CultureTamil History

தமிழ் மரபுத் திங்கள் | ட்றினிடாட் அண்ட் ரொபாகோ தீவுகளில் தமிழ்க் கலாச்சாரம்

மாயமான்

தமிழ் மரபினைக் கொண்டாடும் மாதமாலத் தை மாதத்தைப் பிரகடனப்படுத்துவதில் கனடியத் தமிழர்கள் முன்னின்று உழைத்த வரலாற்றையும் நாம் பதிவு செய்துகொள்ளவேண்டுமென்பதைக் கூறிக்கொண்டு, இப்போது கரீபியன் தீவுகளில் ஒன்றான ட்றினிடாட் அண்ட் ரொபாகோ தீவுகளில் வாழும் மக்களிடையே வழக்கொழிந்துவரும் தமிழ்க் கலாச்சரத்தைப் பற்றிப் பதிவுக்காக இங்கு கொஞ்சம்.

ட்றினிடாட் அண்ட் ரொபாகோ என்ற தீவுக்கூட்டம் தென்னமெரிக்காவில், வெனிசுவேலாவுக்கு அருகில் இருக்கிறது. போர்ட் ஒ ஸ்பெயின் இதன் தலைநகர். தறபோதைய இதன் சனத்தொகை சுமார் 670,000. இதைவிட அமெரிக்காவில் சுமார் 125,000, கனடாவில் சுமார் 100,000 மற்றும் பிரித்தானியாவில் சுமார் 25,000 என ட்றினிடாடிய மக்கள் வாழ்கிறார்கள்.

இந்ங்கு வாழும் பல்லினத்தவர்களிலும் பெரும்பான்மையினர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், அடுத்தபடியாக கறுப்பினத்தவர்கள், ஸ்பானியர், அமெரிக்க இந்தியர், சீனர் எனப் பலரும் இங்கு வாழ்கிறார்கள். இத்தீவுகளுக்குப் பிற்காலத்தில் (20 ஆம் நூற்றாண்டில்) குடிபெயர்ந்த பல இந்தியர்கள், அரபுக்கள் வியாபார நோக்கில் குடியேறியவர்கள்.

இவர்கள் பேசும் மொழி பெரும்பாலும் ட்றினிடாடிய ஆங்கிலம், ட்றினிடாடிய இந்துஸ்தானி, கிறியோல் மற்றும் சிறியளவில் ஸ்பானிய மொழி, அரபு மொழி, சீன மொழி ஆகியனவாகும்.

மதங்களைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் இந்துக்கள். அடுத்தபடியாக கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அடங்குவர்.

தீபாவளியும், இந்தியர் வருகை நாளும் இங்கு தேசிய விடுமுறை நாட்கள். இதன் முதல் பிரதமர் பாஸ்டியோ பாண்டே ஒரு இந்திய வம்சாவளியினர்.

தமிழர் வரலாறு

1845 முதல் 1917 வரையில் ட்றினிடாட் அண்ட் ரொபாகோ தீவுகளுக்கு கரும்புத் தோட்ட வேலைகளுக்கென இந்தியர்கள் கொண்டுவரப்பட்டார்கள். அப்போது இந்தியாவைப் போலவே இத் தீவுகளுட்படப் பல கரீபியன் தீவுகள் பிரித்தானிய காலனிகளாகவிருந்தன. அப்போது இந்தியாவில் நிலவிய வறுமை காரணமாகப் பலர் வேலைகளைத் தேடி பிரித்தானியரது இதர காலனிகளுக்குக் கப்பல்களில் வந்திறங்கினர்.

இக் காலகட்டத்தில் வந்திறங்கிய சுமார் 143,000 இந்தியர்களில் சுமார் 5,000 பேர் மதறாஸ் துறைமுகத்திலிருந்தும் ஏனையோர் கல்கத்தா துறைமுகத்திலிருந்தும் வந்திருந்தனர். இருசாராரையும் வித்தியாசப்படுத்துவதற்காக கல்கத்தா துறைமுகத்திலிருந்து கப்பலேறியவர்களை ‘கலகட்டியர்கள்’ (Kalakatiyas) மதறாஸ் துறைமுகத்திலிருந்து கப்பலேறியவர்களை ‘மதராசியர்கள்’ (Madarasies) எனவும் சொற்பதங்கள் பாவிக்கப்பட்டன. மதராசியர்களில் பெரும்பாலானோர் தமிழராக இருந்தாலும், தெலுங்கு, கன்னடம், துளு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இஅவ்ர்களில் அடங்குவர்.

இத் தீவுகளுக்கு கொண்டுவரப்பட்டவர்களில் பெரும்பாலான மதராசியர்கள் பியார்கோ விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மதராஸ் குடியிருப்பில் (Madras Settlement) வாழ்கிறார்கள். அங்கு இப்போதிருக்கும் சிவன் கோவில் முன்னர் மட்றாஸ் சிவனாலயம் எனவும் கோறா தெரு கோவில் (Caura Road Temple) எனவும் அழைக்கப்பட்டது. இக் கோவிலில் பூசை செய்த ஷேசையர், தமிழ்நாட்டின் கோபிச்செட்டிபாளையத்திலிருந்து 1910 இல் ட்றினிடாட் வந்தவர். வாட்டர்லூ என்னுமிடத்திலும் பெருமளவு தமிழ் மொழியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் வாழ்கிறார்கள்.

கலாச்சாரம்

இங்கு வாழும் தமிழ்ப் பூர்வீக மக்கள் தமது தமிழ்க் கலாசாரத்தை இயன்றளவு பின்பர்றி வருகிறார்கள். திருமண நிகழ்வுகள், மரணச் சடங்குகள் ஆகியன பெரும்பாலும் தமிழ்க் கலாச்சார முறைகளில் நடைபெறுகின்றன. திருமணத்தின் போது தாலி அணிவதும், பெருமளவு மலர்கள் பாவிக்கப்படுவதும் வழக்கமான நிகழ்வுகள்.

திருமணங்களைப் பொறுத்தவரையில், பல தமிழ்ப் பெண்கள் ஏனைய இந்தியரைத் திருமணம் செய்வதைவிட சீனர்களைத் திருமணம் செய்வது அக்காலத்தில் பொது வழக்கமாக இருந்தது. இத்தீவுகளுக்குக் குடிபெயர்ந்த சீனர்களில் பெண்கள் வெகு குறைவு. அப்போது அங்கு வந்திறங்கிய சீனர்களில் பலர் வியாபாரங்களில் ஈடுபட்டமையால் அவர்களிடம் பண வசதியிருந்தமையும் இதற்கு ஒரு காரணம். இதற்கு தமிழ்ப் பெற்றோரிடமிருந்து எதிர்ப்புத் தெரிவிக்கப்படவில்லை எனினும் தமிழ்ப் பெண்கள் கறுப்பின ஆண்களைத் திருமணம் செய்வதற்குத் தமிழ்ப் பெற்றோர்கள் தடைகளை வித்தார்கள் என அறியப்படுகிறது. சீனர்களுக்கும் தமிழ்ப் பெண்களுக்கும் பிறந்த பிள்ளைகள் ‘சிந்தியர்’ (Chindians) என அழைக்கப்படுகிறார்கள். 1876 இல், ஜோன் மோர்ட்டன் என்ற மத போதகர் ஒருவர் எழுதிய குறிப்புக்களின்படி “பெருந்திகையான இந்தியர்கள் இருக்கக்கூடியாதாக இந்தியப் பெண்கள் சீனர்களைத் திருமணம் செய்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” எனக் கூறியிருக்கிறார். அதே வேளை பெரும்பாலான சீனர்களும் தமிழ்ப் பெண்களையே விரும்பி மணந்தார்கள் எனவும் கூறியிருக்கிறார். அதே வேளை இந்திய ஆண்கள் கறுப்பினப் பெண்களைத் திருமணம் செய்வது பெண்கலிஅ விட இரண்டு மடங்கு எனவும் அறியப்படுகிறது.

தமிழர்கள் வாழும் இடங்களில் தீபாவளி, மஹா சிவராத்திரி, நவராத்திரி, விஜயதசமி சரஸ்வதி பூஜை ஆகியன கொண்டாடப்படுகின்றன. ஏனைய இந்தியர்கள் ஹனுமான் ஜயந்தி, ராம் நவமி, கிருஷ்ணா ஜன்மந்தமி, சீதா நவமி ஆகிய விழாக்களைக் கொண்டாடுகிறார்கள்.

கலை, பொழுதுபோக்கு விடயங்களில் இந்தியப் படங்களும், இந்திய இசையும் மேலோங்கி இப்போது அதுவே இந் நாட்டின் பிரதான பொழுதுபோக்கு அம்சமாக இருக்கிறது. இவை அனைத்தும், பொதுவாக பொலிவூட் சார்ந்தவையாகவே இருக்கின்றன. இந்திய உணவு வகைகளும் இப்போது நாட்டின் பிரதான இடத்தைப் பிடித்துவிட்டன.

இந்து, முஸ்லிம் பாடசாலைகள், ரொட்டிக் கடைகள், பூசைப் பொருட்கள் விற்கும் கடைகள், இந்திய பலசரக்குக் கடைகள், அங்காடிகள் எனப் பலவகைகளிலும் இந்திய கலாச்சாரத்தில் மூழ்கிய ஒரு நாடாகவே இப்போது ட்றினிடாட் அண்ட் ரொபாகோ இருக்கிறது. பெரும்பாலான தமிழர்கள் தமிழை விட்டு விலகி ஹிந்துஸ்தானி மொழியையே பேசுகிறார்கள்

மட்றாஸ் குடியிருப்பு, டெல்ஹி குடியிருப்பு, கல்கத்தா குடியிருப்பு என்பவை மட்டுமே இப்போது தமிழ்க் குடிகளின் பூர்வீகத்தை, இதர இந்திய பூர்வீக மக்களிலிருந்து பிரிக்கும் ஒன்றாக இருக்கிறது. இருப்பினும், கீழே காணும் காணொளியைப் பார்த்தபோது கனடாவில் ஏற்றிவைக்கப்பட்ட இந்த தமிழ் மரபுத் திங்கள் என்ற தீ சிறிது சிறிதாக உலகம் முழுவதும் பரவும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.