Arts & Entertainment

தம்மம் சரணம் கச்சாமி: பா(வம்) ரஞ்சித், மீண்டும் பிரச்சினைக்குள்

தம்மம் – ஒரு பார்வை

மாயமான்

தமிழக இயக்குனர் பா.ரஞ்சித் மேலுமொரு பிரச்சினைக்குள் மாட்டியிருக்கிறார். இந்தத் தடவை புத்தரை அவமதித்து அவர் பிரபலமடைகிறார். பா.ரஞ்சித்துக்கும் பிரச்சினைகளுக்கும் மலைக்கும் மழைக்குமுள்ள தொடர்புண்டு. அடிக்கடி வரும். ஆனால் இந்தத் தடவை அவர் அவரது தொண்டரடிப்பொடிகளையே வஞ்சித்துவிட்டார். திருமாவளவனது சிறுத்தைகளே கோபம் கொண்டு விட்டன.

சம்பவம் இதுதான். ‘தம்மம்’ என்ற பெயரில் பா.ரஞ்சித் ஒரு குறும்படம் எடுத்திருக்கிறார். அதில் ஒரு சிறுமி புத்தர் சிலையொன்றின் தோளில் ஏறிநின்று பறக்க முற்படுவதுபோல பாசாங்கு செய்கிறார். இக் காட்சி புத்தரை அவமதிக்கிறது என்பதனால் அக் காட்சியை நீக்கவேண்டுமென்று கோரி தமிழ்நாடு புத்தசங்கத்தினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

‘பலியாள்’ -ஒரு தொகுப்பு (பாதிக்கப்பட்டவர்) (Victim, Anthology) என்ற தலைப்பில் நான்கு இயக்குனர்கள் சேர்ந்து ஒரு தொகுப்பை இயக்குகிறார்கள். Victim என்று அதற்குப் பெயர். ஒரு சம்பவம் நடைபெறும் பின்னணியைப் பொறுத்து அச்சம்பவம் வரைவுக்குட்படுத்தப்படுகிறது அல்லது பார்க்கப்படுகிறது என்பதே இப் படத்தின் மூலம். குறிப்பாக ஒரு சம்பவத்தில் பலியாக்கப்படும் ஒருவர் (victimized person) உண்மையான பலியாளா இல்லையா என்பதை அச்சமபவத்தின் பின்னணியை வைத்துத்தான் தீர்மானிக்கப்படவேண்டும் என்பது தான் இப் படத்தின் பின்னாலுள்ள தார்மீகம். சமூகத்தில் நடைபெறும் பல சம்பவங்களில் பலம் வாய்ந்த மர்ம விசைகள் பல சம்பவங்களின் பின்னணிகளை முற்றிலும் மாற்றி அப்பாவிகளை இலகுவாகப் பலியாட்களாக ஆக்கிவிடுவதை நாம் கண்டிருக்கிறோம். உதாரணமாக வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட ஒரு ஏழைப் பெண்ணை அந்த இடத்திற்கு வந்ததனால் தான் சம்பவம் நடைபெற்றது எனக் குற்றஞ்சாட்டி குற்றவாளியை விடுதலை செய்துவிடுவார்கள். Victim blaming என்று பொதுவாக அழைக்கப்படும் இப்படியான நடைமுறைகளினால் பொதுவாகப் பாதிக்கப்படுவது ஏழைகளும், ஒதுக்கப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களுமாக இருப்பது உலக நடைமுறை.

தமிழ்நாட்டில் சாதிமுறையாக ஒதுக்கப்பட்டவர்கள் பலியாட்களாக்கப்படுவது அடிக்கடி நிகழும் சம்பவம். பா.ரஞ்சித் இக் கொடுமையை வெளிக்காட்ட ‘தம்மம்’ என்ற குறும்படத்தை எடுத்து Victim தொகுப்பில் இணைத்திருக்கிறார். அவருடன் வெங்கட் பிரபு, சிம்பு தேவன், எம்.ராஜேஷ் ஆகியோரும் தம் பங்கிற்குக் குறும்படங்களை இணைக்கிறார்கள். மொத்தமாக நான்கு குறும்படங்கள் இணைந்து Victimஆக்கப்பட்டிருக்கிறது. பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து ‘அந்தோலொஜி’ என்று படம் காட்டுவது இப்போது இந்திய சினிமாவில் ஒரு trend. பா.ரஞ்சித் போன்றவர்கள் இதை சமூக, கலாச்சார, வரலாறுகளின் தொகுப்பாக நீட்டியிருக்கிறார்கள். எடுத்த விடயம் நல்லது என்பதில் சந்தேகமே இல்லை.

OTT தளங்களில் காட்டப்படும் Victim இல் பா.ரஞ்சித்தின் தம்மம் வெகுவாகப் புகழப்படுகிறது. ‘சாதி’ அரசியலை மையமாகக் கொண்டு கிராமமொன்றில் படமாக்கப்பட்ட தம்மம் புத்த சமயம் போதிக்கும் இரக்கம் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது.

ஒரு பசுமையான வெளியைப் பின்புலமாகக்கொண்ட ஒரு மரத்தின் அடியில் நிறுவப்பட்டிருக்கும் புத்தர் சிலையைக் குவிபுள்ளியாகக் கொண்டு நிலைகொண்டிருக்கிறது கமரா. சிலையின் பின் பக்கத்தால் ஏறும் கிராமத்துச் சிறுமி ஒருத்தி (கேமா) சிலையின் தோள்களில் ஏறிநின்றுகொண்டு பறக்கும் தேவதையொன்றை உருவகிக்கிறாள். இக்காட்சியுடன் படம் மட்டுமல்ல பா.ரஞ்சித்தின் பிரச்சினையும் இங்குதான் ஆரம்பமாகிறது.

பா.ரஞ்சித் சொல்லவந்த விடயத்தை இக் காட்சி தனியாக எடுத்தியம்பிவிடும் என எதிர்பார்க்க முடியாதுதானே. அதனால், தன் கருத்தியலைப் பார்வையாளருக்குப் புலப்படுத்த ரஞ்சித் இன்னுமொரு காட்சியைப் புனைகிறார். சிறுமியின் இச் செயலைப் பார்த்த அவளது தந்தையார் அச் சிறுமி ‘கடவுளை’ அவமதித்து விட்டதற்காக அவளை வைகிறார். அதற்கு அச் சிறுமி “கடவுள் என்ற ஒன்று இல்லையென்று புத்தரே சொல்லிவிட்டார் ஆனால் நீங்களோ அவரைக் கடவுள் என்கிறீர்கள்” என்று பதிலிறுக்கிறாள். அவளது கூற்று தந்தையாரைச் சிந்திக்க வைக்கிறது.

பா.ஜ.க. ஆட்சி இந்தியாவில் நிலைகொண்டதிலிருந்து மதம் மேலும் மதம் பிடித்து அலைகிறது என்பதை நாம் அனைவரும் ஒத்துக்கொள்வோம். ஒருவரது வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு சொற்களுக்கும் கூகிள் ஆண்டவரும் அவரது மைத்துனரான செயற்கை விவேகமும் (AI) நாளுக்கு நாள் புது அர்த்தங்களைக் கண்டுபிடித்துக் கொடுத்து வக்கீல்களின் பைகளில் பணத்தை வாரி இறைத்துவரும் இக்காலத்தில் perspective என்ற ‘பின்னணி’ அதி முக்கியத்துவம் பெறுகிறது.

நாம் மட்டுமல்ல பா.ரஞ்சித்தும் கூடவே எதிர்பார்த்தவாறு, ‘குய்யோ முறையோ’ கோஷ்டிகள் களமிறங்கி விட்டன. தமிழ்நாடு புத்த சங்கம் அதிலொன்று. அவர்களது விவேகத்துக்கு தக்க அளவுக்கே அவர்கள் கோஷமிட்டிருக்கிறார்கள் என நீங்கள் கூறினாலும், தொல் திருமாவளவன் போன்ற தலித் வியாபாரிகளும் போர்க்கொடி தூக்கியதுதான் கொஞ்சம் ஓவர்.

சாதி ஒடுக்குமுறையில் உலகில் இந்தியாவை வெல்ல வேறெந்த நாடுமில்லை. ஆனால் தமிழ்நாட்டில் அது ஒரு அரசியல் வியாபாரம். அதனால் அதன் இருப்பு இந்த வியாபாரிகளுக்கு மிக மிக அவசியம். இப் படத்தில் பா.ரஞ்சித் சொல்ல வந்ததும் அதுதான். அவரது வியாபாரத்துக்கும் அதுவே தான் முதலீடு என்பது வேறு விடயம். படத்தில் வரும் சிறுமி வேறு வழியின்றி ஒரு typical தமிழ்க் கிராமத்துச் சிறுமி. கொஞ்சம் கறுப்பாகவும், தடித்த மூக்குடனும் அச்சிறுமி இருந்தேயாகவேண்டும் என்பதில் இயக்குனர் குறியாக இருந்திருக்கிறார். இதுவே மணிரத்னத்தின் படமாகவிருந்தால், ஏன் சேரனது படமாகவிருந்தாலுங்கூட, அதில் வெள்ளைத்தோல் பம்பாய்ச் சிறுமி தோன்றியிருப்பாள். இங்கு பாத்திரம் வென்றுவிட்டது. அதற்காக பா.ரஞ்சித்துக்கு வாழ்த்துக்கள்.

இப்பாத்திரத் தேர்வின் மூலம் பா.ரஞ்சித் ஒரு பின்னணியைக் (perspective) கொண்டுவந்துவிடுகிறார். ஆனாலும், புரியாதவர்களுக்காக், புத்தர் சிலைமீது சிறுமியை ஏற்றித் தந்தையார்-சிறுமி உரையாடல் மூலம் மீதிப் பின்னணியையும் (பொழிப்புரை) தந்துவிடுகிறார். ஆனாலும் விடயம் பிடிபட மறுக்கிறது. அதனால்தான் ‘குய்யோ முறையோ’ கோஷ்டிகள் குரலெழுப்பத் தொடங்கிவிட்டன.

இப்படத்தின் மூலம் பா.ரஞ்சித் சொல்ல வந்தது ‘புத்த மதம் ஒருவரின் தளைகளை அறுத்து பூரண விடுதலையளிக்கிறது” என்பதைத்தான். கடவுள் சிலைகள் புனிதமானவை எனக் கருதும் இந்துக்களைக் குறிவைத்த பா.ரஞ்சித் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களுக்கு அஞ்சி புத்தர் மீது ‘தலித்’ சிறுமியை ஏற்றினாரா? தெரியாது. ஆனால் ‘தலித்துகளின்’ தளைகளை அறுத்து அவர்களை விடுதலை செய்வதுவே அவரது ஒரே நோக்கமாக இருப்பின் அதை இப்படிச் சொல்லியிருக்க வேண்டியதில்லை என்பதே திருமாவளவன் போன்றோரது வாதம். அதில் எனக்கு 100% வீதம் உடன்பாடு உண்டு என்றாலும் திருமாவளவன்கூட ஒரு வகையில் தனது கருத்தியல் பின்னணியை வைத்தே இந்த எதிர்ப்பைத் தெரிவிக்கிறார். அப்பின்னணி (perspective) அவர் மதிக்கும் அம்பேத்கார் ஒரு பெளத்த சமயத்தவர். இச்செய்கை மூலம் பா.ரஞ்சித் அம்பேத்காரையும் அவமதித்துவிட்டார் என திருமாவளவன் நினைத்தால் அவரோடு என்னால் உடன்பட முடியாது.

பா.ரஞ்சித்தின் இந்த உருவகம் அவர் கொண்டிருக்கும் கருத்தியல் தொடர்பான மிகச்சிறந்த விளக்கத்தைக் கொடுக்கிறது. ஒரு சில மணித்துளிகளேயானாலும் அது சொல்லவந்த செய்தி மிகவும் வலுவானது. ஆனால் அவர் சொன்ன விதத்தில் பொதிந்துள்ள கலைத்தன்மையைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் பலருக்கு இருக்காவிடினும் அக் காட்சியைத் தொடரும் உரையாடல் அப்பின்னணியைப் பூரணமாக்குகிறது. எனவே இப்படம் பலராலும் புகழப்படுவதற்கு நிறையக் காரணமும் இருக்கிறது.

தமிழ்நாடு புத்த சங்கம் கோபப்படுவதை அவர்களின் விவேகத்தின் பின்னணியில் வைத்துப் பார்த்து அனுதாபப்படுவதோடு நிறுத்திவிடுவது நல்லது. இக் காட்சிக்கான விளக்கத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தந்தாலும் தாம் அதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர்கள் மிரட்டியிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசைத் தலையிடும்படி கேட்டிருக்கிறார்கள். அது கொஞ்சம் ஓவர் தான். ஆனால் சமீபத்தில் தமிழ்நாடு அரசும் பல மடாதிபதிகளிடம் மண்டியிட்ட விவகாரங்கள் மனதில் எழுந்ததும் பா.ரஞ்சித் மீது அனுதாபம் பிறப்பதையும் நிறுத்த முடியவில்லை.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உதவிப் பொதுச் செயலாளர் கெளதம சன்னாவும் பா.ரஞ்சித் மீது பொங்கி வழிந்திருக்கிறார். அவர்களைப் பொறுத்தவரை அம்பேத்கார் புத்தரின் மறுபிறப்பு என நம்புபவர்கள். புத்தரைத் தனது தீண்டப்படாத உடலினால் அசிங்கப்படுத்திய சிறுமி அம்பேத்காரையும் அசிங்கப்படுத்திவிட்டார் என அவர்கள் தீர்க்கமாக நம்புகிறார்கள். ‘தீண்டப்படாமை’ குறித்து அவர்களுக்கு அக்கறையில்லை; அம்பேத்காரே அவர்களது பிரச்சினை. உயிரோடு இருந்திருந்தால் அம்பேத்காரே நேரில் வந்து அறைந்திருப்பார். சரி சிறுத்தைகள் புலிகள் இல்லை, ஒத்துக்கொள்கிறேன். ஆனாலும் அவர்கள் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களாக இருப்பதே ரஞ்சித்துக்கு ஆபத்தாக ஆகிவிடுமோ என்பதே எனது அச்சம்.

“அம்பேத்காரே புத்தரை வழிபட்டவர். அப்பேற்பட்ட புத்தரின் தலையில் ஏறிவிட்டு அதைப் பகுத்தறிவானது என நம்புவது அதியுச்ச அறியாமை. நாளை அம்பேத்காரின் சிலைக்குச் செருப்புமாலையைப் போட்டுவிட்டு அதையும் பகுத்தறிவு என இவர்கள் சொல்லப்போகிறார்கள்” என சன்னா சொல்லியிருக்கிறார். அவரது அறியாமையின் உச்சத்தை இதவிடச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்க முடியாது.

இன்னும் சிலர் கொஞ்சம் மென்மையாகத் தமது விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். “புத்தர் கடவுளில்லை என்பது தெரியும் ஆனால் ஒரு சிறுமியை அவரது சிலையில் ஏற்றித்தான் அதைச் சொல்ல வேண்டுமா? வேறு வழிகளே கிடையாதா. நாளை இன்னுமொருவர் அம்பேத்காரின் சிலையில் ஏறி அம்பேத்கார் கடவுளில்லை எனக்கூறினால் நாம் அதை ஏற்றுக்கொள்வோமா?” என்கிறார் கவிஞர் ஜிலுக்கார சிறினிவாஸ். பாவம் பெரியார் அறிவையா அறியாமையையா வளர்த்தார் எனக் கூறமுடியாமலிருக்கிறது.

இதிலிருந்து ஒன்று விளங்குகிறது. Victim போன்ற படங்களுக்கான அவசியம் தமிழ்நாட்டில் நிறையவே இருக்கிறது. திருவள்ளுவர் பிறந்த பூமியில் சொற்களுக்குப் பதமுரைத்தல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ கருத்துக்களை அவை வெளிப்படுத்திய பின்னணியில் வைத்துப்பார்த்து தெளிவுறுதலும் முக்கியத்துவம் பெறுகிறது. அதுவும் சொல்லவந்த விடயம் பிறிதொரு கலைவடிவத்தில் வெளிப்படுத்தப்படுமானால் அதைப் புரிந்துகொள்ள முடியாத சமூகத்துக்கு புதியதொரு பட / காட்சி அகராதியும் எழுதப்படவேண்டுமா என்பதும் துர்ப்பாக்கியமானதொரு கேள்வி.

தம்மம் சரணம் கச்சாமி!