EntertainmentIndia

தமிழ்நாடு: நடிகர் விஜய் அடுத்த முதலமைச்சர்?

தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய் அரசியலில் குதிக்கவுள்ளார் என அவரது சில சமீபத்திய நகர்வுகள் சந்தேகம் கொள்ள வைக்கின்றன. கடந்த சனியன்று சென்னை ஆர்.கே. மாநாட்டு மண்டபத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட மாணவர் விருது விழாவில் விஜய்யின் பேச்சு இச்சந்தேகத்தை வலுக்க வைத்திருக்கிறது.

இந்நிகழ்வின்போது தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் 10 ஆம், 12ஆம் வகுப்புக்களில் உச்ச மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு ரூ 5,000 பணமும் சான்றிதழும் விஜ்ய்யினால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர் விஜய் சில அரசியல் கட்சிகள் மாணவர்களை எதிர்கால வாக்காளர்கள் என விழித்துப் பேசுவது தனக்கு மகிழ்வைத் தரவில்லை எனவும் மாணவர்கள் அம்பேத்கார், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி அதிகம் வாசிக்கவேண்டுமெனவும் பேசியிருந்தது அவரது ரசிகர்களிடையேயும் தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களிடையேயும் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த சந்தேகங்களைப் பலப்படுத்தியிருக்கிறது.

“நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். எதிர்காலத் தலைவர்களை நீங்களே தெரிவுசெய்யப்போகிறீர்கள். வாக்குகளுக்குப் பணம் பெறுவதன்மூலம் நாங்களே எமது கண்களைக் குத்திக்கொள்கிறோம். ஒன்றரை இலட்சம் வாக்காளர்கள் இருக்கும் ஒரு தொகுதியில் ஒரு அரசியல்வாதி ஆளுக்கு ஆயிரம் ரூபாக்களை கொடுப்பதைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள்? ஏறத்தாள 15 கோடி ரூபாவை அவர் கொடுத்திருப்பார். ஒருவர் 15 கோடியை இலஞ்சமாகக் கொடுக்கிறாரென்றால் அவர் அதற்கு முதல் எத்தனை கோடிகளை உழைத்திருப்பார்? இதுவெல்லாம் எமது கல்வியில் சேர்க்கப்படவேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன். வாக்குகளுக்காகப் பணம் பெறவேண்டாமென நீங்கள் உங்கள் பெற்றோர்களுக்குக் கூறும்போதுதான் மாற்றம் ஏற்படும்.” என நடிகர் விஜய் இந்நிகழ்வில் பேசியிருந்தார்.

தனது அரசியற் பிரவேசத்துக்கான களப் பரீட்சையை விஜய் ஏற்கெனவே செய்து வெற்றியும் பெற்றிருந்தார். 2021 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் 169 இடங்களில் போட்டியிட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் 115 ஆசனங்களைப் பெற்றிருந்தது. 2022 இல் நடைபெற்ற நகரசபைத் தேர்தல்களிலும் கணிசமான வெற்றியை இயக்கம் பெற்றிருந்தது.

தற்போது த.வி.ம.இ. தலைவர்களும் தொண்டர்களும் மாநில ரீதியாக குழுக்களை ஒழுங்கு செய்துவருவதுடன் அரசியல் தந்திரோபாயங்களை விஜய் இயக்கத் தலைவர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் அறியப்படுகிறது. தெருவாழ் மனிதர்களுக்கு உணவு வழங்கல் மற்றும் கிராமிய ரீதியில் மக்களிடையே நல்லிணக்க சந்திப்புக்களை மேற்கொள்ளல் போன்ற வேலைத்திட்டங்களில் இயக்க உறுப்பினர்கள் ஏற்கெனவே பணியாற்றி வருகிறார்கள்.

நிகழ்வுக்கு மாணவர்களை அழைத்துவருவது முதல் அவர்களுக்குத் தங்கு வசதி செய்வதுவரை மிகவும் ஆடம்பரமான முறையில் ஒழுங்குகளை இயக்க உறுப்பினர்கள் செய்திருந்ததாகவும் இம்மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் விஜய் அரசியலுக்கு வருவதோடு அவர் முதலமைச்சராக வருவதைத் தாம் விரும்புவதாகவும் தெரிவித்தனர் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சமூக ஊடகங்களில் விஜய் ரசிகர்கள் பலர் அவரது அரசியல் பிரவேசம் உறுதி என்பதுபோல எழுதியும் வருகின்றனர்.