India

தமிழ்நாடு: பயணப் பத்திர விண்ணப்பத்திற்காக முருகன், றொபேர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகியோர் இலங்கை உதவி தூதுவராலயத்தில் விண்ணப்பம்

ரஜீவ் காந்தி கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் எனச் சிறைத்தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட இலங்கையர்களான முருகன் (சிறீஹரன்), றொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோரை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முதல் படியாக இவர்கள் மூவரும் இன்று சென்னையிலுள்ள இலங்கை உதவி உயர் ஸ்தானிகராலயத்திற்கு செல்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் வழிவகைகளைச் செய்துள்ளது என அறியப்படுகிறது. இது குறித்த அறிக்கையை நேற்று (செவ்வாய்), திருச்சி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ளார். இம்மூவரும் இலங்கையர்களாகையால் அவர்கள் இலங்கைக்குச் செல்வதற்கான பயணப் பத்திரங்களுக்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்காகவே இவ்வொழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

திருச்சியிலுள்ள வெளிநாட்டார் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இம்மூவரின் சார்பில் மார்ச் 11 அன்று திருச்சி கலெக்டர் இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு இவர்களின் விண்ணப்பங்கள் குறித்து கோரிக்கை விடுத்திருந்தமையை அடுத்து அன்றே அதற்கான பதில் கிடைத்திருந்தது.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நான்காவது குற்றவாளியும், முருகனின் மனைவியுமான நளினி, அவரது கணவனுக்கு அகில நாட்டு பயணப் பத்திரமொன்றை வழங்கும்படியும் இதனால் முருகன், இலண்டனில் வாழும் அவர்களது மகளிடம் செல்ல முடியுமெனவும் கோரித் தனது வழக்கறிஞர்களான எஸ். துரைசாமி மற்றும் வி.இளங்கோவன் ஆகியோர் மூலமாக பிறிதொரு மனுவொன்றையும் சமர்ப்பித்திருந்தார். நளினி ஒரு இந்திய நாட்டவர் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. முருகனின் பெற்றோரால் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரது மகள் தற்போது பிரித்தானியாவில் வசித்து வருகிறார். துணைத்தூதுவராலயத்தில் விண்ணப்பிப்பதன்மூலம் அகில நாட்டுப் பயணப்பத்திரத்தை அவர்களால் பெற முடியுமென நம்பப்படுகிறது.

தூதுவராலய சந்திப்புக்கான விண்ணப்பத்தை நளினி, முருகன் தம்பதிகளே மேற்கொண்டிருந்தாலும் றொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் சார்பில் கலெக்டர் தானாகவே முன்வந்து அவர்களும் பயணப் பத்திரங்களைப் பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் எனத் தெரிய வருகிறது. இதன் மூலம் அவர்கள் இருவரும் இலங்கைக்குத் திரும்ப முடியும்.

இலங்கைக்குத் திரும்புவதற்கான பயணப் பத்திரத்துக்கான விண்ணப்பத்தைப் பெறுவதற்கு முயன்ற நிலையில் சாந்தன் எனப்படும் சுதேந்திரராஜா சமீபத்தில் மரணமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஏனையோரின் விண்ணப்பங்கள் துரிதப்படுத்தப்படுவதாக நம்பப்படுகிறது. (மூலம்:தி ஹிந்து)