தலையங்கம் | இதுவும் கடந்து போகும்

 

நாளை எப்போதுமே நல்லதாக இருக்கும் என்ற நம்பிக்கை எல்லோருக்குமே உண்டு.

தன் குஞ்சுக்காக இரை தேடிப் போகும் பறவைகூடத் தான் திரும்பி வருவேன் என்ற நம்பிக்கையுடன் தான் செல்கிறது. சகல உயிரினங்களிலும் இந்த நம்பிக்கை ஆழப் புதைத்து வைக்கப்பட்டிருக்கிறது . அதுதான் இயற்கை. அதுதான் கடவுள் என்பதானால் அதுவும் நம்பிக்கை; நம்பிக்கைகள் மனத்தின் வழியாக இறங்கி உடலின் வழியாகச் செய்யும் அற்புதமே நமது உயிர் வாழ்வு.

இந்த வருடமும் கொரோணா அம்மையின் தயவில் தான் கழியப் போகிறது. வீட்டுக்கு வீடு அழுகுரல்கள் கேட்காமலில்லை. அம்மையை அடித்து விரட்ட முயற்சிக்கலாம். ஆனால் அதனோடு சமரசம் செய்து வாழப்பழகிக்கொள்வதே சாலச் சிறந்தது எனப்படுகிறது.

“இது எமது உலகமல்ல, வைரஸ்களின் உலகத்திலேயே நாம் வாழ்கிறோம்” என்றொரு விஞ்ஞானி கூறியிருந்தார். எமக்கு முன் பிறந்தது வைரஸ். எமக்கு அளிக்கப்பட்டது போலவே வாழ்க்கையின் சூட்சுமங்கள் அதற்கும் அளிக்கப்பட்டிருக்கும். எமக்கு மரணத்தில் விருப்பமில்லாததைப் போலவே அதற்கும் வாழ்வதில் விருப்பமிருக்குமென நம்பலாம். பிறப்பிலிருந்தே எமது வயிற்றில் வாழும் மில்லியன் கணக்கான நுண்ணுயிரிகளைப் போலவே அதுவும் வாழ்ந்துவிட்டுப் போகட்டும். இந்த சமரசத்துக்காகவே அது நம் விஞ்ஞானிகளுடன் பேரம் பேசுகிறது. அச் சமரசம் விரைவில் வரும் என்ற நம்பிக்கையோடு அது வாழ்கிறது. உடலுக்கு உபாதை தராத வரைக்கும் இருந்துவிட்டுப் போ என்று நமது உடல் கூறும்போதுதான் எமக்கு உண்மையான விடுதலை. இந்த உலகம் இதுபோல் ஆயிரம் கொள்ளை நோய்களைக் கண்டு வந்திருக்கிறது. தனது எதிரி யார் நண்பன் யார் என்பது உடலுக்குத் தெரியும்.

வைரஸ்களும் விஞ்ஞானிகளும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சமரசம் வரும்வரை பலப்பரீட்சைகள் நடக்கத்தான் செய்யும். அதுவரை முகக் கவசங்களையும், சமூக இடைவெளிகளையும் கடைப்பிடியுங்கள்.

இதுவும் கடந்து போகும். நம்பிக்கையோடிருங்கள்!

புது வருட வாழ்த்துக்கள்!

-ஆசிரியர்