HealthInternational Medical Health Org. (IMHO)

தமிழ்ப் பகுதிகளுக்கு அமெரிக்க அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO – USA) $1.5 மில்லியன் அனுப்ப முடிவு

இலங்கையில், கட்டுப்பாடுகளையும் மீறி தீவிரமாகப் பரவி வரும் கோவிட்-19 தொற்று, கொள்ளை நோயாக மாறி, வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களைத் தாக்குவதற்கு முன்னர் போதுமான முன்னரங்க சிகிச்சை உபகரணங்களை அனுப்பி உதவுமாறு அப் பிரதேச பைத்தியசாலை நிர்வாகிகள் புலம்பெயர் தமிழர் அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன் பிரகாரம், அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும், அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO-USA) புலம் பெயர் தமிழ் மக்களிடம் நிதியுதவியைக் கோரியிருந்தது.

இலங்கை அரசாங்கத்திடம் போதுமான பணமோ, ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளோ இல்லாத காரணத்தால், இவ் வைத்தியசாலைகளின் உபகரணத் தேவைகளை வெளியார் உதவி மூலம் நிறைவேற்றிக்கொள்ளும்படி ராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணாண்டோபிள்ளை அவர்களின் அமைச்சினால் வெளியிடப்பட்ட கடிதம் ஒன்றை ‘மறுமொழி’ சில நாட்களின் முன்னர் பிரசுரித்திருந்தது. இதைவிட, யாழ்-போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி அவர்களும் தனிப்பட்ட ரீதியில் புலம்பெயர் தமிழர்களிடம் உதவிகளைக் கோரியிருந்தார்.

இதே வேளை, மட்டக்களப்பு மாவட்டத்துக்கெனெ ஒதுக்கப்பட்ட நிதியை அரசாங்கம் சிங்கள மக்கள் செறிந்து வாழும் அம்பாறை மாவட்டத்துக்கு மாற்றிவிட்டதென மட்டக்களப்பு மாவட்ட த.தே.கூ. உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் சபையில் தெரிவித்திருந்தார்.

அனர்த்த காலங்களில் தமிழ்ப் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுவது இதுவே முதல் தடவையல்ல. 2004 ஆழிப் பேரலை அனர்த்தத்தின்போதும் புலம் பெயர் தமிழ் மக்கள் எம் மக்களுக்காகப் பெருவாரியாக உதஹ்வி செய்திருந்தார்கள். கனடா, ஸ்காபரோவில் அப்போது ஒரு தமிழ் மூதாட்டி தன்னுடைய ஒட்டு மொத்த சேமிப்பையும் அனர்த்த நிதிக்கு வழங்கியிருந்தார்.

தற்போது இலங்கையில் கோவிட்-19 நோய் பரவும் வீதமும், மக்கள் இறப்பு வீதமும் இலங்கை மீண்டுமொரு அனர்த்த நிலையொன்றை நோக்கிச் செல்கின்றதா என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்நிலையில் நாட்டிலுள்ள மருத்துவமனை நிர்வாகிகள் அரசாங்கத்திடம் கையேந்தி நிற்காமல் உடனடியான தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளமை பாராட்டத்தக்கது.

சிலர் வெளிநாடுகளில் உபகரணங்களை வாங்கி அனுப்பமுடியுமா எனக் கேள்வியெழுப்பியிருந்தார்கள். அப்படி அனுப்பப்படும் உபகரணங்கள் உரிய இடங்களுக்குப் போய்ச் சேருமா, அப்படியானாலும் அவை சென்றடைவதற்கு எத்தனை காலம் எடுக்கும் என்ற விடயங்களுக்கு உறுதியான பதில்கள் இல்லை. எனவே இவ்வுபகரணங்களை இலங்கையிலேயே கொள்வனவு செய்து அந்தந்த வைத்தியசாலைகளின் தேவைகளின்படி விநியோகிப்பது பலன்தரக்கூடியது என அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் தலைவர் டாக்டர் எஸ்.ரகுராஜ் ‘மறுமொழி’க்குத் தெரிவித்தார்.

அனைத்துலக மருத்துவ நல அமைப்பு 2004 ஆழிப்பேரலை அனர்த்த காலத்தில் இலங்கையில் தமிழ் மக்களுக்குப் பெரும்பணியாற்றியிருந்தது. தற்போதும் உலகம் முழுவதும் அனர்த்த நிவாரணம் மற்றும் சமூக மருத்துவ, கல்விப் பணிகளுக்காக இடர்கால உதவிகளைச் செய்து வருகின்றது. எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பு போன்ற உலக களப்பணி அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றதொரு அமைப்பாகும். அதன் கிளையொன்று இலங்கையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த சில மாதங்களில் மலையக மக்கள் மற்றும் பின்தங்கிய இதர பிரதேச மக்களின் கல்வி, சுகாதார மேம்பாடுகளுக்காகப் பல திட்டங்களை நிறைவேற்றி வந்துள்ளது. ‘அன்பு நெறி’ (US & Canada), AssistRR (UK) போன்ற பொதுநல அமைப்புகளுடன் இணைந்து தமிழர் பிரதேசங்களில் பல கிராமிய மேம்பாட்டுத் திட்டங்களை அது முன்னெடுத்து வருகிறது.

தற்போது எழுந்துள்ள கோவிட்-19 அனர்த்த செயற்பாடுகளுக்கான உபகரணங்கள் மற்றும் நோய் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மொத்தம் US$ 1.5 மில்லியன் டாலர்கள் நிதியைச் சேகரித்து அனுப்ப உறுதி செய்துள்ளது. இது ஒரு பாரிய தொகை என்றாலும், நம் மக்களின் உயிர்களைக் காப்பாற்ற இது அவசியமும், அவசரமுமான ஒன்றாகும். இந் நிதிக்குப் பங்களிக்க விரும்புபவர்கள் கீழ்க்காணும் தொடுப்பின் மூலம் அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் இணையத் தளத்துக்குச் சென்று தங்கள் பங்களிப்பைச் செய்து கொள்ளலாம்.

அவசர தேவை உபரணங்களின் பட்டியல்:

உபகரணம் தொகை
Ventilators (சுவாச உதவி உபகரணம்) 40
Oxygen concentrators (உயிர்வாயு செறிவாக்கி) 80
C PAP machines 26
Under Armour 173,250,000
Gowns 13,500,000
PPE 185,969
Hand Sanitizers 3,135,264
N-95 Masks 721,600
Spread Blankets 616
Microfiber Wipes 1000 Cases
Disposable Coverall (Protective) 1250 Cases

இவ்வுபகரணங்கள் அனைத்தையும் இலங்கையில் கொள்முதல் செய்யும் முயற்சியில் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு ஈடுபட்டு வருகிறது. அண்ணளவாக இவ்வுபகரணங்களின் பெறுமதி $1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கலாமென எத்ரிபார்க்கப்படுகிறது.