Sri Lanka

தமிழ் மக்களின் அபிலாட்சைகளை வென்றெடுப்பதற்காக த.தே.கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றத் தயார் – கருணா


விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கும், இதர உறுப்பினர்களுக்கும் பொதுமன்னிப்புக் கொடுத்து விடுதலை செய்ததுபோல், தமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்படவேண்டுமென தமிழர் ஒற்றுமை விடுதலை முன்னணி (Tamil United Freedom Front (TUFF)) கட்சியின் தலைவர், கருணா (விநாயகமூர்த்தி முரளிதரன்) கோரிக்கை விடுத்துள்ளார்.

ஞாயிறன்று (ஜனவரி 03) கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த கருணா, தேர்தல் காலத்தில் ஜனாதிபதி அளித்த வாக்குறுதிக்கமைய தமிழ் அரசியல கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

“சகல தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதே எனது கருத்து. போரின் முடிவில், சகல விடுதலைப் புலிகளின் தலைவர்களையும், உறுப்பினர்கள் சிலரையும் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யும் முடிவை அப்போதைய ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ச எடுத்திருந்தார். தற்போது மிகவும் சொற்பமானவர்களே விடுதலை செய்யப்படாதுள்ளனர். அவர்களின் வாழ்வு மிகவும் வலி மிகுந்தது. அவர்களும் விடுதலை செய்யப்படவேண்டும்” என கருணா தெரிவித்துள்ளார்.

“இந்த அரசியல் கைதிகள் உண்மையில் பொதுமக்கள் தான். அவர்கள் போரில் நேரடியாகப் பங்கு பெறாதவர்கள். அவர்களது நிலை குறித்து நாம் அக்கறை கொண்டுள்ளோம். அதே வேளை, காணாற் போனவர்கள் குறித்து அரசாங்கம் பதில் கூறவேண்டும். அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பதற்கு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று அரசு கூறட்டும். காணாமற் போனவர்களின் உறவினர்கள் அவர்களுக்கான கடமைகளைச் செய்து முடிக்க அது வழிவகுக்கும். உலகம் இப்போது மாறிவிட்டது. முன்னர், எமது தலைவர்கள் தனிநாடு கேட்டுப் போராடினார்கள். அப்படியான கோரிக்கைகள் இனிமேல் பெறுமதியற்றவை. ஆனால், தமிழ் மக்களாகிய நாம் எமது ஆசைகள் அபிலாட்சைகளைப் பெற்று சுதந்திரமாக வாழ வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.



கூட்டமைப்புடனும் இணைந்து பணியாற்றத் தயார்

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடவுள்ளது எனத் தெரிவித்த கருணா, அது தனியாகவா அல்லது இதர கட்சிகளுடன் கூட்டணி வைத்தோ பங்குபற்றுமென்பதை இப்போது தெரிவிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

“இவ் விடயத்தில் நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்குத் தயார். நாங்கள் கூட்டமைப்பை விமர்சித்துள்ளோம், அது அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்காகவே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடந்த காலத்தில் முன்னைய அரசுக்கு ஆதரவாகச் செயற்பட்டிருந்தது. ஆனாலும் தமிழ் மக்களுக்காக அதனால் எதையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. தமிழ் மக்களின் அபிலாட்சைகளை வென்றெடுப்பதற்காக அனைத்துத் தமிழ்க் கட்சிகளுடனும் இணைந்து பணியாற்றவேண்டும் என்பதே எனது விருப்பம்” என கருணா மேலும் தெரிவித்தார்.