Sri Lanka

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான உள்நாட்டுத் தீர்வை நாம் ஏற்கப்போவதில்லை – சம்பந்தன்


“தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு உள்நாட்டில் உருவாக்கப்படும் எத் தீர்வையும் தமித் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது. சர்வதேசங்களின் பங்களிப்புடனான ஒரு தீர்வே அவசியம். புதிய அரசியலமைப்பிற்கான எமது முன்மொழிவு இதுவாகவே இருக்கும்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பிற்கான வரைவு பற்றி விவாதிப்பதற்காகத் திங்களன்று கொழும்பில் கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் திரு சம்பந்தன் இக் கருத்தைத் தெரிவித்தார். இக் கூட்டத்தில் தமிழரசுக்கட்சி, ரெலோ, புளோட் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சமூகமளித்திருந்தனர்.

கூட்டமைப்பினால் தயாரிக்கப்பட்ட 21 பக்க வரைவு, 13 வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என நம்பப்படுகிறது. அரசாங்கம் பதிலளிக்கும்வரை, வரைவின் உள்ளடக்கங்களைப் பகிரங்கப்படுத்த வேண்டாமெனத் திரு சம்பந்தன் கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் அவற்றின் சாராம்சங்களைக் கூட்டமைப்பின் சில பா.உ.க்கள் கூறியதாக ‘தி ஐலண்ட்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் கல்வி, சட்ட ஒழுங்கு, காணி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம் ஆகிய விடயங்களில் அரசாங்கம் புதிய சட்டங்களை உருவாக்கவேண்டுமென கூட்டமைப்பு முன்மொழிந்துள்ளதென அவர்கள் தெரிவித்ததாக அச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

தமிழில் தயாரிக்கப்பட்ட இவ்வரைவின் ஆங்கில, சிங்கள மொழிபெயர்ப்புக்களும் வெளியிடப்படுமெனக் கூறப்படுகிறது.