தமிழ்நாடு | பாடப்புத்தகங்களிலிருந்து சாதிப் பெயர்கள் நீக்கப்படுகிறது
உ.வே.சாமிநாத ஐயர் உ.வே.சாமிநாதர் ஆகிறார்
ஆகஸ்ட் 5 முதல், தமிழ்நாடு பாடப்புத்தக கூட்டுத்தாபனம், பாடப்புத்தகங்களில் காணப்படும் பெயர்களிலிருந்து அவரவர் சாதிகளைக் குறிக்கும் சொற்களை அகற்றத் தொடங்குகிறது.
வீதிகள், தெருக்களின் பெயர்ப் பலகைகளிலிருந்து சாதியைக் குறிக்கும் பெயர்களைஅகற்றுவதற்கான கட்டளை பல வருடங்களுக்கு முன்னர் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் தற்போது தி.மு.க. அரசு அதை நடைமுறைக்குக் கொண்டுவருகிறது.
எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, 1978 இல், திராவிடர் கழக ஸ்தாபகர் ஈ.வே.ரா. பெரியாரது 100 வருட கொண்டாட்டமொன்றில் பேசும்போது, ‘வீதிகளிலும், தெருக்களிலும் காணப்படும் சாதிப்பெயர்களை அகற்றுவேன்’ எனக் கூறியிருந்ததோடு பின்னர் அதற்கான கட்டளையையும் பிறப்பித்திருந்தார்.
தற்போது பாடப்புத்தகங்களிலிருந்து சாதிப் பெயர்களை நீக்க தி.மு.க. அரசு ஆரம்பித்துள்ளது.
இக் கட்டளையின் பிரகாரம், இனிமேல் தமிழ்நாட்டு பாடப்புத்தகங்களில் உ.வே.சாமிநாதய்யர் உ.வே.சாமிநாதராகவும் அவரது ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, மாயவரம் வேதநாயகம் பிள்ளை, சி.வை.தாமோதரம்பிள்ளை, ராமலிங்கம் பிள்ளை ஆகியோரது பெயர்கள் ‘பிள்ளை’ அகற்றிய பெயர்களாகவும் குறிக்கப்படுவார்கள்.
ஆனால் தீட்ஷிதர், தேசிகர் ஆகிய பெயர்கள் மீது, பாடப்புத்தக கூட்டுத்தாபனம் தற்போதைக்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதாக இல்லை எனவும் அறியப்படுகிறது.