EntertainmentIndia

தமிழ்நாட்டில் எதிர்ப்பலையைக் கிளப்பிவரும் விஜே சேதுபதியின் ‘800’ திரைப்படம்


இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர் முத்தையா முரளீதரனின் வாழ்க்கை வரலாற்றைத் திரைக்குக் கொண்டுவரும் படம் ‘800’. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகர் விஜே சேதுபதி முரளீதரனாக நடிக்கிறார்.

இலங்கை ஆட்சியாளர் ராஜபக்சக்களுடனான முரளீதரனின் உறவும், தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய அவரது கருத்துக்களும் தமிழுணர்வார்கள் மத்தியில் அவரை ஒரு தமிழினத் துரோகியாக இனம்காட்டியிருந்தது. இக் காரணங்களுக்காக, உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் விஜே சேதுபதி, முரளிதரனின் பாத்திரத்தை ஏற்று நடிப்பதைப் பலர் கண்டிக்கிறார்கள். தற்போது தமிழ்நாட்டின் பல கலையுலகப் பிரமுகர்களும், அரசியல்வாதிகளும் விஜே சேதுபதியை இப் படத்தில் நடிக்காமல் விலகிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு வருகின்றனர்.

தமிழீழப் போராட்டத்தின் நீண்ட நாள் ஆதரவாளரும், தற்போது இந்திய மேல்சபை உறுப்பினருமான வை. கோபால்சாமி “முத்தையா முரளீதரன் தமிழ் இனத்தையே காட்டிக் கொடுத்தவர்” என விபரித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் எஸ்.ராம்தாஸ் “காட்டிக் கொடுத்த ஒருவரின் வரலாற்றை வெளிக்கொணர்வதற்கு, தன் அறியாமையினால் நடிகர் உதவிசெய்துவிடக்கூடாது” எனத் தெரிவித்திருக்கிறார். “சிங்கள அரசாங்கத்தின் கைக்கூலியும் காட்டிக்கொடுக்கும் ஒருவரின் மீதான படம் தமிழ்நாட்டில் திரையிடப்படக்கூடாது எனவும், நடிகர் விஜே சேதுபதியை இப் படத்திலிருந்து விலகிக்கொள்ளும்படியும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டின் பிரபல இயக்குனர்கள் சேரன், பாரதிராஜா போன்றோரும், பாடலாசிரியர் தாமரை போன்றோரும் நடிகர் சேதுபதி இப் படத்தில் நடிப்பதற்கு எதிராகத் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

விஜே சேதுபதியின் பங்கை எதிர்த்து #ShameonVijaySethupathi என்ற பெயரில் ருவிட்டர் இணைப்பு உலகம் முழுவதும் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது.

இப் படத்தின் தயாரிப்பாளரான டார் ஃபிலிம்ஸ் “இப் படம் இலங்கையிலுள்ள ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை ஒருபோதும் சிறுமைப்படுத்தாது என உறுதி கூறுகிறோம். இது ஒரு விளையாட்டு வீரரின் சாதனைகளையும், அவரது வாழ்வையும் அடியொற்றிய ஒரு படம் மட்டுமே. இதை அரசியற் படுத்த வேண்டாம்” எனத் தன் அறிக்கை மூலம் கேட்டுள்ளது.

இப் பிரச்சினை பற்றி நடிகர் விஜே சேதுபதி இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.