தயிர்: பெருங்குடற் புற்றுநோய்த் தடுப்பிற்கு உதவுகிறது
வாரமொன்றிற்கு இரண்டு தடவைகள் உணவுடன் தயிரைச் சேர்த்துச் சாப்பிட்டால் பெருங்குடற் புற்றுநோய் போன்ற சில வியாதிகள் தடுக்கப்படலாமென அமெரிக்காவில் செய்யப்பட்ட நீண்டகால ஆய்வொன்று தெரிவிக்கிறது.
தயிரில் வாழும் பக்டீரியா நமது சமிபாட்டுத் தொகுதியின் ஆரோக்கியத்தை வளப்படுத்துகிறது என ஆராய்ச்சியாளர் கூறிவந்தாலும் அது எப்படிச் சாத்தியமாகிறது என்பது பற்றிய பூரண விளக்கத்தைக் கூறமுடியாதிருந்தார்கள். தற்போது அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகம் மற்றும் பிறிக்ஹாம் மருத்துவமனை ஆகியன இணைந்து செய்த நீண்டகால ஆய்வு இதற்கான பதிலைத் தருகிறது.
பெருங்குடல் மற்றும் குதம் ஆகிய உறுப்புக்களில் தோன்றும் புற்றுநோய் உலகில் இதுவரை அறியப்பட்ட புர்றுநோய்களில் மூன்றாம் இடத்திலிருக்கிறது. இறப்பிற்குக் காரணமான புற்றுநோய்களில் இது இரண்டாமிடத்தில் இருக்கிறது. இப்புற்றுநோய்களைத் தடுக்கும் வழிகளை ஆராய்ந்தபோதே தயிரின் மகிமையை அவர்கள் அறிய நேரிட்டது.

பிறிக்ஹாம் பெண்கள் மருத்துவமனையைச் சேர்ந்த நோய்ப் தரவுச் சேகரிப்பாளரான ஷூஜி ஒஜைனோவின் ஆய்வின்போது கடந்த 30 வருடங்களாக 87,000 பெண்களினதும் 45,000 ஆண்களினதும் உணவுப் பழக்க வழக்கங்கள் அவர்களது குடற்சுவரில் எத்தைகைய பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன என்பதையும் அதே வேளை இவர்களின் சமிபாட்டுத் தொகுதியில் எவ்வகையான பக்டீரியாக்கள் வாழ்கின்றன என்பதையும் ஆராய்ந்ததன் பதிலாக இம்முடிவுகளை எட்டியிருந்தார். ஒட்டுமொத்தமாக ஏறத்தாழ 3 மில்லியன் வருடங்களுக்கான தரவுகளை இவ்வாய்வின்போது ஒஜைனோவும் அவரது குழுவும் பகுத்தாய்ந்தனர்.
எமது சமிபாட்டுத் தொகுதியில் வாழும் நுண்ணுயிர்கள், பெரும்பாலும் பக்டீரியா, எமது உடலின் ஆரோக்கியத்திற்குப் பெரும் பங்கு வகிக்கிறது என்பது ஏற்கெனவே நிறுவப்பட்ட ஒரு விடயம். அப்பென்டிக்ஸ் போன்ற குடலின் மறைவான பகுதிகளிலும் , குடற்சுவரின் சளிப் போர்வையிலும் தங்கியிருந்து நாம் உண்ணும் உணவைச் சமிபாடடையச் செய்வதன் மூலம் இன் நுணுயிரிகளும் நாமும் ஒரு பரஸ்பர உறவை உயிர் தோன்றிய காலத்திலிருந்து வளர்த்து வருகிறோம். பைஃபிடோ பக்டீரியம் என்னும் வகை குழந்தை பிறப்புடன் எமது உடலில் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. தாய்ப்பாலை அல்லது இதர பால் வகைகளையோ சமிபாடடையச் செய்து லக்டிக் அமிலமாக மாற்றுவது இந்த பக்டீரியம் தான். இதனால் இந்த பக்டீரியத்தை உணவுப்பொருட்களில் சேர்க்கிறார்கள். ‘புறோ பயோட்டிக்’ எனப்படும் குளிசைகள் மற்றும் தயிர் போன்ற உணவுகளில் இவ்வகை பக்டீரியம் சேர்க்கப்படுகிறது. இதே வேளை இவற்றைத் தவிர்த்த வேறு, எமது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பக்டீரியங்கள் உடலில் தொற்றும்போது மருத்துவர்கள் அவற்றை அழிப்பதற்கெனத் தரும் மருத்துவர்கள் தரும் அன்ரிபயோட்டிக் போன்ற மருந்துகளும், நமது உடலினால் சுரக்கப்படும் நோயெதிர்ப்பு சக்தியும் பக்டீரியாக்களைக் கொன்று விடுகின்றன. மிகையான அண்டிபயோட்டிக் பாவனையால் பைஃபிடோ போன்ற நல்ல பக்டீரியங்களும் சில வேளைகளில் அழிக்கப்பட்டு விடுகின்றன. உடலுக்கு உடனடி நிவாரணத்தை இச்சிகிச்சைகள் அளித்தாலும் நீண்ட காலத்தில் இவை வேறுவிதமான தீங்குகளுக்கும் காரணமாக அமைகின்றன. புற்றுநோய்கள் இப்படியான சில. இதே வேளை சில வகையான புற்றுநோய்களுக்கு நுண்ணுயிரிகளும் காரணமாக அமைகின்றன.
நமது உடலில் அதிகமாகத் ‘தேய்வனவுக்குள்ளாகும்’ உறுப்பாக குடற் சுவரைச் சொல்ல முடியும். கரடு முரடான உணவுகளும், எலும்புகள், முட்கள், அமிலம், காரம், நச்சுத் திரவம், இரசாயனப் பொருட்கள் எனச் சகலதும் எமது வாய்க்குள்ளால் போய் குதத்தினால் வெளியேறுகின்றன. இதனால் குடற்சுவர் அடிக்கடி காயப்பட நேரிடுகிறது. நல்ல காலமாக எமது உடலிலிருக்கும் ஒரு பண்பு இப்படிக் காயப்பட்ட இழையங்களை உடனடியாகத் திருத்தும் பொறிமுறையொன்றை உடல் கொண்டிருப்பது. அதாவது இப்படிக் காயப்பட்ட, செயலிழக்கப்பட்ட அல்லது முதிர்ச்சியடைந்த கலங்களை அழித்துவிட்டு அந்த இடத்தைப் புதிய கலங்களால் நிரப்பிக் கொள்வது. இதற்காகவே உடல் சில வேளைகளில் சுயமாகவும் அழற்சியைத் (inflammation) தோற்றுவித்து கலங்களைப் புதுப்பிக்க வழி செய்கிறது. ஒரு கலம் ஆகக்கூடியது 50 தடவைகள் கலப்பிரிகையடைந்ததும் முதுமையடைந்து விடுகிறது. இதன் பின்னர் தொடர்ந்தும் பிரிந்தால் ஆரோக்கியமற்ற கலங்கள் உருவாகிவிடும் என்பதனால் இம்முதிய கலங்கள் தொடர்ந்தும் கலப்பிரிகை செய்வதில்லை (senescence). முதுமையை அடைவதற்கு முன் பலம் குறைக்கப்பட்ட கலங்கள் (நிறமூர்த்த சிதைவு) கலப்பிரிகை (cell division) செய்யும்போது அவற்றில் சில பிறழ்வடைந்து புற்றுநோய்க் கட்டிகளாகப் பரிணமிக்கின்றன. அதே வேளை முதுமையடைந்த கலங்கள் கலப்பிரிகை செய்யாவிட்டாலும் கலங்களின் இதர தொழிற்பாடுகளைத் தொடர்வதால் இவற்றில் சில புற்றுநோய்க்கலங்களைத் தோற்றுவிப்பதுமுண்டு. குடற் சுவரிலேயே அதிக செப்பனிடும் வேலைகள் நடைபெறுவதால் இங்கு தான் அதிகம் புற்றுநோய்கள் தோன்றுகின்றன.
பைஃபிடோபக்டீரியம் பக்டீரியா தயிர் போன்ற புளித்த உணவுகளில் இருக்கிறது. ஆரம்பத்தில் இயற்கையாகப் பிறக்கும் குழந்தைக்கு தாயின் பெண்ணுறுப்பிலிருந்து இது தொற்றிக்கொள்கிறது. அதே வேளை மார்புப்பாலருந்தும்போதும் வாய் வழியாக இது குழந்தையைச் செந்றடைகிறது. புளித்த உணவை உண்ணும் பல கலாச்சாரங்களில் புற்றுநோய் குறைவாகவிருப்பது ஏற்கெனவே அறியப்பட்ட ஒன்று. இதற்குக் காரணம் பைஃபிடோ பக்டீரியம். சிறுகுடலில் இது அதிகமாக இருக்கிறது. தயிரிலும் இது இருக்கிறது. ஒஜைனோ குழுவினர் சேகரித்த மேற்கூறப்பட்ட தரவுகளின்படி வாரமொருமுறை இரு தடவைகளாவது தயிர் சாப்பிடுபவர்கள் 20% குறைவான புற்றுநோய்க்குக் காரணமாகிறார்கள் என அறியப்படுகிறது. குறிப்பாக சிறுகுடலின் மேற்பகுதிகளில் ஏற்படும் புற்றுநோயைத் தயிருணவு குறைக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்.
வயிறு மற்றும் பித்தப்பை புற்றுநோய் தோன்றுவதற்கான காரணிகள் பல. அவற்றில் முக்கியமானவை குடலின் அமிலத்தன்மை அதிகரிப்பு; ஒக்சிஜின் குறைபாடு; பித்தச் சுரப்பு; சமிபாட்டு நொதியங்கள்; நுண்ணுயிர்க் கட்டுப்பாடு. அதே வேளை பெருங்குடல் போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்களுக்கு பித்த உப்புகளின் குறைபாடு, நொதியங்களின் குறைபாடு; உணவுக் குறைபாடு (வெறுமையான குடல்); நுண்ணுயிரிகள் குழப்பங்களுக்குள்ளாதல் ஆகியன காரணமாகவுள்ளன. தயிர் போன்ற பைஃபிடோ பக்டீரியம் அதிகமாகவுள்ள உணவுப் பொருட்கள், குறிப்பாக புளித்த உணவுகள் புற்றுநோய் ஆரம்பிப்பதற்கான காரணிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன என்பதே இவ்வாராய்ச்சியிந் முடிவாக இருந்தாலும் மேலும் பல ஆராய்ச்சிகள் இது குறித்து மேற்கொள்ளப்படவேண்டும். உலகத்தின் சிறந்த உணவு இட்லி-சாம்பார் என அமெரிக்கா வாக்களித்தமைக்குக் காரணமுண்டு.
