‘தமிழ் தான் அந்த இணைப்பு மொழி’ – அமித் ஷாவின் கருத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலடி!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ‘ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியே இந்திய மாநிலங்களுக்கிடையேயான இணைப்பு மொழியாக இருக்க வேண்டும்’ என்ற சமீபத்திய பேச்சு தொடர்பாக, நேற்று (11) கருத்து தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான் தமிழே அந்த இணைப்பு மொழி என ருவீட் குறுஞ்செய்தி மூலம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் கூட்டத்தில் கலந்துக்கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த இந்தி பேசாத மாநிலங்களும் இனி இந்தி பேச வேண்டும். ஆங்கிலத்திற்கு மாற்றான மொழியாக இந்தியை கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது என்றார். அத்துடன், இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஆங்கிலத்திற்கு மாற்றாக இனி இந்தியைப் பேச வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
பரபரப்பாகிவரும் ‘இந்தி திணிப்பு’ விவகாரம் தொடர்பாக ‘தமிழணங்கு’ என அடையாளமிடப்பட்ட வரைபடமொன்றையும் சமீபத்தில் ரஹ்மான் தனது ருவீட், இன்ஸ்டாகிராம் தளங்களில் பதிவு செய்திருந்தார். இப் படத்தின் கீழ் புலவர் பாரதிதாசனின் “இன்பத் தமிழெங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்” என்ற கவிதையின் வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது.
இப் படத்தில், தமிழின் சிறப்பு எழுத்தான ‘ழ’ கரத்தை முனையாகக் கொண்ட வேலை ஏந்தி போரொன்றுக்குத் தயாராகுபவளாக ஆக்ரோஷத்துடன் தமிழன்னை தோற்றம் தருகிறாள். இந்தித் திணிப்புக்கு எதிராக இசைப் புயல் ஆரம்பித்து வைத்திருக்கும் தமிழ்ப் புயல் இப்போது தென்னகம் முழுவதையும் சுழற்றியடித்து வருகிறது என்கிறார்கள்.