Columns

தமிழ் மரபுத் திங்கள் – 2024

இன்று தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டம் கனடாவின் ஸ்காபரோ நகரிலுள்ள ரொறோண்டோ பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடந்தது; போயிருந்தேன். அந்த 150 இல் ஒன்றுதான் எனினும் பட்டொளி வீசிப் பறக்கவிட்ட கொடியின் கீழ் பல்விளம்பரம் செய்யும் மரபு இங்கிருக்கவில்லை என்பது கொஞ்சம் வித்தியாசம்தான். இக்கொடி கூட பலவடிவங்களை எடுத்துவந்து இப்போது தமிழரசுக் கட்சியின் உதயசூரியனுடன் நிற்பது கொஞ்சம் ஆறுதல்.

ரொறோண்டோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகமும் தமிழ் இருக்கை நிறுவனமும் கனடிய தமிழர் பேரவையும் இணைந்து நடத்திய இவ்விழாவிற்கான அழைப்பு பல்கலைக்கழகத்திடமிருந்து வந்திருந்தது. கடந்த ஒரு மாதமாக அழைப்பும் நினைவூட்டலுமாக ஒரு நிகழ்வை எப்படி ஒழுங்கு செய்யவேண்டுமென்பதற்கான நாகரிகத்தை இதனிடமிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

வசதியான பெரிய மண்டபம். ஆசனங்கள் நிரம்பியிருந்தன. தமிழ் மரபு உணவு வகைகள் பரவப்பட்டிருந்தன. யார் குத்திய அரிசியோ, பொங்கல் இனிமையாக இருந்தது. விழா உரிய நேரத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது. இரண்டு நடனங்கள். தமிழ் இருக்கையின் ஆரம்ப தலைவராகப் பொறுப்பேற்க இருக்கும் பேராசிரியர் சித்தார்த்தன் மெளனகுருவின் திரையுரை, நீண்டநாள் தமிழ்க் காவலர் பிரெண்டா பெக்கின் நேருரை முக்கிய அம்சங்கள். தட்டுத் தடுமாறினாலும் இளம் தமிழ்க்குஞ்சுகளின் மழலை ரசிக்கக்கூடியதாக இருந்தது.

‘இமாலய பிரகடனத்தைத்’ தொடர்ந்து கனடிய தமிழர் பேரவையை அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் புறக்கணித்திருந்த படியால் மேடையும் மைக்கிரோஃபோனும் ஆசுவாசப்பட்டிருந்ததை அவதானிக்ககூடியதாக இருந்தது. ஜெனிஃபர் மக்கெல்வி உட்படக் கனடிய தமிழர் பேரவையின் முதுகில் ஏறிக் களம்கண்ட பல அரசியல்வாதிகள் தமது முதுகுகளைக் காட்டிக்கொண்டமையால் பார்வையாளர்களுக்குச் சங்கடமில்லாமல் போனது. அவர்களும் பாவம் 150 க்கும் மேற்பட்ட நிகழ்வுகளுக்குப் போய் களைத்துப் போயிருப்பார்கள்.

கனடாவில் இப்போ முதியோர் சங்கங்களைக் கொண்ட்றாக்டில் எடுத்து தமது காரியங்களைச் சாதிக்கும் பழக்கம் தமிழ் அரசியல்வாதிகளிடம் வந்திருக்கிறது. தமது தேர்தல்களுக்குத் தொண்டாற்றுவதிலிருந்து விழா மண்டபங்களை நிரப்புவது வரை பாவம் இந்த முதியவர்கள் ஏற்றி இறக்கப்படுகிறார்கள். இச்சங்கங்களுக்கு அவ்வப்போது ஐஞ்சு, பத்து , இருபத்தைந்து (ஆயிரங்கள்) என்று அரசாங்கப் பணத்தை அள்ளி எறிந்து அவர்களது விழாக்களில் நீட்டி முழங்கி, ஈழத்தையும் அங்கு வாடும் மக்களையும் நினைவுகூர்ந்து அப்படியே ஐ.நா. சபையேறி, சர்வதேச நீதிமன்றத்தினால் இறங்கி திட்ட வேண்டியவர்களையும் திட்டிக்கொண்டு கைதட்டுக்களால் பைகளை நிரப்பிக்கொண்டு அடுத்த விழாவரை அஞ்ஞாதவாசம் செய்யப் போய்விடுவார்கள் இந்த அரசியல்வாதிகள். இன்றைய விழாவில் அது நடைபெறவில்லை. அடுத்த வருடம் ‘கனடியத் தமிழ் மரபுத் திங்கள்’ எனப்பெயரிட்டால் உண்மையான ‘தமிழ் மரபு’ பிழைத்துகொள்ள வசதியாக இருக்கும்.

காவல்துறையினரை அழைக்காமல் விழா இனிதே நடந்து முடிந்தது.