு பயங்கரவாதிகள் ஷொப்பிங்க் செய்ய வந்தவர்களை உட்காரவைத்திருக்கிறார்கள். பார்த்தவுடன் பாடசாலைப் பிள்ளைகளுக்கு இயக்கக்காரர் வகுப்பெடுத்த ஃபீலிங்க் சிலருக்கு வரலாம். பின்னர் விஜே களத்தில் இறங்கி ‘இல்லை அவர்கள் வேறு’ என்று நிரூபித்து விடுகிறார். சும்மாவே கைகளைச் சுழற்றும் ஒருவரது கைகளில் துப்பாக்கிகளையும் கத்திகளையும் கொடுத்தால் எதிரிகள் சிதறிப் போவார்களா மாட்டார்களா?. குண்டுகளும் இரத்தமும் போட்டி போட்டுக்கொண்டு பறக்கின்றன. ஒரு விடயம்- இவை அனைத்தையும் வழமை போல அவர் தனித்து நின்றே செய்கிறார். இந்த இடத்தில் தாய்மாருக்கு ஒரு செய்தி வீட்டில் கூரிய கத்திகள் இருந்தால் ஒளித்து வைக்கவும்.
இது விஜய்யின் 65 ஆவது படம். நெல்சன் டிலிப்குமார் இயக்கியிருக்கிறார். நடிகை பூஜா ஹெக்டே விஜய்யின் தோழி. சிவகார்த்திகேயன் எழுதி அனிருத்தின் இசையமைத்த ‘அரபிக் கூத்து’ பாடலும், விஜய் தனது சொந்தக் குரலில் பாடிய ‘ஜொலி ஓ ஜிம்கானா’ பாடலும் இந்தப் படத்தில் தான். அவை தனியாக ஏற்கெனவே வெளியிடப்பட்டு படத்திற்கான போதுமான விளம்பரங்களை தயாரிப்பாளர்களான ‘சன் பிக்ஷர்ஸ்’ இற்குக் கொடுத்துவிட்டன. போர் விமானங்களை ஓட்டும் விமானியாக விஜய்க்கு ஒரு திரில் கொடுப்பதற்கென கிராபிக்குகளை அள்ளிப் போட்டுத் துவைத்திருக்கிறார் இயக்குனர். வீடியோ கேம்களுக்குப் பரிச்சயமில்லாத அப்பாவிகளுக்கு இது கொஞ்சம் திரில்லாக இருக்கும் தான். என்னவோ முன்னர் கல்கியில் வரும் சித்திரக் கதைகளில் ‘இதோ பிடி’, ‘ஐயோ’ என்ற குமிழிகளுக்குள் பதுங்கியிருக்கும் வார்த்தைகளும் அச் சித்திரங்களுமே மனதுக்கு வருகின்றன. MGM, Disney ஸ்ரூடியோக்களில் இவை எப்படிப் படமாக்கப்படுகின்றன என்பதை நேரில் பார்த்ததன் தாக்கம் இன்னும் விட்டுப் போகவில்லை என்பதால் இது கொஞ்சம் bias ஆக இருக்கலாம்.
பாகுபலி போன்ற படங்களிலும் ஏகப்பட்ட கிராபிக்ஸ் இணைக்கப்பட்டதால் அது பிரமாண்டமாக்கப்பட்டது. ஆனால் அதில் இழையோடிய கதை பார்வையாளரின் கவனத்தைக் காட்சிகளில் பதியாமல் எடுத்துவிட்டது எனபதே அது போன்ற படங்களின் வெற்றிக்குக் காரணம். கதையும் ஈர்ப்பில்லாமல் வசனங்களும் ஈர்ப்பில்லாமல் தவிக்கும் படங்களில், காட்சிகளே பார்வையாளரின் கவனத்தை ஈர்ப்பது தவிர்க்க முடியாமலாகிவிடுகிறது. எப்போதும், எல்லாவற்றுக்கும் புதியவர்களும், அப்பாவிகளும் தாராளமாகக் கிடைப்பார்கள் என்பதால் இதுவும் ஓடும். முழுப் படமும் வெளியானபின் மீதி…இக் குறுந்திரையில்….