தமிழ்நாட்டை சாதிவழிப் பிரதேசங்களாக உடைக்க பா.ஜ.க. அரசு சூழ்ச்சி – தமிழ்நாடு கட்சிகள் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டிலிருந்து கொங்கு நாட்டைத் தனி மானிலமாகவோ அல்லது ஒன்றிய பிரதேசமாகவோ பிரித்தெடுக்க பா.ஜ.க. அரசு சூழ்ச்சி செய்கிறது என பெரும்பாலான தமிழக அரசிய கட்சிகள் தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.
கொங்கு நாட்டைத் தனி மானிலமாக்கவேண்டுமென்ற பிரிவினைக் கருத்துக்கள் முன்னரும் எழுந்துள்ளனவாயினும், கடந்த வாரம் ஒன்றிய அரசின் அமைச்சரவை மாற்றங்களின்போது புதிய அமைச்சராக நியமிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பா.ஜ.க. தலைவர் எல்.முருகனை அறிமுகம் செய்யும்போது கொங்கு நாட்டைச் சேர்ந்தவர் என அறிவிக்கப்பட்டதை எதிர்த்துப் பல தமிழகக் கட்சிகள் குரலெழுப்பியிருந்தன.
இந்திய ஒன்றிய அரசின் இந்த அசாதாரண அறிவிப்பின் பின்னால் இருக்கும் கபட நோக்கம் பற்றி இந்திய இடதுசாரிக் கட்சிகளான சீ.பி.ஐ., சீபி.ஐ.(எம் ) மற்றும் ம.தி.மு.க. கட்சிகள் எதிர்க்குரலகளை எழுப்பி வரும் அதே வேளை, பா.ஜ.க.வின் பொறுப்பற்ற நடவடிக்கை நாட்டில் மிகவும் அபாயகரமான சூழலை உருவாக்க காரணமாக அமைந்துவிடுமென சீ.பி.ஐ.செயலாளர் ஆர்.முத்துராசன் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் பிரதேசத்தை மோடி அரசு இரண்டு ஒன்றிய பிரதேசங்களாகப் பிரித்ததைத் தொடர்ந்து மோடியின் அடுத்த குறி தமிழ்நாடு எனவும், அதைப் பல ஒன்றிய பிரதேசங்களாகப் பிரித்துவிட மோடி திட்டமிட்டுள்ளார் எனவும் பேச்சுக்கள் எழுந்திருந்தன. இதன் மூலம் பா.ஜ.க. தமிழ்நாட்டில் காலூன்ற வழிசெய்யும் என பா.ஜ.க. அரசின கொள்கைவகுப்பு அமைப்பான ஆர்.எஸ்.எஸ். எதிர்பார்க்கிறது எனத் தெரியவந்துள்ளது.
தற்போதுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு பொருளாதாரம் உடபடப் பலவழிகளிலும் பலமான முன்னணி மாநிலங்களில் ஒனறாக இருக்கிறது.அதை உடைத்து தமிழ் அடையாளத்தை இல்லாமல் செய்வது ஒன்றிய அரசின் நோக்கம் எனத் தமிழ் மொழி உரிமைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அழில் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வாழும் மக்களை,வன்னியர், கொங்கு வெள்ளாள கவுண்டர், முக்குலத்தோர், நாடார் என முக்கிய சாதிகள் அடிப்படையில் நான்கு பிரதேசங்களாக உடைத்து தமிழ்நாட்டின் திராவிட கட்சிகளின் பலத்தையும் தமிழரின் அடையாளத்தையும் இல்லாதொழிப்பதே மோடி அரசின் சூழ்ச்சி எனச் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.