Sri Lanka

தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழருக்கு ‘அனைத்துலக கடவுச்சீட்டு’ – இலங்கை அரசு வழங்கியது!

1983 இனக்கலவரங்களைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து வெளியேறித் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த பலர் தகுந்த கடவுச்சீட்டுகள் இல்லாமையால் பலவித சிரமங்களுக்கும் உள்ளாகிவந்தனர். இதைத் தீர்க்க அவர்களுக்கு ‘அனைத்துலக கடவுச்சீட்டுகளை’ (All Country Passports) வழங்குவதற்கு இலங்கை அரசு முன்வந்ததுமல்லாது ஜனவரி 19 ஆம் திகதி வைபவ ரீதியாக உதிதியோகபூர்வ கடவுச்சீட்டு வழங்கலையும் சென்னையில் அது ஆரம்பித்து வைத்தது.

இத்திட்டத்தின் முதற் கட்டமாக 197 இலங்கைத் தமிழருக்கு கடவுச் சீட்டுகள் வழங்கப்பட்ட இவ்வைபவத்தில் இலங்கைக்கான தூதுவர் ஷேனுகா செனிவிரட்ண, கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் உட்பட இலங்கை தமிழ்நாடு மற்றும் இந்திய அரசாங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். இவர்களை விட இவ்விடயத்துடன் தொடர்புடைய இலங்கை அரசாங்க அதிகாரிகள் இணையவழி மூலம் கலந்துகொண்டிருந்தனர்.

பல தசாப்தங்களாக இந்தியக் குடியுரிமையும் இல்லாது உரிய கடவுச்சீட்டுகளும் இல்லாது பல தமிழர்கள் எங்கும் போகமுடியாத நிலையில் முகாம்களுக்குள் முடக்கிவைக்கப்பட்டிருந்தனர். தற்போது இக்கடவுச்சீட்டுகளுடன் அவர்கள் சட்ட ரீதியாக இலங்கை மீள்வதற்கோ வேறெங்கும் பயணம் செய்வதற்கோ முடியும்.