தலைப்பகற்றிய கட்டுரை

சிவதாசன்

எச்சரிக்கை! இக் கட்டுரை சிலருக்கு அருவருப்பைத் தரலாம்.பலருக்கு வேடிக்கையானதாக இருக்கலாம். இது ஒரு ‘மஞ்சள்’ கட்டுரையல்ல.இதில் வெட்கப்படுவதற்கு என்று ஒன்றுமில்லை. சும்மா ஒரு தகவலுக்குத் தான். உள்ளே போக விபரம் புரியும்.

கனடாவின் சீ.பீ.சீ. வானொலியில் வாரநாட்களில் மாலை ஆறரையிலிருந்து எட்டு மணிவரை நடைபெறும் ‘As it Happens’ நிகழ்ச்சியைப் பிரபலமாக்கியவர்களில் மறைந்துமோன பார்பரா ஃபிறம் மற்றும் சமீபத்தில் ஓய்வு பெற்ற கரோல் ஓஃப் ஆகியவர்கள் முக்கியமானவர்கள். சர்வாதிகாரிகளையும், கொலைகாரர்களையும், நல்லவர்களையும், கெட்டவர்களையும், சுவாரசியமானவர்களையும், நீதி கேட்பவர்களையும் உலகெல்லாம் தேடிப்பிடித்து மிகவும் துணிச்சலோடு பேட்டி காண்பது இவர்களது வழக்கம். அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்னர் கரோல் ஓஃப் பேட்டி கண்ட ஒருவர் ஐஸ்லாண்ட் நாட்டைச் சேர்ந்த சிகுர்டூர் ஜார்ட்டர்சன். வானலைகளில் இப் பேட்டி இன்னமும் திரும்பத் திரும்ப ஒலிபரப்பப்படுமொன்று.

கதை இதுதான்.

ஐஸ்லாந்த்தில் ஜார்ட்டர்சன் ஒரு வரலாற்று ஆசிரியர். 1974 இல், அவருக்கு 33 வயதாக இருக்கும்போது அவருக்கு ஒரு ஆண் குறி கொடுக்கப்பட்டது. ஆண் குறி என்றதும் உங்கள் மனதில் ஒரு ஆண் மகன் தோன்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல. இவருக்குக் கொடுக்கப்பட்டது ஒரு எருதின் ஆண்குறி. காய்ந்து கருவாடாகிப் போயிருந்தாலும் ‘பொருள்’ நீளமாக இருந்தது. ஜார்டார்ஸன் கலந்துகொண்டிருந்த கும்மாளப் பார்ட்டி ஒன்றில் அவரது நண்பர் ஒருவரால் இப் ‘பொருள்’ பரிசளிக்கப்பட்டிருந்தது. ஐஸ்லாந்தில் நகர மறுக்கும் மாடுகளை அடித்து நகரவைப்பதற்கு இப் ‘பொருளைத்தான்’ பாவிப்பார்களாம். சிறுவனாக இருக்கும்போது ஜார்ட்டார்ஸன் இப்படி ஒரு ‘பொருளைக்’ கொண்டு மாடுகளை ஓட்டியிருந்தமையால் அவரது நண்பர் பகிடியாக இதை அவருக்குப் பரிசளித்திருந்தார். ஜார்ட்டசன் தனது அபூர்வமான பரிசை அவரது பாடசாலைக்குக் கொண்டுசென்று இதர ஆசிரியர்களிடம் காட்டிப் பெருமைப்பட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து அந்த ஆசிரியர்களும் தமக்குக் கிடைக்கும் விலங்குகளின் விநோதமான ‘பொருள்களைக்’ கொண்டுவந்து ஜார்ட்டர்சன் மடியில் திணிக்க ஆரம்பித்தார்கள். செய்தி நாடு முழுவதும் பரவியது. ஐஸ்லாந்து ஒரு ‘வேல் பிடிக்கும் நாடு’, அதாவது திமிங்கிலங்களைக் கூறுபோடும் நாடாகையால் திமிங்கிலப்பிடிகாரர்கள் தாம் இறைச்சிக்கு எடுத்தவை போக மீதியான ‘பொருட்களை’ ஜார்ட்டர்ஸனுக்கு அனுப்பி வைப்பார்கள். ஆண்குறிகளால் சூழப்பட்ட நிலையில் ஜார்டர்ஸனுக்கு ஒரு ஐடியா வந்தது. அவற்றையெல்லாம் கொண்டு இப்போது அவர் ஒரு மியூசியத்தை ஆரம்பித்தார்.

விளையாட்டில் தொடங்கிய ஒன்று வினையாகப் போய்விட்டது. இப்போது ஜார்ட்டர்சன் பலவிதமான உயிரினங்களின் ஆண்குறிகளைத் தேடி உலகெங்கும் திரிகின்றார். பல தசாப்தங்கள் கடுமையான உழைப்பின் பின்னர் 93 வித்தியாசமான விலங்குகளிலிருந்து பெறப்பட்ட 283 ஆண்குறிகளைச் சொந்தமாக்கியிருக்கிறார். அவரது மியூசியத்துக்கு Icelandic Phallological Museum என்று பெயர். அவரது கனவு உலகில் வாழ்ந்த சகல விலங்கினங்களினதும் ஆண்குறிகளைக் கொண்ட முழுமையான தொகுப்பொன்றை உருவாக்குவது. 2011 இல் அவருக்குக் கிடைத்த ஹோமோ சேப்பியன் ஆண்குறியுடன் அவரது கனவு இப்போது பூர்த்தியாகி விட்டது.

உலகின் பலதரப்பட்ட விலங்கினங்களினதும் ஆண்குறிகளை ‘ஒரே மேடையில்’ கண்டு களிக்க விரும்புபவர்கள் ஐஸ்லாந்து நாட்டின் தலைநகரான ரெய்க்ஜாவிக்குக்கு சுமார் பத்து டாலர்களுடன் போனால் உங்கள் கனவு சாத்தியமாகும். (இலங்கை ரூபாவுடன் போனவர்கள் திரும்பியதாகக் கேள்விப்படவில்லை).

மரப்பலகைகளாலான தட்டுகளில் சாடிகளில் ஃபோர்மல்டிஹைட் திரவத்தில் மகிழ்ச்சியோடு நீந்திக்கொண்டிருக்கும் இப் ‘பொருட்களில்’ ஆகச் சிறியவை கினி பன்றி, ஹாம்ப்ஸ்டர், முயல் ஆகியவற்றினது ஆகும். ஆகப் பெரியவை திமிங்கிலங்களினது, பல நூறு இறாத்தல்கள் எடையுடனானவையாகும். ஒரு திமிங்கிலத்தில் இருந்து வெட்டி எடுத்துக்கொண்டு வந்த ‘பொருள்’ 16 அடி நீளமும் 700 இறாத்தல் நிறையுடையதுமாகும் என்கிறார் ஜார்ட்டர்ஸன். ஆச்சரியம் என்னவென்றால் அது அத்திமிங்கிலத்தின் முழு ஆண்குறியுமல்ல, அதன் நுனி மட்டுமே.

ஆரம்பத்தில் ஜார்ட்டர்ஸன் இதை ஒரு பொழுதுபோக்காகவே செய்து வந்தார். அவரது பிரதான தொழில் கற்பிப்பது மட்டுமே. 1997 இல் அவர் 62 ஆண்குறிகளுக்குச் சொந்தக்காரர் ஆகியதும் தனது பொழுதுபோக்கை மக்களுடன் பகிர்ந்துகொள்ளத் தீர்மானித்தார். அவரது மியூசியத்துக்கு இப்போது வருடாந்தம் பல ஆயிரக்கணக்கான ஆண்குறி விசுவாசிகள் வருகிறார்கள். ஒரு சிறிய நுழைவுக் கட்டணம் உண்டு. பார்வையாளர்கள் அவரது மியூசியத்தை இலகுவாகக் கண்டுபிடிப்பதற்காக மியூசியத்துக்கு வெளியே மரத்தினால் செய்யப்பட்ட பாரிய ஆண்குறியொன்று குத்தி நிறுத்தப்பட்டிருக்கிறது. அது எந்த விலங்குக்குரியது என்பது இக் கட்டுரை ‘அச்சுக்குப்’ போகும்வரை கிடைக்கப்பெறவில்லை.

2004 இல் ஜார்ட்டர்சன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவரது மகன் சிகுர்ட்ஸன் இப்போது மியூசிய அலுவல்களைக் கவனித்து வருகிறார். வருடாந்தம் 14,000 பேர் வரையில் ஆண்குறி மியூசியத்துக்கு வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டுக்காரர். பெரும்பாலோர் கிசு கிசு குரல்களில் கதைக்கிறார்கள். அதற்காக நான் ஒன்றும் காமக் காட்சியகத்தை நடத்தவில்லை என்கிறார் சிகுர்ட்ஸன்.

என்னதான் இருந்தாலும் சக மனிதர் ஒருவரின் முழுமையான ‘பொருளைப்’ பெறுவது ஜார்ட்டர்ஸனுக்குச் சிரமமாக இருந்தது. அறுவைச் சிகிச்சைக்குப்போன சிலரின் பகுதியான ‘பொருட்களே’ ஆரம்பத்தில் கிடைத்தன. ஜார்ட்டர்ஸனுக்கு அதில் திருப்தி இல்லை. 2011 இல் ஐஸ்லாந்தின் சிறுநகரான அகுரெய்ரியிலிருந்து வந்த செய்தி அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அங்கு வாழ்ந்த மிக மோசமான ‘காமுகரான’ 95 வயது பால் ஆர்சன் என்பவர் இறந்துபோனார். வயதின் காரணமாக ‘பொருள்’ சுருங்கிப் போனாலும் அதுவும் சாடியொன்றில் வாடிப்போய்க் கிடப்பதாக ஜார்ட்டர்ஸன் பெருமைப்படுகிறார்.

சீ.பீ.சீ. வானொலியின் கரோல் ஓஃப் ஜார்ட்டஸனைப் பேட்டி கண்டபோது துளைத்து எடுத்து விட்டார். ஜார்ட்டர்ஸனும் நல்லதொரு பகிடிக்காரர். சாதாரண ‘தமிழ் வெட்கம்’ ஒன்றுமில்லாது கரோல் கேள்விகளைக் கேட்பது வழக்கம். அப்போது அவரிடமிருந்து ஒரு இடக்கு மடக்கான கேள்வி வந்தது. அதற்கு ஜார்ட்டர்ஸன் சொன்னார் “நீ உன்னுடைய அம்மாவிடம் கூடக் கேட்கமுடியாத கேள்வியை என்னிடம் கேட்கிறாய்” என்று. அவர் கேட்டது இதுதான். “நீங்கள் உங்களது ஆண்குறியை எப்போது மியூசியத்துக்குத் தானம் செய்யப்போகிறீர்கள்?”. அதற்கு அவர் சொன்னது “அது யார் முதலில் மரணிக்கிறோம் என்பதைப் பொறுத்தது. என் மனைவி முதலில் இறந்தால் நான் என்னுடைய ஆண்குறியை மியூசியத்துக்குக் கொடுப்பேன். நான் முதலில் இறந்தால் என் மனைவி அதை அனுமதிப்பாரோ தெரியாது”.

மேலும் மூன்று ஆண்கள், தாம் உயிருடன் இருக்கும்போதே தமது குறிகளைத் தானம் செய்வதாக வாக்களித்திருக்கிறார்களாம். அதில் ஒருவர் தான் தனது குறியில் பச்சை குத்தியிருப்பதால் அதை அகற்றுவதில் ஈடுபட்டு வருவதாகவும் அது முடிந்தவுடன் ‘அதைப்’ பத்திரமாக அனுப்பிவைப்பதாகவும் உறுதிசெய்துள்ளாராம். ஜார்ட்டர்ஸன் இதை வானொலியில் பகிரங்கமாகச் சொல்வதையும், கரோல் ஓஃப் அவரைக் கிண்டிக் கிண்டி எடுப்பதையும், நேற்றுங்கூட சீ.பீ.சீ. வானொலி ஒலிபரப்பியது. Journalism at its best.

ஐஸ்லாந்துக்கான விமானக் கட்டணம் பற்றி இப்போதைக்கு எதையும் கூறமுடியாதுள்ளமைக்காக மன்னிக்கவும்.