தமிழ் மொழிக்குத் தனியான அமைச்சு வேண்டும் – கமல் ஹாசன் முதலமைச்சருக்குக் கடிதம்

தொன்மையான தமிழ் நூல்கள், அகராதிகள் போன்றவற்றைச் சேகரிப்பவர்கள், பதிப்பு செய்பவர்கள் மற்றும் மொழி வல்லுநர்கள் ஆகியோரைக் கெளரவிப்பமை போன்ற விடயங்களை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசு தமிழ் மொழிக்கெனத் தனியான அமைச்சு ஒன்றை ஏற்படுத்த வேண்டுமெனக் கோரி தமிழ்நாடு மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர், நடிகர் கமல் ஹாசன் முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலினுக்குக் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

நேற்று (20), முதலமைச்சருக்கு அவர் அனுப்பிவைத்த கடிதத்தில் தமிழ் மொழி அபிவிருத்திக்கெனத் தனியான அமைச்சு ஒன்றை மாநில அரசு ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

“”தமிழ் ஒரு செம்மொழி என இந்திய ஒன்றிய அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டு 17 வருடங்களாகியும் அதன் வளர்சிக்கும் அபிவிருத்திக்குமென எதுவுமே செய்யப்படவில்லை. ஒரு தடவை செனனை உயர்நீதிமன்றம் கூடத் தமிழை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படாமை குறித்து அதிருப்தியை வெளியிட்டிருந்தது.

திராவிடத் தலைவர்கள் இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக முன்னெடுத்த நடவடிக்கைகள் என்னை வெகுவாக உற்சாகமூட்டியிருந்தன. பின்னர் நான் இந்தி மொழிப் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். அது தொழில். இருப்பினும் இதுவரை அறியப்பட்ட மொழிகளில் தமிழ் மொழியைப் போல் இனிய மொழியொன்றைக் காண முடியாது. ‘தமிழ் வாழ்க’ எனற சொல்லாடலோடு மட்டும் நாம் திருப்திப்பட்டுவிட முடியாது. செயல் மூலமும் அதை நாம் காட்ட வேண்டும்” என அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவின் பல தேசிய் மொழிகள் அழிகின்ற நிலைமையில் இருக்கின்றன. ஆங்கிலம், பிரஞ்சு, ஜேர்மன், இந்தி மொழிகள் உலகம் முழுவதும் விசேட தராதரப் பத்திர கற்கை நெறிகள் மூலம் (Certification courses) வளர்க்கப்பட்டும், ஊக்கப்படுத்தப்பட்டும் வருகின்றன. தமிழுக்கும் இப்படியொரு ஒழுங்குபடுத்தப்பட்ட கற்கைநெறியொன்று உருவாக்கப்பட்டு பரீட்சைகள் நடத்தப்பட்டு தராதரப் பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும்.

தமிழில் புலமையுள்ளவர்கள், கலாச்சாரக் காவலர்கள், கிடைத்தற்கரிய அரிய நூல்களைப் பதிப்பிப்பவர்கள், அகராதிகளைப் பதிப்பிப்பவர்கள், அரிய தமிழ் நூல்களை மொழிபெயர்ப்பவர்கள் போன்றவர்களைக் கெளரவிப்பதன் மூலம் தமிழ் இலக்கியம் பேணப்படலாம். தமிழில் கல்வி கற்பவர்களுக்கு வேலை வாய்ப்பையும், பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்” என கமல் ஹாசன் மேலும் தெரிவித்தார். (தி தமிழ் மினிட்)