தமிழ் அகதிகளை நேரில் சந்தித்த அவுஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ்!

நான்கு வருடங்களுக்கு மேலாக அகதி தடுப்புமுகாமிலிருந்து கடந்த வாரம் விடுதலைபெற்று தமது மாகாணமான குயீன்ஸ்லாந்துக்குச் சென்ற தமிழ் அகதிகளான நடேசலிங்கம் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்திருக்கிறார் அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ்.
பிரியா, நடேஸ் மற்றும் அவர்களது அவுஸ்திரேலியாவில் பிறந்த குழந்தைகளான கோபிகா, தர்ணிக்கா ஆகியோரை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப முந்தைய அரசாங்கம் எடுத்த முயற்சி நீதிமன்றமொன்றினால் இறுதிக்கணங்களில் தடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அவர்களைத் திருப்பி அனுப்பியே தீருவோம் என முந்தைய பிரதமர் ஸ்கொட் மொறிஸன் விடாப்பிடியாக இருந்தார். அதே வேளை நடேசலிங்கம் குடும்பத்தைத் திருப்பி அனுப்பக்கூடாது எனத் தமிழரமைப்பு ஒன்றுட்படப் பல அவுஸ்திரேலிய மனித உரிமை மற்றும் மதம்சார் அமைப்புகளும் தொடற்சியாகச் செயற்பட்டு வந்தன. இருப்பினும் மொரிஸன் அரசாங்கம் இக் குடும்பத்தைத் தனியான தீவொன்றில் மிக மோசமான நிலையிலிருக்கும் அகதி முகாமொன்றில் தடுத்து வைத்திருந்தது. பின்னர் குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக பேர்த் மாகாணத்தில் தற்காலிகமாக வீட்டுக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். தற்போது புதிதாக வந்த தொழிற்கட்சி அரசு நடேசலிங்கம் குடும்பத்தை அவர்களது சொந்த இடமான, குயூன்ஸ்லாந்திலுள்ள பிலோஎலாவுக்கு அனுப்பியிருந்தது.
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஸ்கொட் மொறிஸனின் கட்சி தோல்வியைத் தழுவியதும் அந்தோனி அல்பனீஸ் தலைமையிலான தொழிற்கட்சி ஆட்சியமைத்தது. அவர் பிரதமராகப் பதவியேற்றதும் முதலாவதாக தனது மூத்த அமைச்சர்களுடன் குயீன்ஸ்லாந்து சென்றபோது கிளாட்ஸ்ரோனில் நடேசலிங்கம் தமபதிகளைச் சந்தித்தார். இச் சந்திப்பின்போது பிரியாவையும் குழந்தைகளையும் அரவணைத்து ஆறுதல் சொன்னதோடு நடேசலிங்கம் தம்பதிகளுக்கு அவுஸ்திரேலிய வதிவிடவுரிமையை வழங்குவதாகவும் பிரதமர் அல்பனீஸ் உறுதியளித்திருக்கிறார். நடேசலிங்கம் குடும்பத்தினரும் இச் சந்தர்ப்பத்தில் பிரதமர் அல்ப்[அனீஸுக்குத் தமது நன்றியைத் தெரிவித்திருந்தனர்.