IndiaNews & Analysis

தமிழ்நாடு | 21 தமிழ் அகதிகள் தற்கொலை

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 21 தமிழ் அகதிகள் தற்கொலை செய்துள்ளனரென ‘வண் இன்டியா’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களில் 18 பேர் தூக்க மாத்திரைகளை விழுங்கியும், இருவர் தூக்குப் போட்டும், ஒருவர் தன் வயிற்றைக் கத்தியால் கிழித்தும் தற்கொலை செய்துள்ளரென அச் செய்தி கூறுகிறது.

இது குறித்து தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் கெளதமன் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில், “நீண்ட நாட்களாகத் தாம் எதிர்பார்த்த விடுதலை கிடைக்கவில்லையே என்ற விரக்தியில், வேறு வழிகள் தெரியாமல் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். தமிழ்நாடு அரசு அவர்கள் விடயத்தில் தொடர்ந்தும் உதாசீனம் செய்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் இம் முகாமுக்கு விஜயம் செய்த அமைச்சர் கே.எஸ். மஸ்தான் இக் கைதிகள் 20 நாட்களில் விடுதலை செய்யப்படுவார்கள் என உறுதியளித்திருந்தார் எனவும் ஆனால் ஒரு மாதமாகியும் அது நடைபெறவில்லை எனவும் அறியப்படுகிறது.

சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து தமிழ் அகதிகளையும் உடனடியாக விடுதலை செய்யும்படி தமிழ் பேரரசு கட்சி செயலாளர் கெளதமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு முன்னரும் மன்னார்குடி சிறப்பு முகாமில் ஈழத் தமிழ் அகதிகள் தற்கொலை செய்து கொண்டிருந்தனர்.

இச் செய்தி பற்றி இந்திய பிரதான செய்தி ஊடகங்கள் அனைத்தும் மெளனம் காக்கின்றன. தமிழ்நாடு அரசும் இதுபற்றி, இதுவரை எதுவித அறிக்கையயையும் வெளியிடவில்லை.