தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழ் அகதிகள் தடுப்பூசி பெறுவதற்குத் தயக்கம்

நடிகர் விவேக்கின் மரணம் ஒரு காரணம்?

தமிழ்நாட்டிலுள்ள 108 முகாம்களில் வாழும் 58,000 ஈழத்தமிழ் அகதிகள் மத்தியில் தடுப்பூசித் தயக்கம் இருக்கிறது எனவும், நடிகர் விவேக்கின் மரணத்திற்குப் பின்னர் இத் தயக்கம் அதிகரித்துவிட்டது எநக் கூறப்படுகிறது.

ஏனைய மாநிலங்களில் இந்திய குடிமக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படும்வரை அகதிகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுவதில்லை ஆனால் தமிழ்நாட்டில் ஏப்ரல் முதல் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தியக் குடிமக்கள் அல்லாத தமிழர்களின் புனர், நல்வாழ்வு ஆணையத்தின் தகவல்களின்படி இதுவரை 3,000 அகதிகள் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளார்கள் எனத் தெரிகிறது.

நடிகர் விவேக்கின் அகால மரணம் பல ஈழத் தமிழர்களின் தடுப்பூசித் தயக்கத்தை ஊக்கப்படுத்தியிருந்தாலும், பெரும்பாலான முகாம்களிலுள்ள அகதிகளுக்கு தடுப்பூசி பற்றிய விபரங்களோ அல்லது அவற்றின் முக்கியத்துவம் பற்றியோ அரசாங்கம் எதுவித அறிவித்தல்களையும் வழங்குவதில்லை என ராமநாதபுரம் அகதி முகாமைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்ததாக ‘தி நியூஸ் மினிட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவரை முகாம்களிலுள்ள சுமார் 1,500 தமிழ் அகதிகளுக்கு கொரோணாத் தொற்று ஏற்பட்டதென்றும் அவர்களில் 21 பேர் மரணமடைந்துள்ளனர் எநவும் புனர், நல்வாழ்வு ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அகதிகளாக வரும் திபெத்திய, ஈரானிய அகதிகளுக்கு வழங்கப்படும் சுதந்திரமும் சலுகைகளும் தமிழ் அகதிகளுக்கு வழங்கப்படுவதில்லை. குறிப்பாக தமிழ்நாட்டு சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகளை வெளியார் சந்தித்துப் பேசுவதோ அல்லது அவர்களுக்கு உதவிகளைச் செய்வதோ மிகவும் இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப்படுகிறது. இவ்வகதிகளின் நடமாட்டங்கள் வெகுவாகக் கண்காணிக்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு இவ்வகதிகளுக்கான ‘ஆதார் மட்டை’, ரேஷன் மட்டை ஆகியவற்றை வழங்கி வந்தாலும், அவர்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதில்லை எனவும் அதே வேளை தொண்டு நிறுவனங்களின் சேவைகளும் இலகுவில் அநுமதிக்கப்படுவதில்லை எனப்படுகிறது.