தமிழ்நாடு | நீட் தேர்வு காரணமாக ஐந்து பேர் தற்கொலை!
பரீட்சையை நிறுத்திவிடுமாறு எதிர்க்கட்சி கோரிக்கை
செப்டம்பர் 13, 2020: மருத்துவ அல்லது பல் வைத்தியக் கல்விகளைக் கற்க விரும்புவர்களுக்கான இந்திய தேசிய தேர்வுப் பரீட்சை (National Entrance cum Eligibility Test (NEET)) (நீட் தேர்வு), இன்று (செப்டெம்பர் 13) ஆரம்பமாகிறது. ஆனால் இப் பரீட்சைக்குத் தோற்றுபவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகித் தற்கொலை செய்துகொள்வதும் பொது நிகழ்வாக இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் சனிக்கிழமை ( செப்.12) மட்டும் நான்கு பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த மாதத்தில் மொத்தம் 5 பேர் தற்கொலை செய்துள்ளார்கள். மதுரையைச் சேர்ந்த 19 வயதுடைய ஜோதி சிறிதுர்க்கா, தர்மபுரியைச் சேர்ந்த எம்.ஆதித்யா மற்றும் நாமக்கலைச் சேர்ந்த 21 வயது மோதிலால் ஆகியோரது தற்கொலைகள் இஅற்றில் சில. ஆதித்யா சென்ற வருடம் இப் பரீட்சையில் தோற்றியிருந்தாலும் அதில் சித்தி பெற முடியவில்லை. அப்போதிருந்தே இந்த வருடத்துக்காகத் தயார் செய்துகொண்டு வந்துள்ளார். அவரது பெற்றோர், சேலத்தில் பரீட்சை நடைபெறும் இடத்தைப் பார்வையிடச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது ஆதித்யா தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது.
நீட் பரீட்சை காரணமாக வருடா வருடம் பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்த வருடம் தேர்வுக்கு முன்னரே தமிழ்நாட்டில் 5 பேர் தற்கொலை செய்துகொண்டது மக்களிடமிருந்து இத் தேர்வுப் பரீட்சைக்கு எதிராகப் பலத்த எதிர்ப்பை உருவாக்கி வருகிறது. பா.ஜ.கட்சியைத் தவிர்ந்த பல கட்சிகள் இத் தேர்வுப் பரீட்சையை நிறுத்திவிடுமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றன.
ஜோதி சிறிதுர்க்கா, தனது தற்கொலைக்கு முன்னர் ஒரு காணொளியைப் பதிவுசெய்திருக்கிறார். அதில் அவரது இறுதி வார்த்தைகள் ” என்னை மன்னித்து விடுங்கள். நான் மிகவும் களைத்துப் போய்விட்டேன்”. ஜோதியும் சென்ற தடவை இப் பரீட்சைக்குத் தோற்றித் தோல்வியடைந்திருந்தார். பெற்றோரை ஏமாற்றி விடுவேநோ என்ற பயம் அவரைத் தற்கொலைக்குத் தள்ளியிருக்கிறது எனப்படுகிறது.
சில நாட்களுக்கு முன் அரியலூரைச் சேர்ந்த 19 வயது விக்னேஷ் இப் பரீட்சை காரணமாகத் தற்கொலை செய்திருந்தார். இவர் இரண்டு தடவைகள் இப் பரீட்சையில் தோல்வி கண்டிருந்தார். ஆகஸ்ட் முற்பகுதியில் கோயம்புத்தூரைச் சேர்ந்த சுபசிறீயின் தற்கொலையும் இவ்வகையானதே.
தமிழ்நாட்டில் இந்த வருடம் 117,990 பேர் இப் பரீட்சையை எழுதுகிறார்கள். முன்னைய வருடத்தோடு ஒப்பிடுகையில் இது 12.4% குறைவு. பரீட்சைக்குத் தோற்றுபவர்களின் எண்ணிக்கை, நாடு தழுவிய ரீதியில் இந்த வருடம் 5% குறைந்துள்ளது.
தி.மு.க ஆட்சியமைத்தால் நீட் தேர்வை நிறுத்திவிடுவோம் என அதன் தலைவர் எம்.கே.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரியலூரைச் சேர்ந்த அனித்தா என்பவர் 2017 ம் ஆண்டு , நீட் தேர்வு கரணமாகத் தற்கொலை செய்த முதலாவது மாணவியாவார். இத் தற்கொலையைத் தொடர்ந்து இத் தேர்வை நிறுத்திவிடுமாறு எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கேட்டு வருகின்றன.
மூந்று மணித்தியாலங்கள் நடக்கும் இப் பரீட்சையில் 180 கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். இதில் பெளதீகவியலிலும் (Physics), இரசாயனவியலிலும் (Chemistry) தலா 45 கேள்விகளும், உயிரியலில் (Biology) 90 கேள்விகளும் அடங்கும். மொத்தம், அதி உச்சம் 720 புள்ளிகள் வழங்கப்படும்.
ஆரம்பத்தில் இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டும் இப்பரீட்சையை எழுதக்கூடியதாக இருந்தது. 2017 இற்குப் பின்னர், தமிழ், தெலுங்கு, மராத்தி, வங்காளி, அசாமிய, குஜராத்தி, கன்னட மற்றும் ஒடிய மொழிகளில் எழுத வழி செய்யப்பட்டிருக்கிறது. தேசிய ரீதியில், சுமார் 66,000 MBBS, BDS கல்வியைப் பெறுவதற்கான நுழைவு அனுமதிக்காக இத் தேர்வு நடத்தப்படுகிறது. இத் தேர்வை, 2018 இல் 80% மானோர் ஆங்கிலத்திலும், 11% மானோர் இந்தியிலும், 4.31% மானோர் குஜராத்தியிலும், 3% மானோர் வங்காளத்திலும், 1.86% தமிழிலும் எழுதியிருந்தார்கள்.
இந்திய தேசிய பரீட்சை வாரியம் (National Testing Agency) இத் தேர்வை நடத்துகிறது.