தமிழ்நாடு: தண்டோரா மூலம் பொது அறிவித்தல் விடுப்பது நிறுத்தப்படும்

அது சாதி ஒடுக்குமுறையின் அடையாளமென சமூக செயற்பாட்டாளர் எதிர்ப்பு

பலநூறு வருடங்களாகத் தமிழகத்தில் பழக்கத்தில் இருந்துவந்த தண்டோரா எனப்படும் ஒருவித பறையறிவிப்பு முறையை முற்றாகத் தடைசெய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அது ஒரு தரக்குறைவான செயல் என்பதோடு சாதி ஒடுக்குமுறையின் அடையாளம் எனவும் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்த எதிர்ப்பைத் தொடர்ந்து தமிழக அரசு இம்முடிவை எடுத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு எங்கும் அறிவிக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழ்நாடு முதன்மைச் செயலாளார் வீ. இறை அன்பு கட்டளையிட்டுள்ளார். பெரும்பாலான கிராமங்களில் அரசாங்கம் செய்திகளை அறிவிக்கும்போது அக்கிராமங்களின் தலைவர்கள் விசேடமான பறையடிப்பவர்களைக் கொண்டு பறைச் சத்தம் எழுப்புவது தொன்று தொட்டு வரும் பழக்கமாக இருந்துவந்தது.

சமூக செயற்பாட்டாளர் ஷாலின் மரியா லோறென்ஸின் தகவல்படி, தமிழ்நாட்டில் பறையர் சமூகமே இத் தண்டோரா போடும் தொழிலைச் செய்பவர்கள் எனவும் இத் தரங்கெட்ட செயல் சாதியோடு இணைத்துப் பார்க்கப்படும் ஒன்று எனவும் கருதுவதால் இத் தொழிலை முற்றாக ஒழித்துவிடவேண்டுமென்று பல சமூக செயற்பாட்டாளர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தனர்.

சமூக செயற்பாட்டாளர்களின் எதிர்ப்புக் காரணமாகவும், தகவற் பரிமாற்றத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்ததால் வாகனங்களில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கிகள் மூலம் செய்திகளை அறிவிக்கமுடியுமென்பதால் தண்டோரா பழக்கத்தைக் கைவிடுவதற்கு தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக வீ இறை அனபு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் காவேரி ஆற்றினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தண்டோரா போட்டே அறிவித்திருந்தார்கள் எனவும் பல முற்போக்குத் திட்டங்களை நடைமுறைப்படுத்திவரும் முதல்வர் இந் நடைமுறையையும் தடைசெய்யவேண்டுமெனத் தான் கேட்டுக்கொள்வதாகவும் ஆகஸ்ட் 1 அன்று விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகுமார் அவர்கள் தனது ருவிட்டர் மூலம் முதல்வரைக் கேட்டிருந்தார். தண்டோரா போட்டு செய்தி அறிவிக்கும் பழக்கம் பிரித்தானியரால் அறிமுகப்படுத்தப்பட்டது எனவும் நாடு சுதந்திரமடைந்தும் அப் பழக்கம் கைவிடப்படவில்லை எனவும் ரவிக்குமார் தெரிவித்திருந்தார்.