US & Canada

‘தமிழ் மேயர்’ பற்றிக் பிறவுண் in Trouble Again?

ஒன்ராறியோ மாகாணத்தில் அதிகமாக ‘கார் களவுபோகும்’ பிரமாண்ட நகரமாகிய பிரம்டன் நகரின் பிதாவின் சாதகத்தில் கிரகங்களிடையே மோதல் ஆரம்பித்துவிட்டது. இக்கிரகங்களில் யார் யாரைப் பார்த்தது யார் பார்வையத் தவிர்த்தது எது நீசமானது, எது நேசமானது எது நாசமானது என்று எல்லாரிடையேயும் ஒரே குழப்பம்.

அவர் நேசிக்கிறாரோ இல்லையோ தமிழர்களால் (சில?) மிகவும் நேசிக்கப்பட்டவரான பிரம்டன் நகரபிதா பற்றிக் பிரவுண் சர்சைகளுக்குப் புதியவரல்ல. அவர் எங்கு போனாலும் சர்ச்சை அங்கு முதலில் போய் காம்ப் அடித்துவிடுவது வழக்கம். கொஞ்ச நாளைக்கு முன்னர் அவரது கைத் தேர்வான பொலிஸ் அதிபர், நம்ம, நிசான் துரையப்பா இலங்கைக்குப் போய் இனப்படுகொலையாளிகளுடன் படமெடுத்த விடயத்தைப் பிதா காதும் காதும் கேளாது சாமர்த்தியமாகக் கம்பளத்தின் கீழ் மறைத்து சாகசம் பண்ணியிருந்தார். இதனால் Brampton Tamil Collective என்றொரு அமைப்பின் தேவை இல்லாமல் போய்விட்டது. அப்போது மாறிய கிரகம் போவதற்கு முன்னர் நல்ல வேலையைச் செய்துவிட்டுப் போய்விட்டது. ஆனால் வந்த புதுக்கிரகம் வேறு பிளானோடு வந்திருக்கிறது.

அது கொண்டுவந்திருக்கும் பிரச்சினை இதுதான். பிறம்டன் நகரசபையின் புத்தகங்களை உள்ளக ஓடிற் செய்தபோது கண்ட குளறுபடிகளைத் திரட்டி கடந்த பெப்ரவரி 06 அன்று அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. நகரத்தின் வரியிறுப்பாளர்களின் பணம் பெருந்தொகையாக ‘சூறையாடப்’ பட்டிருப்பது பற்றி இவ்வறிக்கை விலாவாரியாக வெளியிட்டிருக்கிறது என்கிறார்கள். நகரசபையின் ஒப்பந்தங்கள் பல, சீரான பதிவுகள் இல்லாது உள்வீட்டு வாசிகளுக்குக் கொடுக்கப்பட்டிருப்பது – அதில் பல தமிழர்களும் பலன்பெற்றிருக்கிறார்கள் என்பது பெருமகிழ்ச்சிக்குரிய விடயம் என்பது வேறு – கொள்வனவிற்கான முறையான பற்றுச்சீட்டுகள் இல்லாமை எனப் பல குளறுபடிகள் ஓடிற்றின்போது கிண்டியெடுக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் வழக்கம்போல “இவையெல்லாம் எனது அரசியல் எதிரிகளால் முன்னெடுக்கப்படும் பழிவாங்கல்” என நகரபிதா கிள்ளி எறிந்திருக்கிறார். ஆனால் இப்பிரச்சினைபற்றிக் கருத்துக்கூறிய யோர்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் சக்கரி ஸ்பைசர் ” தமது பணம் எப்படிச் செலவழிக்கப்படுகிறது என்பதை அறிவதற்கான உரிமை அந் நகரின் வரியிறுப்பாளர்களுக்கு உண்டு. எஅத அரசியல்வாதியாலும் அதஹித் தடுக்க முடியாது” எனத் தெரிவித்திருக்கிறார். எனவே நகரபிதா சிக்கலில் மாட்டியிருப்பது தெரிகிறது.

“ஆமை புகுந்த வீடு உருப்படாது” என்றொரு பழமொழி இருக்கிறது. அது ஏன் இப்போது ஞாபகத்திற்கு வந்தது என்று தெரியவில்லை, வந்ததும் கூறுகிறேன்.

ஒரு பொது நிறுவனம் தனக்கான கொள்வனவுகளைச் செய்வதற்கு முதல் குறைந்தது மூன்று வித்தியாசமான வழங்குனர்களிடமிருந்து அவற்றுக்கான விலைகளைப் பெறவேண்டும். அப்படியில்லாது ஒரே இடத்திலிருந்து கொள்வனவு செய்யப்படுகிறதென்றால் அதில் குளறுபடி இருக்குமென எதிர்பார்க்கலாம். செப்டம்பர் 2023 இலிருந்து மேற்கொள்ளப்பட்ட 16 கொள்முதல்கள் ஒரே இடத்திலிருந்து செய்யப்பட்டவை எனவும் அவற்றில் நான்கிற்கு முக்கியமான ஆவணங்கள் இல்லை எனவும் இவ்வறிக்கை கூறுகிறது. இவற்றிற்கான செலவு $900,000. இவற்றில் பல உள்வீட்டுக்காரர்களின் நிறுவனங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டவையாக இருக்கவேண்டும். அவற்றில் conflict of interest பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதும் இவ்வோடிற்றின் கண்டுபிடிப்பு.

பிறம்டன் நகரசபையின் உப விதிகளின்படி $25,000 இற்கு மேலான கொள்முதல்களுக்கு போட்டி முறையில் வழங்குனர்கள் தெரிவு செய்யப்படவேண்டும். ஆனால் $685,000 பெறுமதியான இரண்டு ஒப்பந்தங்கள் இப்படியான விதிகளை மீறியிருக்கின்றன.

பிறம்டன் பல்கலைக்கழக விடயத்தில் பல குளறுபடிகள் நடைபெற்றமை வெளியாகியதும் ஒன்ராறியோ மாகாணத்தின் ஓடிற்றர் போல் டுபே பிறம்டன் நகரசபையும் ஒரு ஓடிற்றரை நியமிக்கவேண்டுமெனப் பரிந்துரைத்திருந்தார். ஆனால் நகரபிதா இதற்கு இணங்கவில்லை. இப்போது உள்ளக ஓடிற் பல குளறுபடிகளைக் கண்டுபிடித்ததும் பல கவுன்சிலர்கள் கத்திக்குளற ஆரம்பித்திருக்கிறார்கள்.

கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் தேர்தலிலும் பற்றிக் பிரவுண் மீது பல புகார்கள் குவிக்கப்பட்டன. அவரோடு சேர்ந்து பணியாற்றிய ஒருவர் ஒற்றராகப் பணியாற்றியமை பின்னர் தெரியவந்தபோது அப்போதே அவருக்கு முன்னால் மூ… குறுக்கே வந்திருந்தது.

தமிழர்கள் அமைப்புகள் இரண்டு சேர்ந்து பெரும் பாடுபட்டு உழைத்து வடிவமைத்த ‘நினைவாலயத்துக்கான’ ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்துவிட்டு புதிய வடிவமைப்பை இன்னுமொரு தமிழர் குழுவுடன் சேர்ந்து நிறுவுவது தொடர்பாக தமிழர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுவதற்கு நகரபிதா காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டும் பரவலாக அடிபடுகிறது. “இவர் ஒரு ‘தமிழராக’ இருப்பதனால் தான் இவ்வளவு எதிரிகளைச் சுலபமாகச் சம்பாதிக்க முடிகிறது” என்று நக்கலடித்தார் திருவாளர் பொதுமகன்.

“அதே வேளை பெரும்பாலான அரசியல்வாதிகள் செய்யும் விடயங்களையே இவரும் செய்கிறார் என்பது நிஜமானாலும் இவர் மட்டுமே அடிக்கடி மாட்டுப்படுவதற்குக் காரணம் என்னவாக இருக்கும்” என்று திரு. பொதுமகன் என்னைக் கேட்டு ஒரு நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தார். நமக்கேன் வம்பு என்று நழுவிவிட்டேன். (மூலம் CBC) (Image Credit: Wikipedia)