News & AnalysisSri Lanka

தலிபான் ஆட்சியை அங்கீகரித்தது இலங்கை!

ஆப்கானிஸ்தான் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் கொடுத்த வாக்குறுதிகளை ஏற்றுக்கொண்டு அவர்களது அரசாங்கத்தை அங்கீகரிப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

“தற்போது தலிபான்கள் ஆட்சியை அமைத்திருக்கிறார்கள். அங்கு சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்பட்டு அங்கு வாழும் சகல மக்களினதும் கண்ணியமும், பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படவேண்டுமென இலங்கை அரசு கோரிக்கை விடுக்கிறது” என இலங்கை வெளிவிவகார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.

ஆட்சியைக் கைப்பற்றியதும், அங்கு வாழும் வெளிநாட்டவர்களுக்குத் தாம் ‘பொது மன்னிப்பை’ வழங்குவதாக தலிபான்கள் அறிவித்தமை குறித்துத் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் தலிபான்கள் அவ் வாக்குறுதியைக் காப்பாற்றுவர்கள் எனத் தாம் நம்புவதாகவும் இலங்கை அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தலிபான் ஆட்சியில், இஸ்லாமிய பண்பாடுகளைப் பேணும் விதத்தில் பெண்கள் வேலை செய்யவும், மாணவிகள் பாடசாலை செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள் என அவர்கள் அறிவித்துள்ளார்கள். ஆனால் 1996 முதல் 2001 வரை தலிபான்களின் ஆட்சி நடைபெற்ற காலத்தில் ஆசிரியப் பணி புரிந்தமைக்காகப் பெண்கள் பகிரங்கமாகக் கசையடி கொடுக்கப்பட்டும், குற்றம் செய்தவர்கள் எனச் சந்தேகப்படுபவர்கள் பகிரங்க இடங்களில் வைத்துத் தலைகள் துண்டிக்கப்பட்டும், மாணவிகள் பாடசாலைக்குப் போவது தடை செய்யப்பட்டும், இசையை ரசிப்பவர்களது காதுகள் அரியப்பட்டும் பல் கொடுமைகள் நடைபெற்றிருந்தன.


ஆனால் எப்படியான ‘இஸ்லாமிய பண்பாடுகளைத்’ தாம் பின்பற்றுவோம் என்பதைத் தலிபான்கள் இதுவரை வரையறுத்துக் கூறவில்லை. சில தலிபான் தளபதிகள் தமது பெண் குழந்தைகளைப் பாடசாலைகளுக்குப் போக அனுமதிக்கப்போவதில்லை என வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் தலிபான்களின் ஆட்சியை ஆதரித்து அறிக்கைகள் விடுத்திருந்தாலும் எவரும் இதுவரை தலிபான்களின் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை.

86 இலங்கைக் குடிமக்கள் ஆப்கானிஸ்தானில் வாழ்ந்து வந்ததாகவும் அவர்களில் 46 பேr ஏற்கெனெவே வெளியேற்றப்பட்டுவிட்டனர் எனவும், 20 பேர் சனியன்று (21) வெளிறுவதாகவும், மீதி 20 பேர் தாம் தொடர்ந்தும் அங்கு வாழ விரும்புவதாகத் தெரிவித்ததாகவும் தெரிய வருகிறது.