India

தமிழ்நாடு: பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் தமிழ்நாடு கோவில்களினருகே இருக்கும் பெரியார் சிலைகளை அகற்றுவேன் – அண்ணாமலை

“தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் கோவில்களினருகே வைக்கப்பட்டிருக்கும் பெரியார் சிலைகளை அகற்றுவேன்” என தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நவம்பர் 07 அன்று சிறீரங்கத்திலுள்ள ரங்கநாதசுவாமி கோவில் முன்றலில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசும்போது ” மக்களுக்கு எதிராக இங்கு ஒரு கட்சி இருக்குமானால் அது தி.மு.க. தான். உதாரணமாக, 1967 இல் அவர்கள் ஆட்சிக்கு வந்தபோது இதே கோவிலுக்கு வெளியில் ஒரு பதாகையை நிறுத்தியிருந்தார்கள். அதில் என்ன எழுதப்பட்டிருந்தது? “கடவுளை நம்புபவர்கள் முட்டாள்கள்; கடவுளை நம்புபவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்; கடவுளை நம்பாதீர்கள்” என அதில் எழுதப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாது தாம் எதையோ சாதித்து விட்டதைப் போல அப்பதாகையில் தமது கொடிகளையும் நாட்டியிருந்தார்கள். ஆனாலும் இதையும் மீறி இந்துக்கள் அமைதியாக வாழ்கிறார்கள். எனவே இன்று இதே சிறீரங்கம் மண்ணிலிருந்து பா.ஜ.க. உறுதியெடுத்துக் கொள்கிறது தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றிய மறு நிமிடமே கடவுளை மறுக்கும் அனைத்து பதாகைகளையிம், கொடிக்கம்பங்களையும், சிலைகளையும் நாம் அகற்றிவிடுவோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

சிறீரங்கம் கோவிலுக்கு வெளியே நாட்டப்பட்டிருக்கும் பதாகையில் பெரியாரின் படமும் அதன் கீழ் “கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் என்று ஒன்றுமே இல்லை. கடவுளைக் கண்டுபிடித்தவன் ஒரு முட்டாள். கடவுளைப் பிரபலமாக்குபவன் ஒரு மோசடிக்காரன். கடவுளைத் தொழுபவன் ஒரு காட்டுமிராண்டி ” என்ற பெரியாரின் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் சில கோவில்களிற்கு வெளியே பெரியாரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தாலும் எல்லாக் கோவில்களிலும் அவை வைக்கப்படவில்லை.

பெரியாரின் சிலைகளை அகற்றும் அதே வேளை ஆழ்வார், நாயனார், தமிழ்ப் புலவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், திருவள்ளுவர் ஆகியோரின் சிலைகளை அங்கு வைப்பதென பா.ஜ.க. முடிவெடுத்துள்ளது.