Sri Lanka

தலைவர் மனைவி மகளுடன் நலமாக இருக்கிறார்!

மாயமான்

எந்தச் செய்திகளையும் பிந்தித் தரும் ‘மறுமொழிக்கு’ ஒரு செய்தி கிடைத்தது. இது ஒரு Broken News. அதாவது ஏற்கெனவே படுவேகத்தில் வலம் வருமொன்று. அத்தோடு உடைந்து இரண்டு செய்திகளாகவும் வருகிறது.

தலைவரின் மனைவி மதிவதனியின் அக்கா அருணா என்பவர் சமூக வலைத் தளங்களில் ஒலி, ஒளி வடிவங்களில் இச் செய்திகளை தருகிறார். நம்பக்கூடியதாக இருக்கிறது. அதனால்தான் தலைப்பில் கேள்விக்குறி இடப்படவில்லை.

ஒளி வடிவத்தில் “என் பெயர் அருணா. எனது தந்தை பெயர் ஏரம்பு என்று அவரது செய்தி தொடங்குகிறது. இது ஒரு தற்செயலான உரையாடல் இல்லை. ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் திட்டமிட்டு விடுக்கப்பட்ட செய்தி என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

மதிவதனியின் அக்காவான அருணா தான் நேரில் சென்று பார்த்து வந்ததாகவும் தலைவர், மனைவி மதிவதனி, மகள் துவாரகா எல்லோரும் சுகமாக இருக்கிறார்கள் எனவும் கூறுகிறார். இதைத்தவிர பிறிதொரு ஒலித்துண்டும் தனியாக வந்திருக்கிறது. அதில் தொலைபேசியில் ஒருவர் அருணாவுடன் பேசும் உரையாடலும் இடையில் அருணாவுடன் இருக்கும் இந்நுமொருவரின் குறுக்கீட்டு உரையாடலும் இருக்கிறது. இதில் தான் மேலும் அதிர்ச்சி தரும் விடயங்கள் உள்ளன.

செய்திகளை முந்தித தந்த அருணா

இவ்விரண்டு செய்திகளையும் கட்டுடைப்பு செய்தால் சில விடயங்கள் புரியும். தலைவர் நடமாடக்கூடிய நிலையில் இருக்கிறார் ஆனால் தலைமைத்துவத்தை இப்போது துவாரகா எடுத்திருக்கிறார். உடல் தளர்வான நிலையிலும் தலைவர் உறுதி குலைந்தது போல் தெரியவில்லை. அவர்கள் உயிருடனுள்ள செய்தியைப் பகிரங்கப்படுத்தவேண்டுமென்பது துவாரகாவின் திட்டம். வேடப் புலிகளுக்கு எச்சரிக்கை தரும் நோக்கத்தில் இச்செய்தி அமைவதாகவும் பார்க்கலாம்.

தலைவருடன் 100-150 ‘பெடியள்’ வந்ததாகவும் அவர்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் அருணா கூறுகிறார். புலம் பெயர்ந்த புத்திஜீவிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தவேண்டும் எனக் ‘குறுக்கிட்டவர்’ கூறிவிட்டு மிச்சத்தைப் ‘பாதுகாப்பு கருதி’ விழுங்கி விடுகிறார். எண்பதுகளில் வேடப் புலிகள் இப்படி விழுங்கி விழுங்கி சலிப்படையச் செய்ததனால் நம்பக் கொஞ்சம் கஷ்டமாகத்தானிருக்கிறது. இருப்பினும் அருணாவின் செய்தியில் பிரச்சாரம் இல்லை. உதவியேதும் கேட்டதாகவும் இல்லை. வெறும் செய்தி. “நான் நேரே சென்று பார்த்து வந்த இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்கிறார்.

தலைவர் குடும்பம் எங்கு இருக்கிறது என்பதை அருணா கூற மறுத்துவிட்டார். தன்னை உள்ளே அழைத்துப்போகும்போது ‘சிம் கார்ர்டுகள்’ இல்லாத பழைய ரக ஃபோன் ஒன்று தரப்பட்டது என்கிறார். இதைக் கேட்டபோது பொட்டரும் அங்குதான் இருக்கிறார் என்ற எண்ணம் ஏனோ வந்து போனது.

என்னதான் விமர்சனங்களை வைத்தாலும் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தி வேடப் புலிகளுக்கு நாராசமாக இருந்தாலும் அவரது விசுவாசிகளுக்கு இனிப்பான செய்தி – அருணா என்பவர் உண்மையாகவே மதிவதனியின் அக்கா என்பது உறுதிப்படுத்தும்வரை.

இச்செய்தி உண்மையானால் நெடுமாறன் ஐயாவிடம் மன்னிப்புக் கேட்கலாம். செயற்கை விவேக யுகத்தில் எதையும் இலகுவில் நம்பிவிடக் கூடாது. கருணா (நந்திக்கடலில் ) கூறியதும் இப்போது அருணா கூறுவதும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

அதுவரை மண்டையைப் பிய்த்துக்கொள்பவர்களுக்கு எமது அனுதாபங்கள்.

பி.கு.: இந்த செய்தித் துண்டுகளின் கீழே “தலைமைச் செயலகம்”, “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்பது போன்ற வசனங்கள் எதுவுமில்லை.