தற்குறிகள்
உரத்து யோசித்தல்
சிவதாசன்
நேற்று நண்பர்களிடையே ஒரு விவாதம் எழுந்தது. அது ‘தற்குறி’ என்றால் என்ன என்பது பற்றி. தமிழ்நாட்டு அரசியல் விவாதத்தின் சூட்டைக் குறைப்பதற்காக நண்பர் ஒருவர் இடைச்செருகிய ஒரு – sub-routine – குட்டி விவாதமிது. பின்னாலிது பெரும் விவாதமாக மாறுமென நான் எதிர்பார்த்திருக்கவில்லை.
தமிழ்நாட்டு அரசியலில் நடிகர் விஜய்யின் வருகையும் அதன் தாக்கங்களும் பற்றி ஆரம்பித்த இவ்விவாதத்தில் விஜய் உட்பட அவரைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்கள் அனைவரும் தற்குறிகள் என்றார் ஒரு நண்பர். சூடு / சூது கவ்விக்கொண்டது. 50 dB இல் ஆரம்பித்த உரையாடல் 70 dB யைத் தாண்டும்போது செவிப்பறைகள் அதிரத் தொடங்கின. 85 dB சத்தத்தைத் தொடர்ந்து கேட்டால் காதுகள் செவிடாகிவிடும் என்கிறது விஞ்ஞானம்.
“தற்குறி” என்றால் கருத்தென்ன என்று ஒரு நண்பர் தூக்கிப் போட்டதும் சத்தம் 0dB க்குச் சென்றுவிட்டது. அங்கிருந்த எவருக்குமே அதன் கருத்து புரிந்திருக்கவில்லை. காரணம் இது இலங்கைத் தமிழ் அகராதியில் இருந்ததாக அறியப்படவில்லை. ஆனால் இதன் இன்னுமொரு பெயர் நமக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று.
தமிழ் சினிமா நமக்குத் தந்த பல அரும்பதச் சொற்களில் “தற்குறி”யும் ஒன்று என நான் நினைக்கிறேன். சினிமாவின் நகைச்சுவை இடைவேளைகளின்போது பெரும்பாலும் தெருவோரச் சல்லாபங்களிலிருந்து தெறித்துவரும் கிராமியச் சொல்லாடல்கள் பின்னர் mainstream இனால் உள்வாங்கப்பட்டு மருவிய தமிழாக வலம்வர ஆரம்பிக்கிறது. “தற்குறி” யும் அப்படியான ஒன்று தான்.
ஆலாபரணத்தை விட்டு விடயத்துக்கு வா தற்குறி என்று உங்களில் சிலர் என்னையும் திட்டக்கூடும். சரி …
“தற்குறி” என்பது படிக்காதவர்களை எள்ளி நகையாடும் ஒரு சொல் என்கிறது தமிழ் விக்சனரி. அதாவது கையெழுத்து வைக்கத் தெரியாத கிராமத்தவர்களிடையே சில உடன்பாடுகளை எட்டும்போது அதைப் பதிவில் வைப்பதற்காக (எழுதப்படும் ஆவணங்களில்) கையொப்பத்திற்குப் பதிலாக விரலடையாளத்தைப் பெறுவது நெடுநாள் வழக்கம். இதுவே ‘கையொப்பம்’ -அதாவது கையினால் ஒப்பமளிப்பது -எனப்படுகிறது. அப்போதைய சினிமாவில் இது ‘கைநாட்டு’ என அழைக்கப்பட்டது. இப்போ தானும் பரிணாம வளர்ச்சிக்குட்பட்டுவிட்டேன் எனப் பறை சாற்ற அது ‘தற்குறியாக’ வலம்வர ஆரம்பித்திருக்கிறது.
இதை விளக்க விஜயையோ அல்லது அவரது ஆதரவாளர்களையோ எடுத்ததற்கு மறைமுக காரணம் எதுவுமில்லை. கலகம் கொண்ட எனது நண்பர்களுக்கு இது தெரிந்திருந்தால் நிலைமை மோசமடைந்திருக்கலாம்.
சமஸ்கிருதம், லத்தீன் போன்ற மறைமொழிகள் போல திட்டுவதற்கென்றொரு மறைமொழியை யாராவது கண்டுபிடித்தால் உலகம் பல அனர்த்தங்களிலிருந்து விடுபடும்.
சரி அழைந்துவிட்டோம். மூழ்குவதில் என்ன கஷ்டம்?
நண்பர்களின் விவாதம் சூடேறிக்கொண்டிருந்தபோது எனக்குள் ஒரு விவாதம் எழுந்தது. “ஏன் இவர்கள் இலங்கை அரசியலை விட்டுவிட்டு தமிழ்நாட்டு அரசியலில் இந்தளவு அக்கறை காட்டுகிறார்கள்” என்று. மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரின் பெயர் தெரியாத இவர்களில் பலருக்கு தமிழ்நாட்டு மந்திரியின் இலங்கை மனைவி பற்றி நிறையத் தெரிந்திருந்தது. தமிழ்நாட்டின் GDP அவர்களது நுனிநாக்கில் தொங்கியது. தற்குறிகளென்று இவர்களை ஒருபோதும் சொல்ல முடியாது.
அந்தக்காலத்தில் எம்சீயார் – சிவாசி அல்லாவிட்டால் சீ.சீ.பொன்னம்பல vs தந்தை செல்வா தான் பெரும்பாலான அடிபிடிகளை ஆரம்பித்து வைக்கும். பின்னர் இயக்கங்கள் இவற்றுக்கு தற்காலிக விடுப்பைப் பெற்றுக்கொடுத்தன. அடிபிடிகள் தணிந்து கொலைகள் முன்னின்றன. 2009 இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. மீண்டும் அடிபிடிகள் முன்னுக்கு வராவிட்டாலும் தத்தம் குரல்களை உயர்ந்த்துவதற்கான சுதந்திரம் கிடைத்திருப்பது வரப்பிரசாதம் தான்.
சோக்கிரட்டீஸ், பிளாட்டோ காலத்தில் ஒரு விவாதம் இருந்தது. “எதையும் விசாரணையின்றி ஏற்றுக்கொள்ளலாகாது” என்பது இம்மேதைகளின் வாதம். அதே காலத்தில் கிரேக்கர்கள் அல்லாதவர்களை அல்லது தமது மொழி, கலாச்சாரத்தைப் பேணாதவர்களை பார்பேரியர்கள் என கிரேக்கர்கள் அழைத்தார்கள். பாபேரியர்கள் முன்னோர் நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரியத்தைப் பேணுபவர்கள். “ஏன்”, “எதற்கு” என்று கேட்காது மரபுகளைப் பின்பற்றுபவர்கள். சோக்கிரட்டீஸ், பிலேட்டோ போதனைகளால் ஈர்க்கப்பட்டவர்கள் சகலதையும் விசாரணை செய்து சரியான விடை கிடைக்காவிட்டால் குழம்பிய நிலையில் இருப்பார்கள். ஆனால் பாபேரியர்களோ நம்பிக்கையை ‘இன்னுமொன்றில்’ சாத்திவிட்டு மன அமைதியுடன் காரியங்களைப் பார்த்துக்கொள்வார்கள்.
தொன்மையான சமூகங்கள் தொடக்கம் சினிமா பைத்திய காலனிகள் வரை தற்குறிகளாக இருப்பது சிலவேளைகள் நல்லதுபோலத்தான் இருக்கிறது. ChatGPT பொதுமக்கள் பாவனைக்கு வந்தது முதல் இதுவரை 9 பேர் தற்கொலை செய்துள்ளார்களாம். எதையும் விசாரணைக்குட்படுத்தும்போது சரியா விடை கிடைக்காவிட்டால் விக்கிரமாதித்தன்களுக்கு மீண்டும் மரமேறுவதைத் தவிர வேறு வழியில்லை. தொழில்நுட்பம் இவ்விசாரணைகளைத் துரிதப்படுத்தியிருக்கிறது. AI தன்பாட்டிற்கு hallucination mode இல் சுத்திக்கொண்டிருக்கிறது. அதே வேளை தற்குறிகள் தர்பார் அமைத்திருக்கிறார்கள். அவர்கள் hallucinate பண்ணவில்லை. மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள் போலத் தெரிகிறது.
சுவீடனில் பாடசாலைகளில் மாணவர்கள் இனிமேல் கணனிகளைப் பாவிக்க முடியாது எனச் சட்டம் கொண்டுவந்திருக்கிறார்கள். சுய சிந்தனைகளை இனிமேல் contract இற்கு விட முடியாது. எமக்காக நாம் தான் சிந்திக்கவேண்டும்.
தற்குறிகளாக இருப்பது ஒருவகையில் நல்லது போலத்தான் இருக்கிறது.
Photo by Meg Jenson on Unsplash
