தமிழ்நாடு | ‘நீட்’ தேர்வு மாணவர்களுக்கு அச்சுறுத்தல் தருவது – நடிகர் சூர்யா

இந்தியா போன்ற பல் மொழி, பல் கலாச்சார நாட்டில் கல்விப் போதனைக்கான திட்டமிடல் மாநிலங்களின் பொறுப்பாக இருக்க வேண்டும். இது குறித்து அனைத்து மாநிலங்களின் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட முன்வரவேண்டும்

நடிகர் சூர்யா

“இந்தியா போன்ற பல் மொழி, பல் கலாச்சார நாடுகளில் மாணவர்களின் கல்வி போதனை பற்றிய விடயங்களைத் தீர்மானிக்கும் பொறுப்பை மாநிலங்களிடம் விட்டு விடுவதே சாலச் சிறந்தது” என மருத்துவக் கல்விக்கான தேசிய புகுமுகத் தகமைத் தேர்வுப் பரீட்சை (National Eligibility Entrance Test (NEET)) தொடர்பாக, ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தின்போது தமிழக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டின் அரச பள்ளிகளில் கல்வி பயிலும் பெரும்பான்மையான ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் எதிர்காலத்தை அது சீரழிக்கிறது. மானவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இத் தேர்வு முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்” என சனியன்று (19), அவரது அறக்கட்டளையான ‘அகரம்’ சார்பில் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் சூர்யா தெரிவித்துள்ளார்.

‘நீட்’ தேர்வு முறையை மறுபரிசீலனை செய்ய தமிழ்நாடு அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து சூர்யா மேற்படி அறிக்கையை வெளியிட்டுள்ளார். இவ் விடயம் பற்றி ஆராய தமிழ்நாடு அரசு ஒரு குழுவொன்றை ஆரம்பித்துள்ளது எனவும் அதற்கு ‘அகரம்’ அறக்கட்டளை சார்பில் தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ளதாகவும் அக்கறையுடையோர் அனைவரும் ஜூன் 23 இற்கு முன்னர் தமது கருத்துக்களைத் தெரிவிக்கும்படியும் அவர் பொதுமக்களைக் கேட்டிருக்கிறார்.

“இந்தியா போன்ற பல் மொழி, பல் கலாச்சார நாட்டில் கல்விப் போதனைக்கான திட்டமிடல் மாநிலங்களின் பொறுப்பாக இருக்க வேண்டும். இது குறித்து அனைத்து மாநிலங்களின் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட முன்வரவேண்டும்” என சூர்யா கேட்டிருக்கிறார்.

‘அகரம்’ அறக்கட்டளை என்னும் தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகரான நடிகர் சூர்யா, ஒடுக்கப்பட்ட சமூகங்களிலுள்ள மாணவர்களின் கல்வித் தேவைக்கான பல உதவிகளையும் புரிந்து வருவதோடு, தேசிய கல்விக் கொள்கை தொடர்பாகத் தனது கருத்துக்களைப் பகிரங்கமாகத் தெரிவித்தும் வருகிறார். ஒதுக்கப்பட்ட சமூகங்களிலுள்ள மாணவர்களின் கல்வித் தரத்துக்கும், செல்வந்த பின்னணியைக் கொண்ட மாணவர்களின் கல்வித் தரத்துக்கும் பாரிய வேறுபாடுண்டு. 12 வருட கல்விக்குப் பின்னர் அவர்கள் எல்லோரும் ஒரே தேசிய ரீதியிலான புகுமுகத் தேர்வுப் பரீட்சைக்குத் தோற்றும்படி நிர்ப்பந்திக்கும்போது பெரும்பாலான மாணவர்கள் கல்வியில் ஆர்வத்தை இழந்து விடுகிறார்கள். ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து தாங்களும் டாக்டர்களா ஆகவேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மாணவர்களது எதிர்காலம் நிரந்தரமாகப் பாழாக்கப்படுகிறது. இது சமூகங்களுக்கு வழங்கப்படும் நீதி என்று கூற முடியாது என அவர் தனது அறிக்கையில் தெஹ்ரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி புகுமுகத் தேர்வுக்கான பரீட்சை பற்றி ஆராய, தமிழ்நாடு அரசு, ஜூன் 5 அன்று, நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவொன்றை நியமித்துள்ளது. பொதுமக்களும் இது குறித்த தமது கருத்துக்களை இக் குழுவுக்கு அறிவிக்கலாம். அதற்கான மின்னஞ்சல்: neetimpact2021@gmail.com.