ArticlesColumnsசிவதாசன்

தமிழ்ப் பரதேசிகள்

சிவதாசன்

ஈழத்திலிருந்து நிலம் பெயர்ந்த தமிழர்களைத் தமிழ்ப் பரதேசிகள் என்றழைத்தால் பலருக்குக் கோபம் வரலாம். பரவாயில்லை. சிறிய பூசல்கள் தொடக்கம் பெரிய போர்கள் வரையில் பல பொருளுணர்ந்து விளங்கிக் கொள்ளாமையாலும் பொருளுணர்ந்து பேசப்படாமையாலும் தானே நிகழ்ந்திருக்கின்றன! இன்னுமொரு சண்டை என்னத்தைக் கிழித்துவிடப் போகிறது?

எவர் எதைச் சொன்னாலும் நான் ஒரு தமிழ்ப் பரதேசிதான். படிப்பிற்காகப் பரதேசம் போய்ப் பின்னர் வயிற்றுப் பிழைப்பிற்காக அங்கேயே தங்கி விட்டவன். ஆனால் பலர் உயிர்ப் பிழைப்பிற்காகப் பரதேசம் போனவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் மன்னிக்க.

இந்தப் பரதேசிகளின் விவகாரம் கொஞ்சம் பொருளுணர்ந்து பேசப்பட வேண்டியதுதான்.

ஈழப்போர் உக்கிரமடைவதற்கும் சரி, முடிவுக்குக் கொண்டு வரப்பட்டபோதும் சரி இந்தப் பரதேசிகள் தங்கள் பங்கு பற்றி அதிகம் பிரலாபித்துக் கொண்டதாகப் பல மூலைகளிலுமிருந்து முக்கல்கள், முனகல்கள், பெரு மூச்சுக்கள், பொருமல்கள், அநாமதேய ஆய்வுகள், திட்டல்கள் என ஊடகப் பெருவெளிகளில் அவ்வப்போது பவனி வருவதுண்டு.

பரதேசிகளின் பணத்திற்குப் பலம் பல மடங்கு. விடுதலை வேள்விக்கு அது நெய்யாகப் பாவிக்கப்பட்டது தான். ஆனால் இது தமிழ்ப் பரதேசிகளுக்கோ அல்லது ஈழ விடுதலைப் போராட்டத்துக்கோ பொதுவானதல்ல. அயர்லாந்துப் போராட்டம், யூதர்களின் போராட்டம் என்பன ஓரளவு வெற்றிபெற்றதுக்கு அவ்வினங்களின் பரதேசிகளின் பங்கு மிக முக்கியனது என்பார்கள்.

ஆனால் தமிழ்ப் பரதேசிகளின் விவகாரம் இன்னுமொரு பரிமாணத்தையும் கொண்டது.

சமீபத்தில் ஊரிலிருந்து வந்த ஒரு நண்பரைச் சந்திக்க நேர்ந்தது. மண் வாசனைக்கு அடிமையாகி இப்போதுதான் sober ஆக வந்திருக்கும் என்னை மீண்டும் அடிமையாக்கும் வகையில் அவரது ஊர் பற்றிய கதைகள் இருந்தன.

எனது பார்வையில் இருந்து ஊர் சிறிதாகிப் போய் பல தசாப்தங்கள் ஆகிவிட்ட நிலையில் அவரது கதை பூதக்கண்ணாடியாகவே பயன் பட்டது.

ஊரிலிருந்து பரதேசம் புறப்படும்போது கடல் கடந்த புகைப்படங்களும் திரைப்படங்களுமே எனது கனவுலகத்தைச் சிருஷ்டித்திருந்தன. இப்போது நண்பர் கொண்டுவந்த என் கிராமத்தின் புகைப்படங்களும் திரைப்படங்களும் என் பிறந்த தேசத்தையே கனவுலகமாக்க முற்பட்டன. அது ஒரு விழித்துக் கொள்ள விரும்பாத அவதி.

ஆட்சி மாற்றத்தின் பின்னதாக இருந்த அவரது பயணக் கதைகள் பின்புலத் திரை மாற்றப்பட்ட ஒரே நாடகக் காட்சிகளையே கொண்டிருந்தனவாகப் பட்டன.“என்ன, ஆட்சி மாற்றம் புடுங்கிக் கொட்டிவிடும் எண்டு சொன்னாங்கள்” என்றேன்.”

“அது உங்க ஆய்வாளர் சொல்லிறது”

“அப்ப தமிழர் விடுதலை பற்றி இனி நினைக்கவே முடியாதா?”

“போராட்டம் ஆரம்பிச்சபோது நம்ம நாட்டில ஒரே ஒரு வகையான தமிழர்தான் இருந்தவை. அப்ப அவைக்கு வயிறு நிறைஞ்சிருந்தது. அப்ப அவை உரிமையைப் பெறச் சண்டைக்குப் போச்சினம். ஆனா 2009க்குப் பிறகு இஞ்ச இரண்டு வகையான தமிழர் இருக்கினம். இவை இரண்டு பேருக்குமே உரிமை பற்றின தேவையுமில்ல, அக்கறையுமில்ல”

நானும், நீங்கள் இப்போது செய்தது போல, விழிகளைப் பிதுக்கினேன். அவன் தொடர்ந்தான்.

“ அங்க இருக்கிறதில கொஞ்சப்பேர் அன்றாடம் சாப்பாடு கிடைக்குமா கிடைக்காதா? அதை அரசாங்கம் தருமா தராதா? இவங்கள் கொடிகளைப் பிடிச்சுக் கொண்டு ஊர்வலங்களை வைச்சு எங்களைப் பட்டினி போட்டு விடுவாங்களோ? என்ற கேள்விகளால வளைக்கப்பட்ட மக்கள்”.

“இன்னும் கொஞ்சப்பேர் வெளிநாட்டுக் காசை விரிச்சுப் போட்டு அதில படுத்தெழும்பிற ஆட்கள். கனடாவில இருந்து கொண்டுவந்த வால்மாட் உடுப்புக்களப் போட மறுக்கிற ஆக்கள். எங்க இந்த நாயள் திரும்பவும் போராட்டத்தைத் தொடங்கி எங்கட சந்தோசத்தைக் கெடுத்துவிடுவாங்களோ எண்டு பயப்படுகிற மக்கள்”.

“இந்த இரண்டு பேருக்குமே தமிழரின்ர உரிமை பற்றிப் பேசவோ சண்டை பிடிக்கவோ விருப்பமில்லை. அதே நேரத்தில இப்ப தமிழரின்ர உரிமை பற்றி வாய் கிழியக் கத்துவது வெளிநாட்டுத் தமிழர்கள் தான். அதனாலதான் அவர்கள் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறது ‘எங்களைப் பேசாம விடுங்கோ’ எண்டு”

“அப்ப நாங்க வெளிநாடுகளில இருந்து ஒண்டும் செய்ய வேண்டாமெண்டிறியோ? ஜனனாயக முறையளில அழுத்தங்களைக் குடுக்கக் கூடாது எண்டிறியோ?”

“அழுத்தம் குடுக்க வேண்டிய நேரத்தில அள்ளிக் குடுத்தநீங்க. இப்ப அள்ளிக் குடுக்க வேண்டின நேரத்தில அழுத்தம் குடுக்கிறீங்க. பேசாமப் போங்கடா பரதேசியளா….”

நண்பருக்கு உண்மையிலேயே ஆத்திரம் வந்திருக்க வேண்டும். முகத்தைத் திரும்பிக் கொண்டார்.

மது வாசனையால் மண் வாசனையை முறியடிப்பதில் பரிச்சயமாகிப்போன பரதேசி வாழ்வைத் தொடர்வதாகக் கங்கணம் கட்டிக் கொண்டேன்.

சொல்லிய பதத்தின் பொருளுணர்த்திச் சொன்ன நண்பருக்கும் ஒரு cheers!

April 28, 2015