EntertainmentIndia

தமிழ்நாடு | பா.ஜ.க. வில் இணைந்துவரும் தமிழ்த் திரையுலகினர்

பாரதிய ஜனதாக் கட்சிக்குத் தமிழ்நாட்டில் அதிகரிக்கும் செல்வாக்கு

  • நடிகர் செந்தில் இன்று பா.ஜ.க.வில் இணைகிறார்
  • நடிகைகள் குஷ்பு, கெளதமி ஏற்கெனவே இணைந்துள்ளார்கள்
  • நடிகர் சிவாஜி கணேசனின் மகன், தயாரிப்பாளர் ராம்குமார் தற்போது அங்கத்தவர்
  • நடிகர் ரஜினியின் ரசிகர்கள் தி.மு.க. விலிருந்து இ.ம.மு.க. விற்குத் தாவுகிறார்கள்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கின்ற வேளையில், அங்கு பல அதிரடி அறிவிப்புகளும், பரபரப்பான காய்நகர்த்தல்களும் இடம்பெற்று வருகின்றன.

இனறு (11), தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் எல். முருகன் முன்னிலையில் நடிகர் செந்தில் அக் கட்சியில் இணைந்துகொண்டார். இதற்கு முன்னர் அவர் அ.இ.அ.தி.மு.க. வில் அங்கத்தவராக இருந்தார்.

அ.இ.அ.தி.மு.க. வில் தொடர்ந்தும் இருப்பது தனக்குப் பிடிக்காமையால் தான் பா.ஜ.க. விற்கு மாறியதாகவும் தான் இனிமேல் அக் கட்சிக்காகப் பிரசாரம் செய்யப்போவதாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

கவுண்டமணியுடன் இணைந்து தமிழ்த் திரையுலகில் நகைச்சுவைப் பாத்திரங்களில் தோன்றிப் பிரபலமான நடிகர் செந்திலுக்கு தற்போது அதிக சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை. 2018 இல் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்திலும், தொலைக்காட்சித் தொடர் ராசாத்தி ஆகியவற்றிலும் (தற்போது) நடித்திருக்கிறார்.

ராமநாதபுரம் இளைஞம்பூரில் பிறந்த செந்தில் மலையாளப் படமான இத்திக்கார பக்கி (1980) இல் அறிமுகமாகி தமிழில் கவுண்டமணியுடன் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருக்கிறார்.

முதலில் அ.இ.அ.தி.மு.க. வில் இணைந்த அவர் ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு தினகரனின் அ.ம.ம.க. வில் இணைந்தார். செப்டம்பர் 2019 இல் அவர் அக் கட்சியின் 5 அமைப்புச் செயலாளர்களில் ஒருவராக இருந்தார்.

பல தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் பா.ஜ.க.வில் இணைவு

நடிகை குஷ்பு, நடிகை கெளதமி ஆகியோர் பா.ஜ.க. வில் இணைந்ததைத் தொடர்ந்து இப்போது நடிகர் செந்திலும் அக் கட்சியில் இணைகிறார். நடிகை கெளதமி சேப்பாக்கம் / ராஜபாளையம் தொகுதியில் வேட்பாளராக நிற்பதற்கு விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் பா.ஜ.க. கேட்டபடி அத் தொகுதியை அ.இ.அ.தி.மு.க. அதற்கு வழங்கவில்லை.

சமீபத்தில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகநும், தயாரிப்பாளருமான ராம்குமார் பா.ஜ.க.வில் இணைந்திருந்தார். சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருந்தபடியால் அவரது ரசிகர்கள் காங்கிரசுக்கே வாக்களித்து வந்தனர். ராம்குமாரின் பா.ஜ.க. ஆதரவு சிவாஜி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதெனத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் ஆதரவு அதிகரித்து வருகிறது என்பது அதன் தொகுதிப்பங்கீட்டின் மூலம் தெரிகிறது. அ.இ.அ.தி.மு.க. இந்த தடவை பா.ஜ.க. விற்கு 20 தொகுதிகளைக் கொடுத்திருக்கிறது. ஆனாலும் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ரஜினியின் ஆதரவு

இதே வேளை, ரஜினியின் ‘வலது கரமெனப்’ பிரகடனப்படுத்தப்பட்ட அர்ஜுன்மூர்த்தி ஆரம்பித்த இந்திய மக்கள் முன்னேற்றக கட்சிக்கு ரஜினி வாழ்த்துத் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் அக்கட்சியில் இணைவாரா என்ற சந்தேகம் பலமானதாக இருந்துவருகிறது. ரஜினி மக்கள் மன்ற ரசிகர்கள் இ.ம.ம.க. வில் பெருவாரியாக இணைந்து வருவதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் முன்னர் தி.மு.க. ஆதரவாளர்களாக இருந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. ரஜினி அரசியலிலிருந்து ஒதுங்கியமையால் தங்களை ஏமாற்றி அழ வைத்துவிட்டார் என அவரது ரசிகர் எழுதிய கவிதை ஒன்று தற்போது வலைத் தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனால் இ.ம்.ம.க. வின் ஆதரவு திடீரெனப் பெருகிப் பூதாகாரமாக வளர்ந்துவருகிறதென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். அர்ஜுன்மூர்த்தி ஒரு ‘முன்னாள்’ ஆலோசகர் என்ற வகையில் அவரது கட்சி ஆரம்பம் தி.மு.கவை உடைப்பதற்காக உருவாக்கப்பட்டதா என அவர்கள் சந்தேகிக்கின்றனர்.