தமிழ்நாட்டிலிருந்து திருடப்பட்ட 300 வருடப் பழமைவாய்ந்த முதல் தமிழ் விவிலிய நூல் லண்டனில் கண்டுபிடிப்பு!

1715 இல் பாத்தலோமியஸ் சீகன்ன்பால்க் எனும் பெயருடைய பாதிரியாரால் தரங்கம்பாடியில், தமிழில் முதலாவதாகப் பதிப்பிக்கப்பட்ட விவிலிய நூல், 2005 இல் தஞ்சாவூரிலுள்ள சரஸ்வதி மஹால் அருங்காட்சியகத்திலிருந்து காணாமல் போயிருந்தது. தமிழ்நாடு காவற்துறையின் முயற்சியால் இந் நூல் லண்டனிலுள்ள கிங்ஸ் கொலிஜ் பல்கலைக்கழகத்தில் இருப்பதாக இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதிய ஏற்பாடு என அழைக்கப்படும் இவ் விவிலிய நூலை டேனிஷ் கிறிஸ்தவ பாதிரியாரான பாத்தலோமியஸ் சீகன்பால்க் 1715 ஆம் ஆண்டு தமிழுக்கு மொழிபெயர்த்ததுடன் அதைத் தரங்கம்பாடியில் பதிப்பும் செய்திருந்தார். இந் நூல் காணாமற்போகும்வரை தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் அருங்காட்சியத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
2005 இல் இந்நூல் காணாமற் போனதைத் தொடர்ந்து தஞ்சாவூர் மேற்கு காவற்துறையில் புகார் ஒன்று செய்யப்பட்டிருந்தது. இவ் வழக்கு தொடர்பான விசாரணைகள் பலனளிக்காமையால் வழக்கை மூடிவிடுவதென அரசு தீர்மானித்திருந்தது. பின்னர், 2017 இல் ஐடல் குற்ற விட்சாரணைப் பிரிவு (Idol Wing) இவ் வழக்கை மீண்டும் எடுத்ததைத் தொடர்ந்து அதன் மீதான விசாரணைகள் புத்தூக்கம் பெற்றன. இவ் விசாரணகளின்போது அக்டோபர் 7, 2015 இல் பல வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் இவ்வருங்காட்சியகத்துக்கு வருகை தந்திருந்தமையை ஐடல் பிரிவு கண்டுபிடிக்கப்பட்டது. அன்றுதான் இந் நூல் காணாம்ற் போயிருந்தது.
காவற்துறையின் விசாரணைகளின்போது, டேனிஷ் பாதிரியார் சீகன்பால்கின் ஞாபகார்த்த நிகழ்வுக்காகவே இச் சுற்றுலாவாசிகள் அருங்காட்சியகத்துக்கு வந்திருந்தனர் எனக் கண்டறியப்பட்டது. இதனால் சந்தேகமுற்ற குற்றவியல் திணைக்களத்தின் ஐடல் பிரிவினர் உலகெங்கணுமுள்ள அருங்காட்சியகங்களினதும், தனியார் சேர்ப்பங்களினதும் இணையத்தளங்களை ஆராயத் தொடங்கினர். இதன் போது லண்டனிலுள்ள கிங்ஸ் கொலிஜ் இணையத்தளத்தில் மூன்றாம் ஜோர்ஜ் அரசரின் பிரத்தியேக சேர்ப்பகத்தில் ஒன்றாக தொலைந்துபோனதாகக் கருதப்பட்ட விவிலியநூலின் படம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவுக்கு வந்த முதல் புரட்டஸ்தாந்துப் பாதிரியார்களில் ஒருவரும் தமிழில் முதல் அச்சுக்கூடத்தை உருவாக்கியவர்களில் ஒருவருமாக சீகன்பால்க் அறியப்பட்டவர். அவரே இந்தியாவில் விவிலிய நூலைத் தமிழில் பதிப்பித்தார். இதன் பிறகு இன்னுமொரு பாதிரியாரான ஷுவார்ட்ஸ் என்பவரால் இந் நூல் அப்போதைய தஞ்சாவூர் அரசரான துளசிராஜா செஃப்ரோஜி அவர்களிடம் பாதுகாப்பிற்காகக் கையளிக்கப்பட்டது எனக் கருதப்படுகிறது.
தற்போது லண்டன் கிங்ஸ் கொலிஜ் இல் இருக்கும் இந் நூலைத் தமிழ்நாட்டிற்குத் திருப்பி எடுப்பதற்கு யுனெஸ்கோ ஒப்பந்த நடைமுறையைப் பாவிப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.