CultureTamil History

தமிழ்நாட்டின் இரும்புக் காலம் 4,200 வருடம் தொன்மையுடையது – மயிலாடும்பாறை அகழ்வு

இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள அகழ்வு ஆய்வுகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மயிலாடும்பாறை என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களே மிகவும் தொன்மை வாய்ந்தமையாகக் கருதப்படுகின்றன. கார்பன் கணிப்பு விதிகளின்படி இவை கி.மு. 2172 ஆம் ஆண்டிற்குரியவை எனக் கண்டுபிடிக்கப்படிருக்கிறது.

மே 09, திங்களன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்ட சபையில் இவ் விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார். 4,200 வருடங்களுக்கு முன்னரேயே தமிழர்கள் இரும்பின் பாவனையை அறிந்திருந்தமை தனக்குப் பெருமை தருகிறது என அவர் சபையில் தெரிவித்தபோது உறுப்பினர்கள் மேசையில் தட்டி மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். விவசாயத்தை அடைப்படையாகக் கொண்டிருந்த தமிழ்நாடு இரும்பின் முக்கியத்துவத்தைப்பற்றி அறிந்திருந்தமை ஆச்சாரியம் தரும் ஒன்றல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கீழடி, ஆதிச்ச நல்லூர் அகழ்வுகள் வரிசையில் தற்போது அடுத்ததாக வந்திருக்கும் மயிலாடும்பாறை அகழ்வுகள் இந்திய துணைக்கண்டத்தின் வரலாறே தமிழ் நிலத்தில் தான் ஆரம்பிக்கிறது என்பதை விஞ்ஞானபூர்வமாக ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுகிறது. இந்த அகழ்வுகள் மூன்று முக்கிய பிரதான விடயங்களை அம்பலப்படுத்துகிறது – அதாவது தமிழ்நாட்டின் இரும்புக் காலத்தின் தொன்மை கி.மு. 2172 என்பது; இரண்டு – கற்காலத்தின் இறுதிக் காலம் கி.மு. 2,200 ஆண்டுக்கு முற்பட்டது என்பது; மூன்று – கரும், செம் மட்பானைகள் இரும்புக்காலத்தில் அல்லாது கற்காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டன என்பனவாகும்.

மயிலாடும்பாறை அகழ்வுகள்

2005 ஆம் ஆண்டு, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கே.ராஜன் என்பவரால் மயிலாடும்பாறை முதலில் அகழ்வு செய்யப்பட்டது. அவ்வகழ்வின் தடயங்களை ஆதாரமாகக் கொண்டு தமிழ்நாடு தொல்லியல் துறை 2021 இல் இங்கு அகழ்வாய்வுகளைத் தொடர்ந்தது. இங்கு கிடைத்த இரண்டு தடயங்கள் ஃபுளோறிடாவிலுள்ள பேற்றா அனாலிட்டிக் பரிசோதனை ஆய்வுகூடத்துக்கு அனுப்பப்பட்டு C14 கார்பன் கணிப்பு முறையின்படி (Accelerator Mass Spectrometry (AMS)) அத்தடயங்களின் தொன்மை கணிக்கப்பட்டது. இதன்படி, இத் தடயங்களின் காலம் கி.மு. 2172 – கி.மு. 1615 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. கி.மு. 600 ஆண்டுகளில் இருந்தது என ஊகிக்கப்படும் சங்க காலத்திற்கு முன்னரே இரும்பின் பாவனை தமிழ்நாட்டில் இருந்திருப்பதற்கான ஆதாரங்களை இவ்வகழ்வாய்வுகள் தருகின்றன.

மயிலாடும்பாறை ஆய்வுகளுக்கு முன்னர் வரை, சேலம் பகுதியிலுள்ள மேட்டூரில், மாங்காடு என்னுமிடத்தில் செய்யப்பட்ட அகழ்வுகளின்போது கண்டெடுக்கப்பட்ட தடயங்கள் மூலம் தமிழ்நாட்டில் இரும்பின் பாவனை கி.மு.1510 எனக் கால நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்தியாவின் இதர பகுதிகளில் செய்யப்பட்ட அகழ்வுகள் இக் காலத்திற்கு முன்னரே இந்தியாவில் இரும்பின் பாவனை இருந்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியிருந்தது. உதாரணமாக கர்நாடக மாநிலத்தின் பிராக்மாகிரி என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட தடயங்கள் இந்தியாவில் இரும்பின் பாவனை கி.மு. 2040 ஆக இருக்கலாமென நிர்ணயித்திருந்தது. தற்போது மயிலாடும்பாறை அகழ்வுகளின் மூலம் தமிழ்நாட்டில் இரும்பின் பாவனை மேலும் ஆறு நூற்றாண்டுகள் பிந்தள்ளப்பட்டு கி.மு. 2,172 என நிணயிக்கப்பட்டிருக்கிறது.

கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஜகர்காந்த் ஆகிய பிரதேசங்களில் செய்யப்பட்ட 28 தடய ஆய்வுகளோடு (AMS) ஒப்பிடுகையில் மயிலாடும்பாறை அகழ்வுகளே இந்தியாவில் இரும்பின் அதி தொன்மையானவை என நிரூபித்திருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழரின் நாகரிகத்தில் இரும்புப் பாவனையின் தொன்மையைக் கணிக்க உதவியது மட்டுமல்லாது, மயிலாடும்பாறை அகழ்வுகள், பிற்கால கற்காலத்திலிருந்து ஆரம்ப இரும்புக்காலத்துக்கு நாகரிகம் மாற்றம்பெறும் தடயங்களையும் காட்டி நிற்கிறது. தமிழ்நாட்டில் பிற் கற்காலம் கி.மு.2,200 இல் ஆரம்பித்துவிட்டது என படிவுத் தட ஆய்வுகள் நிரூபிக்கின்றன. அதே வேளை கரும்-செம் மட்பானைகளின் பாவனை தமிழ்நாட்டில் 4,200 வருடங்களுக்கு முன்னரேயே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது என்பதையும் இவ்வாய்வுகள் நிரூபிக்கின்றன. இதற்கு முன்னர் இந்த கரும்-செம் மட்பண்டப் பாவனை இரும்புக்காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டது என நம்பப்பட்டு வந்தது.

இது மட்டுமல்லாது, கேரளத்தில் பட்டணம், கர்நாடகத்தில் தாளக்காடு, ஆந்திரப் பிரதேசத்தில் வேங்கை, ஒடிசாவில் பாலூர் ஆகிய, தமிழர் வாழ்ந்ததாகக் கருதப்படும் பிரதேசங்களில் அகழ்வுகளை முன்னெடுத்து பண்டைத் தமிழரின் பரம்பல் சுவடுகளைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சங்க காலத் துறைமுகமெனக் கருதப்படும் கொற்கையில் கடலடி ஆய்வுகளுக்கான ஆரம்ப முயற்சிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன எனவும் தமிழ்நாட்டு அகழ்வுகளில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டச் சிதைவுகளில் காணப்படும் எழுத்துருக்களுக்கும் சிந்துப் பள்ளத்தாக்கில் காணப்பட்ட முத்திரைகளில் காணப்படும் எழுத்துருக்களுக்கும் தொடர்புகள் இருக்கின்றனவா என்பதை மாநில தொல்லியல் துறை ஆராயவுள்ளது எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிவகலை என்னுமிடத்தில் சென்ற வருடம் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின்போது சுமார் 3,200 வருடங்கள் பழமையான, நகர நிமாணத்துக்கான தடயங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. இதே வேளை, சிந்துப் பள்ளத்தாக்கின் இறுதிக் காலம் 3,200 ஆண்டுகள் எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான தடயங்கள் சிந்துப் பள்ளத்தாக்கு நாகரிகத்துக்கும், தமிழர் நாகரிகத்துக்கும் தொடர்புகள் உள்ளன என்பதையே காட்டி நிற்கின்றன. அதே வேளை சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடியில் மேற்கொள்ளப்பட்ட ஐந்தாம் கட்ட அகழ்வுகளின்போது கண்டெடுக்கப்பட்ட எழுத்துருத் தடயங்களும் தமிழர் நாகரிகத்துக்கும் சிந்துவெளி நாகரிகத்துக்கும் தொடர்புகள் இருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு என்பதைக் காட்டுகின்றன.