CultureIndia

தமிழ்நாடு: ‘பட்டினப் பிரவேசத்துக்கு’ தமிழக அரசு தடை!

தடையை மீளப்பெறும்படி அ.இ.அ.தி.மு.க., பாஜ,க. கோரிக்கை

தமிழ்நாட்டில் இந்து மடத் தலைவர்களை அவர்களது பக்தர்கள் பல்லக்கில் வைத்துச் சுமக்கும் சடங்குகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிரது. ‘பட்டினப் பிரவேசம்’ என அழைக்கப்படும் இச் சடங்கு மனித உரிமைகளை மீறுகிறது எனக்கூறி அதற்கு எதிராகப் பகுத்தறிவுவாதிகளும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்கள்.

சமீபத்தில் மயிலாடுதுறை ஆதீனத்தால் மேற்கொள்ளப்படவிருந்த இப்படியொரு நிகழ்ச்சிக்கு, அது மனித உரிமைகளைப் பாதிக்கும் ஒரு செயாலாகையால் சட்டம், ஒழுங்குகளைப் பாதிக்கலாமெனக்கூறி, மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்திருந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இதில் பல்லக்கு காவுபவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுப் பணியிலீடுபடுபவர்கள் என்ற வகைக்குள் அடங்கும் எனக்கூறி மாவட்ட நிர்வாகம், ஏப்ரல் 27 அன்று, இத் தடையை அறிவித்திருந்தது.

பட்டினப் பிரவேசம் நடந்தேயாகும், அதை எவராலும் தடுத்துவிட முடியாது. இந்து மதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் ஆளும் கட்சியின் எந்தவொரு சட்டமன்ற உறுப்பினரோ, அமைச்சரோ தெருவில் நடமாட முடியாது என இப்போது எச்சரிக்கிறேன்!

மன்னார்குடி ஜீயர்

எதிர்வரும் மே 22 அன்று, தர்மபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சர்ய சுவாமிகள் பட்டினப் பிரவேசமொன்றை மேற்கொள்வதற்கான தயாரிப்புகளை மேற்கொண்டிருந்தபோது இத் தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. தர்மபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்தை ஆதரித்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மதுரை ஆதீனம் “மதச்சார்பற்ற நாடென்று கூறிக்கொள்ளும் இங்கு ஒரு மதத்துக்கு மட்டும் இப்படியான கட்டுப்பாடுகளை விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” எனக் கூறியுள்ளார்.

“பட்டினப் பிரவேசம் 500 வருட கால வரலாற்றைக் கொண்டது. பிரித்தானியர்களால் கூட இந்து மதத்தை அழித்துவிட முடியவில்லை. இவர்களால் மட்டும் என்ன செய்துவிட முடியும்? கடவுள் இதையெல்லாம் பார்த்துக்கொள்வார்” என அவர் மேலும் தெரிவித்தார். இப் பட்டினப் பிரவேசம் நடைபெறுவதற்காகத் தனது உயிரைக் கொடுக்கவும் தயாராக இருப்பதாகவும், வேண்டுமானால் இப் பல்லக்கைத் தானே சுமக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு இத்தடையை நீக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதே வேளை தஞ்சாவூர் காளைமேடு கிராமத்தில் நடைபெற்ற கோவில் தேர்த்திருவிழாவின்போது ஏற்பட்ட மின்சார விபத்தில் 11 பேர் இறந்திருந்தார்கள். இக்கிராமத்துக்கு மதுரை மற்றும் மனார்குடி ஜீயர் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.

பட்டினப் பிரவேசத் தடை பற்றிக் கருத்துத் தெரிவித்த மன்னார்குடி ஜீயர் “ஆதீனத்துக்கு சொந்தமான கோவில்களில் பக்தர்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் அதை எந்த அரசாங்கத்தினாலுமோ அல்லது அமைப்புக்களினாலுமோ தடை செய்துவிட முடியாது. நான் இதுபற்றிப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள்ள்க அமைச்சர் அமித் ஷாவுக்கும் கடிதம் எழுதப் போகிறேன். பட்டினப் பிரவேசம் நடந்தேயாகும், அதை எவராலும் தடுத்துவிட முடியாது.. நான் இப்போது எச்சரிக்கிறேன். இந்து மதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் ஆளும் கட்சியின் எந்தவொரு எம்.எல்.ஏயோ, அமைச்சரோ தெருவில் நடமாட முடியாது ” என எச்சரித்துள்ளார்.

ஏப்ரல் 27 அன்று தமிழ்நாடு முதலமைச்சரைப் பல ஆதீனகர்த்தாக்கள் சந்தித்ததைத் தொடர்ந்து “தமிழ்நாடு அரசு ஆன்மீகத்தை அனுசரிப்பது” என்ற தொனியில் தர்மபுரம் ஆதீனம் வாழ்த்தியிருந்தமை குறிப்பிடத் தக்கது.

இத் தடை குறித்து தி.மு.க. ஆட்சியாளர் மத்தியிலும் முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இந்து மத மற்றும் அறங்காவல் விவகார அமைச்சர் பி.சேகர் பாபு, மே 22 இற்கு முன்னர் இவ்விடயம் சமரசமாகத் தீர்க்கப்படும் என அறிவித்திருக்கிறார். இதே வேளை, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் கே.செல்வபெருந்தகை “சங்கராச்சாரிய சுவாமிகளை தந்தை பெரியார் ‘பல்லக்கில் செல்வதைத் தவிர்க்கும்படி’ கேட்டுக்கொண்டதற்கு இணங்க சுவாமிகள் நடந்தே சென்றார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.