‘தலைவி’ – ஆகஸ்ட்டில் திரைக்கு வருகிறார்

கங்கனா றனோ நடித்த ‘தலைவி’ படத்திந் தமிழ் பதிப்பு ஆகஸ்ட் மாதமளவில் வெளிவரலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தணிக்கைச் சபையின் அனுமதி ‘U’ தராதரத்தில் (எதுவுமே வெட்டியகற்றப்படவில்லை) சமீபத்தில் வழங்கப்பட்டிருக்கிரது. இப் படத்தின் ஹிந்தி, தெலுங்கு பதிப்புகளும் வெளிவரத் தயாராகின்றன.

கங்கனா பிரதம பாத்திரத்தில் நடிக்கும், ‘புரட்சித் தலைவி’ ஜயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு ‘தலைவி’ யின் திரைக்கதை அமைந்திருக்கிறது. பெப்ரவரி 24, 2019 இல் ஜயலலிதாவின் பிறந்தநாளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட படப்பிடிப்பு ஒரு வருடத்தில் முடிவடைந்து ஏப்ரல் 23, 2021 அன்று வெளியீட்டுக்கான திகதி குறிக்கப்பட்டிருந்ததாயினும், பின்னர் அது மாற்றப்பட்டு ஆகஸ்ட் 23 இற்குப் பின்போடப்பட்டிருக்கிறது. இப் படத்தை திரையரங்குகளில் வெளியிடவேண்டுமென்பதே தயாரிப்பாளர்களின் விருப்பமெனக் கூறப்படுகிறது.

இப் படத்தின் இந்திப் பதிப்புக்கு ‘ஜயா’ எனப் பெயரிடப்படவேண்டுமெனத் தயாரிப்பாளர் விரும்பியிருந்ததாகவும் பின்னர் அது ‘தலைவி’ என்றே வைக்கப்பட்டிருக்கிறது எனவும் தெரிய வருகிறது.

கடந்த மார்ச் மாதம் இப் படத்திந் வெளியீட்டுக்காக சென்னையிலும், மும்பாயிலும் மாநாடுகளுடன் கூடிய நிகழ்வுகள் பெரியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தும், கோவிட் தொற்று காரணமாக அவை பின்போடப்பட்டிருந்தன.

‘தலைவி’யாக நடிக்கும் கங்கனாவும் இப் படம் தமிநாட்டின் திரையுலகம் பற்றித் தனது அளவற்ற மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறார். தென்னிந்திய திரைத் துறையிலுள்ளவர்கள் வெளியிலிருந்து வருபவர்களை வரவேற்று ஆதரிக்கிறார்கள். அவர்களது அன்பும் ஆதரவும் இங்கு தங்கிவிடவேண்டுமென்ற ஆசையை எனக்குள் உருவாக்கிவிட்டது. இங்கு மேலும் பல படங்களில் நடிக்கவேண்டுமென நான் விரும்புகிறேன்” என அவர் தெரிவித்திருக்கிறார்.

அரசியல், சமூகம் சம்பந்தப்பட்ட விடயங்களில் அவர் சமீபத்தில் காட்டி வரும் அக்கறை அவரைப் பல சர்ச்சைகளில் மாட்டியிருப்பதும் அவை, அவரது படங்களை ரசிகர்கள் பார்ப்பதற்குத் தூண்டுபவையாக இருக்குமெனவும் தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். பொதுவாக ‘புரட்சித் தலைவி’ யின் ரசிகர்கள் திரையரங்குகளையே விரும்புபவர்கள் என்பதும் திரையிடலைப் பின்போட்டததற்கு காரணமாகும் எனவும் கூறப்படுகிறது.